அமெரிக்காவைச் சேர்ந்த பங்கு வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச் சந்தைகளில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்துள்ளது. டெரிவேட்டிவ்ஸ் பகுதியில், குறிப்பாக பேங்க் நிப்டி மற்றும் நிப்டி குறியீட்டில் (இண்டெக்ஸ்) மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கு இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.
முக்கிய குற்றச்சாட்டுகள்: குறியீட்டு விலையை ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் செயற்கையாக மாற்றும் வகையில் பெரிய அளவில் பேங்க் நிப்டி கன்ஸ்டிடியூன்ட் பங்கை ரொக்கம் மற்றும் பியூச்சர்ஸ் சந்தைகளில் வாங்கி, அதே நேரத்தில் இண்டெக்ஸ் ஆப்ஷனில் பெரிய ஷாட் பொசிஷன் எடுத்து லாபம் பார்த்தது. டெரிவேட்டிவ்ஸ் வர்த்தகம் மூலம் இந்நிறுவனத்துக்கு ரூ.4,843 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக லாபம் கிடைத்ததாக செபி கூறுகிறது. இந்த பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம், ஜேஎஸ்ஐ இன்வெஸ்ட் மென்ட்ஸ் என்ற இந்திய நிறுவனம் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கட்டுப்பாடுகளை மீறி தினசரி வர்த்தக ரொக்க சந்தையில் வர்த்தகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை 2025-ல் வழங்கிய எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்நிறுவனம் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்தது.
செபியின் நடவடிக்கைகள்
* ஜேன் ஸ்ட்ரீ்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
* ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் ரூ.4,800 கோடி இந்திய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
* இந்த விசாரணை மற்ற இண்டைசஸ் மற்றும் பங்குச் சந்தைகளையும் உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது. இது பெரிய அளவிலான வர்த்தகம், சில்லறை முதலீட்டாளர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தி உள்ளதா என்பதை கவனிக்கிறது.
ஜேன் ஸ்ட்ரீட் விளக்கம்: தங்களது செயல் சட்டப்படியானதுதான் என்றும், செபியின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் ஜேன் ஸ்ட்ரீட் கூறுகிறது. இந்த தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஜேன் ஸ்ட்ரீட் கூறுகிறது.
பரபரப்பான சூழ்நிலை: உலகின் மிகப்பெரிய டெரி வேட்டிவ்ஸ் சந்தையாக இந்தியா வளர்ந்துள்ளது. இதில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு அதிகரித்துள்ளது. இதனால் லிக்விடிட்டி மற்றும் வோலடிலிட்டி ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளது; இதுவே ஜேன் ஸ்ட்ரீட் போன்ற சர்வதேச வர்த்தக நிறுவனங்களை ஈர்க்கிறது.
இந்த வழக்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் நவீன வர்த்தக உத்தியை கண்காணிக்கவும், சந்தை நேர்மையை பாதுகாக்கவும் உள்ள சவால்களை வெளிப்படுத்துகிறது.
தாக்கங்கள்: ஜேன் ஸ்ட்ரீட் மீதான இந்த நடவடிக்கை இந்தியாவில் ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது அந்த நிறுவனத்தின் இந்திய சந்தை செயல்பாடு மற்றும் இமேஜை பாதிக்கிறது.
இந்த சம்பவம், சில்லறை முதலீட்டாளர்களை பாதுகாக்கவும், சந்தையில் நேர்மை, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. பியூச்சர் அண்ட் ஆப்ஷன்ஸ் சில்லறை முதலீட்டாளர்களின் நஷ்டத்துக்கும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்ற கேள்வி எழுகிறது.
