உலோகங்கள் மனித வாழ்க்கையின் முன்னேற்றத்தில், நாகரீகத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பவை. தங்கம், வெள்ளி மட்டுமல்ல. அவை போல 98 வகை உலோகங்களைக் கண்டறித்து, பூமியிலிருந்து வெட்டி எடுத்து, பிரித்துப் பயன்படுத்தும் மனித இனம் முதலில் கண்டுபிடித்தது செம்பை. சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே. சில பல நூற்றாண்டுகளுக்குப் பின், செம்புடன் தகரம் என்ற டின் சேர்த்து, வெண்கலம் உருவாக்கப்பட்டது. அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது.
மனித பயன்பாட்டுக்கு அவசியமானதாகவே இருந்தாலும், உப்பு போல மிக எளிதாகவும் அதிகமாகவும் கிடைக்கும் சிலவற்றுக்கு உயர் விலை இருக்காது. அதிக பயன் இல்லாவிட்டாலும், வைரம் போல அதிக அளவில் கிடைக்காத சிலவற்றுக்கு மிக அதிக விலைகள் இருக்கும். ஆனால், பயன் மிகஅதிகம், கிடைப்பது குறைவு என்றால் அவற்றுக்கான விலை குறித்து கேட்கவா வேண்டும்? ரோடியம், யுரேனியம், லித்தியம், பிளாட்டினம், டேன்டாளம், நியோடைமியம் போன்ற அரிதாக கிடைக்கிற உலோகங்கள் அவற்றின் தேவை காரணமாக விலை உயர்ந்து கொண்டே போகின்றன.
அரிய வகை மண் - ‘ரேர் எர்த்’: உலோகங்கள் போல் இருக்கும், மண்ணோடு மண்ணாக கலந்திருக்கிற வித்தியாசமான சிலவகை மண்ணை, ‘ரேர் எர்த்’ என்கிறார்கள். இந்த சில மிக அரிதான மண்கள் பல்வேறு தன்மைகளை கொண்டிருப்பதால் அவற்றை வைத்து காந்தம் போன்ற சில வித்தியாசமான பயன்தரும் பொருள்களை உருவாக்க முடிகிறது. அப்படி 17 வகை ‘ரேர் எர்த்’ அல்லது ‘ரேர் எர்த் எலிமெண்ட்ஸ்’ (REEs) உலோக தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன.
லான்தானம், சீரியம், பிராசிடோமியம், நியோடைமியம், புரோமிதியம், சமாரியம், யூரோப்பியம், கடோலினியம், டெர்பியம், டைஸ்புரோசியம், ஹோல்மியம், எர்பியம், துலியம், ஒய்டெரிபியம், லூட்டியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவையும் REE பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எதற்கு தேவை? பயன் என்ன?: செமி கண்டக்டர்கள், ரோபோட்டிக்ஸ், கிளீன்எனர்ஜி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்கள், காற்றாலைகள் எல்இடி பல்புகள் மற்றும் ரேடார்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், எப் 35 ரகவிமானங்கள் போன்ற பல பாதுகாப்புத் துறைசாதன உற்பத்திக்கும் இவை அவசியம். குறிப்
பாக பலவற்றுக்கும் காந்தம் தேவைப்படுகிறது. இவை தவிர முக்கியமாக பேட்டரிகள், தயாரிக்கவும் சில ’ரேர் எர்த்’ கள் தேவைப்படுகின்றன.
மின்சார வாகனங்கள்: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பதற்காக உலக நாடுகள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று, பெட்ரோல், டீசல் தேவைப்படாத மின்சார பேட்டரி வாகனங்கள்தான். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வகை வாகனங்களிலும் 30% மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்பது அரசின் இலக்கு.
இந்தியாவில் சுமார் 220 நிறுவனங்கள் மின்சார இருசக்கர வாகனங்கள் (இ-2 வீலர்) தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மாருதி போன்ற பெரிய நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. பேட்டரி கார்களுக்கு மோட்டார் தேவை. காந்தம் இல்லாமல் பேட்டரி கார்களை தயாரிக்க இயலாது. காந்தம், அதிகம் கிடைக்காத உலோகத்தாதுக்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படுவது.கடந்த ஏப்ரல் முதல் இந்த பேட்டரி வாகனங்களின் உற்பத்தி தடுமாறுகிறது. காரணம், சீனா இந்தியாவுக்கு செய்யும் ரேர் எர்த் பொருட்கள் ஏற்றுமதியில் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள்.
3-வது இடத்தில் இந்தியா: பேட்டரிக்கு மூலப்பொருளான, அரிதான உலோக தாதுக்கள் (ரேர் எர்த்) எல்லா நாடுகளிலும் கிடைக்கவில்லை. மிக அதிக அளவில்கிடைப்பது சீனாவில். அமெரிக்க ஜியலாஜிகல் சர்வே கணக்குப்படி, 44 மில்லியன் டன் ‘ரேர் எர்த்’ வளம் சீனாவில் இருக்கிறது. அடுத்தபடியாக பிரேசிலில், 21 மில்லியன் டன். 6.9 மில்லியன் டன்னுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 4வது, 5வது இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா உள்ளன. இவற்றில் பல்வேறு தாதுக்கள் கடற்கரை மணலில் இருக்கின்றன. உலகத்தில் இருக்கிற மொத்த கடற்கரை பகுதிகளில் 35% இந்தியாவில்தான் இருக்கிறது.
