இந்திய பங்குச் சந்தையில் சமீப காலமாக நிப்டி இந்தியா டிபென்ஸ் இண்டெக்ஸ் (Nifty India Defence Index) மற்றும் அதனுடன் தொடர்புடைய பங்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. 2025 பிப்ரவரியிலிருந்து இத்துறையின் சந்தை மதிப்பு 50% அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் வளர்ச்சி எதிர்பார்ப்பையும் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை பங்குகள் பல மடங்கு வருமானம் வழங்கியுள்ளன. சில பங்குகள் ஐந்து ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் பாதுகாப்புத் துறையில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உயர்வுக்கான காரணங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
குறுகிய கால வளர்ச்சிக்கு காரணம்: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இத்துறையில் நேர்மறை உணர்வு ஏற்பட்டது. அவசரமாக ரூ.40,000 கோடிமதிப்பில் டிரோன்கள், வெடிகுண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ராடார்களை வாங்க பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்தது. அவசர கொள்முதல் விதிகளின்படி, ஒப்பந்தங்களை 40 நாட்களில் முடிக்க வேண்டும்; ஓராண்டுக்குள் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டும் நன்மை பெறுகின்றன.
நீண்டகால வளர்ச்சிக்கு ஆதாரம்: மத்திய அரசு சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்தை கொண்டுவந்தது. இது உள்நாட்டு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு நவீனமயமாக்கலை முன்னிலைப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) தளர்வு வழங்கப்பட்டது. உள் நாட்டில் தயாரிப்போம் (Make in India), உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் (PLI), பாதுகாப்பு துறையில் புத்தாக்கம் (IDEX), ஜன் (SRIJAN) போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டன. 2024-25-ம் ஆண்டில், பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2,09,050 கோடி மதிப்பில் 193 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதில் 92% (ரூ.1,68,922 கோடி) உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்ததால், சில பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கண்டுபிடிப்பும் உற்பத்தியும் அதிகரித்தது. இது செலவுகளை குறைத்ததுடன், முக்கியமான ராணுவ தொழில்நுட்பங்கள் வெளிநாட்டு தடைகள் அல்லது சப்ளை சிக்கல்கள் இல்லாமல் கிடைக்க உதவியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுயசார்பு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உகரணங்கள் முக்கிய பங்கு வகித்தன.
போரில் முக்கிய பங்கு வகித்த உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
ஏற்றுமதிக்கு ஊக்கம்: ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதால், அவை நம்பகமானவை என்பதை உலகம் உணர்ந்தது. இதனால் இந்தியா புதிய ஏற்றுமதி சந்தைகளை பெறுகிறது. குறிப்பாக டிரோன்கள், வெடிகுண்டுகள், எலக்ட்ரானிக் அமைப்புகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய பாதுகாப்பு மாற்றம்: ஐரோப்பா, அமெரிக்க பாதுகாப்பு சார்பை குறைக்க புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. 2030-க்குள் €800 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உக்ரைன் போரால் ஆயுத கையிருப்பு குறைந்துள்ளதால், இந்தியாவின் பினாகா, ஏடிஏஜி, ஏர் டிஃபென்ஸ் அமைப்புகள் போன்றவை ஐரோப்பாவில் போட்டியாளராக பார்க்கப்படுகின்றன. இந்தியா-ஐரோப்பா கூட்டாண்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 2024-25-ம் ஆண்டில் இந்திய பாதுகாப்பு துறை ஏற்றுமதி ரூ.23,622 கோடி ($2.76 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 34 மடங்கு அதிகம். அரசு 2029-க்குள் ரூ.50,000 கோடி ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது.
நடுத்தர கால வளர்ச்சி முன்னோக்கு: இந்திய பாதுகாப்புத் துறை 2024-29-க்குள் ஆண்டுக்கு 20% வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது; உற்பத்தி ரூ.3 லட்சம் கோடி வரை செல்லும்.
பங்குச் சந்தை பார்வையில்..
நன்மைகள்
அபாயங்கள்
இந்திய பாதுகாப்புத் துறை வலுவான அரசு ஆதரவு, வேகமான வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாயிலாக நல்ல முதலீட்டு வாய்ப்பை அளிக்கிறது. ஆனால், உயர்ந்த பங்கு மதிப்பீடு, நிறைவேற்றல் அபாயங்கள், சந்தை நிலைமாற்றங்கள் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். நீண்டகாலம் பொறுமையாக முதலீடு செய்யும், அதிக அபாயத்தை ஏற்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது. குறுகிய காலம் அல்லது பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோர் கவனமாக இருக்க வேண்டும்.