2024-25 ஆய்வின் முக்கிய முடிவுகள்
* செபியின் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் பிரிவு (EDS) ஆய்வில், 2025 நிதியாண்டில் 91% சில்லறை முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
* 2025 நிதியாண்டில் நிகர நஷ்டம் ரூ.1.06 லட்சம் கோடி ஆகும். இது, 2024 நிதியாண்டின் ரூ.74,812 கோடியைவிட 41% அதிகம். ஒரு வர்த்தகருக்கு சராசரி நஷ்டம் ரூ.1.1 லட்சம் (முந்தைய ஆண்டு ரூ.86,728).
91% வர்த்தகர்களுக்கு நஷ்டம் ஏன்?
* அதிக தரகு, வரி, கட்டணங்கள் லாபத்தைக் குறைக்கிறது.
* குறுகிய கால பந்தயம், டெரிவேட்டிவ்களை புரிந்துகொள்ளாமை, இடர் மேலாண்மை இல்லாமை.
* அதிக நம்பிக்கை, ஒழுக்கம் இல்லாமை, விரைவாக லாபம் ஈட்டும் ஆசை.
* சில்லறை வர்த்தகர்களைவிட நிறுவன முதலீட்டாளர்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது.
* ஜேன் ஸ்ட்ரீட் பேங்க் நிப்டி ஆப்ஷனில் சந்தையை ஏமாற்றி, 2023 முதல் 2025 வரையில் ரூ.36,500 கோடிக்கு மேல் லாபம் பார்த்ததாக செபி கூறுகிறது.
இரண்டுக்கும் உள்ள தொடர்பு: ஜேன் ஸ்ட்ரீடின் தீவிரமான, அல்காரிதம் அடிப்படையில் குறியீட்டு விலையை திரித்தது. இதனால் சில்லறை வர்த்தகர்கள் தவறான எப் அண்ட் ஓ நிலைகள் எடுத்தனர், ஜேன் ஸ்ட்ரீட் லாபம் பார்த்தது. ஜேன் ஸ்ட்ரீட் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு கிடைத்த லாபம், சில்லறை வர்த்தகர்களின் மொத்த இழப்புகளை பிரதிபலிக்கிறது.
நிறுவன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் லாபம், மற்ற சந்தை பங்கேற்பாளர்களின் மொத்த இழப்புகளுக்கு சமம் என செபி கூறுகிறது. நுட்பமான பங்கேற்பாளர்கள் விலை கண்டறிதலில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் சில்லறை முதலீட்டாளர்களை சுரண்டுவதற்கும் சக்தி பெற்றிருக்கின்றனர். ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் இருந்தாலும், பலவீனங்கள் இன்னும் உள்ளன.
முக்கியக் கருத்துகள்: தரம் குறைந்த உத்தி மட்டும் இல்லாமல், ஆதிக்கம் செலுத்தும், தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய நிறுவனங்களின் சந்தை தாக்கமும் சில்லறை எப் அண்ட் ஓ வர்த்தகருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட காரணமாக உள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் சம்பவம் ஒழுங்குமுறை கண்காணிப்பை அதிகரிக்க தூண்டியது. ஆனால் தொடர்ச்சியாக ஏற்படும் சில்லறை இழப்புகளை குறைக்கும் பொருட்டு, சூழ்ச்சி திறன் நடைமுறைகளை கட்டுப்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் முதலீட்டாளர் விழிப்புணர்வை வலுப்படுத்தவும் வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் லிக்விடிட்டி வழங்கினாலும், அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால், சந்தை நேர்மையை பாதிக்க முடியும், செபியின் சில்லறை எப் அண்ட் ஓ நஷ்டம் பற்றிய விவரம் மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் விவகாரம் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிறுவன வர்த்தகர்களின் ஆதிக்கம் உள்ள சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு உள்ள அபாயங்களையும், இந்திய டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் நேர்மை மற்றும் நியாயத்தை பாதுகாக்க ஒழங்குமுறை கண்காணிப்பு அவசியம் என்பதையும் இந்த இரண்டும் வெளிப்படுத்துகின்றன.
- sunilsubramaniam27@gmail.com