’ரேர் எர்த்’ வளம் இருந்தால் மட்டும் போதாது. காரணம், அவை மற்ற உலோகங்களைப் போலகிடைக்கும் இடங்களில் அடர்த்தியாக இருப்பதில்லை. மாறாக, மண்ணோடு மண்ணாக, குறைந்த விகிதாச்சாரங்களில் கலந்திருக்கின்றன. அதனால், அவற்றைப் பிரித்து எடுக்க, பிறகு பயன்பாட்டுக்கு ஏதுவாக மாற்ற, அதிநவீன தொழில்நுட்பம் வேண்டும். அத்துடன் அதிக அளவில் முதலீடும் வேண்டும்.
இந்த சவால்கள் தவிர, அவற்றை உடனடியாக உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்துவிட முடியாது. மருந்துகள், தடுப்பூசிகள் போல அவற்றையும் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் பயன்பாட்டுக்கு அனுமதிக்க முடியும். அதற்கு காலம் எடுக்கும்.
சீனாவின் கட்டுப்பாட்டில்: இந்த காரணங்களால் 1990-களிலேயே இதற்கான முன்னெடுப்புகளை செய்துவிட்ட சீனாதான் தற்போது உலகில் இந்த அரிய உலோக தாதுக்கள் உற்பத்தி மற்றும் விற்பனையின் ராஜா. மொத்தசந்தையின் 90% அதன் வசம். சீனா ஏற்றுமதி செய்யாமல் எந்த நாடுகளிலும் மேலே பார்த்த பல்வேறு நவீன மக்கள் பயன்பாடு மற்றும் போர் கருவிகளை உற்பத்தி செய்ய முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவின் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தார். இதற்கு மறுவினையாக கடந்த ஏப்ரல் 2025-ல், அரிய தாதுக்கள் மற்றும் காந்தம் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை அறிவித்தது. பிறகு அமெரிக்காவும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் சீனாவுடன் பேசி, அவற்றை ஓரளவு பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்கு தர மாட்டோம்: சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் கார் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முயன்றபோது அனுமதிக்காதது; கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவையை இப்போது வரை தொடங்காதது; டிக் டாக், வி சேட் போன்ற சீனாவின் பல்வேறு செயலிகளை தடை செய்திருப்பது ஆகியவற்றால் இந்தியா மீது சீனா கோபத்தில் உள்ளது. அத்துடன் எல்லைப் பிரச்சினைகளும் இருப்பதால், இந்தியா மீதான ’ரேர் எர்த்’ ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீனா இன்னும் நீக்கவில்லை. (தவிர அடுத்து, பழங்கள் காய்கறி விளைச்சலுக்குத் தேவையான சில அரிய உர ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது).
இதன் காரணமாக அவற்றை நம்பி இருக்கும் பல்வேறு பொருட்களின் உற்பத்தி தடைபட்டு இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் இந்த சிரமம் தொடரலாம் அல்லது நீங்கலாம். ஆனால், நீண்டகாலம் என்று பார்க்கிற போது, இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இந்தியா அதன் சொந்த உற்பத்தியை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் அது சீனாவுக்கு மாற்றாக அமைவதுடன், ஏற்றுமதி வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என மத்திய வணிகம் & தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
மானிய ஊக்குவிப்பு திட்டம்: சீனாவின் கட்டுப்பாடுகளால் இந்தியாவின் உற்பத்தியில் ஏற்படும் சிரமங்களை சமாளித்து, தற்சார்போடு இயங்க, National Critical Mineral Mission என்ற ஒரு முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதற்காக இந்தியன் ரேர் எர்த் (IREL) நிறுவனத்தின் சார்பில் IREL ரேர் எர்த்ஸ் மேக்னட் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
உடனடி தேவைகளுக்காக ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் சிலி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தவிர, உற்பத்தியில் சில தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது மற்றும் அவற்றுக்கு முதலீட்டு மானியங்கள், உற்பத்தி ஊக்கத் தொகை கொடுப்பது போன்றவை குறித்து அடுத்த 20 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்திருக்கிறார். மேலும் அதிக நிதி தேவைப்பட்டால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஜூலை மாதம் தொடங்கி, இந்தியாவின் அனைத்து சுரங்கங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் மேற்பரப்பு மண் மற்றும் அனைத்து கழிவுகளில் இருந்தும் ரேர் எர்த் பிரித்தெடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. காந்தம், பேட்டரிகள் இன்றி பலவும் சாத்தியமில்லை. அவற்றுக்காக சீனாவை நம்பி இருப்பது ஆபத்து. எனவே, அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேகமெடுப்பது போலவும் தெரிகிறது. பாராட்டுகள்.