சிட்பண்ட் என்பது ஒரு வகையான சேமிப்பு மற்றும் கடன் திட்டம். இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் ஒரு குழுவாக இணைந்து, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். ஏல அடிப்படையில் சுழற்சி முறையில் ஒவ்வொருவருக்கும் அந்தத் தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் மோசடிகள் நடைபெற்றதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததே இத்தகையை மோசடிகளுக்கு காரணம் என்கிறார் டிஎன்சி சிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன். இதுகுறித்து அவருடன் கலந்துரையாடியதிலிருந்து..
டிஎன்சி சிட்ஸ் நிறுவனத்தின் ஆரம்பகால பயணம் பற்றி கூறுங்கள்? - 1965-ம் ஆண்டு தர்மபுரியில் எனது தந்தை டி.என்.சின்னசாமியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டிஎன்சி. விவசாயத்தை நம்பியிருந்த அந்த ஊரில் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் சிறுகச்சிறுக சேமித்தால்தான் அவசர நேரத்தில் உதவும் என்ற நல்ல நோக்கில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
நம்பிக்கை நாணயத்துடன் செயல்பட்டதால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனதில் வேரூன்றி நன்மதிப்பைப் பெற்றது. எவ்வளவு தொகையாக இருந்தாலும் சீட்டு ஏலத்துக்கு வரும்போது குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை தவறாமல் கொடுத்துவிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
அதனால்தான், டிஎன்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக தர்மபுரி மக்களை விட்டு எங்கும் அகலவில்லை, அதன் பிறகு அப்பாவுடன் சேர்ந்து நானும் பயணத்தை தொடங்கியபோதுதான், சேர்த்து வைத்திருந்த நற்பெயரைக் கொண்டு முதலில் கிருஷ்ணகிரி, சேலத்தில் டிஎன்சி கிளையை தொடங்கினோம்.
அதன் பிறகு சென்னையில் முதல்முதலாக கே.கே.நகரில் கிளையை தொடங்கினோம். அதன்பிறகு டி.நகர் கிளையை டிஎன்சி நிறுவனத்தின் தலைமையகமாக மாற்றி கடந்த 15 ஆண்டுகளில் சென்னையைச் சுற்றி போரூர், பாரிஸ் கார்னர், மைலாப்பூர் என 12 கிளைகளை திறந்துவிட்டோம். நம்பிக்கையின் பெயரில் இன்று தமிழகத்தை சுற்றி 45 கிளைகள் இயங்கி வருகின்றன.
சீட்டு கம்பெனி என்றாலே மக்கள் இன்றும் பயப்படும் நிலை உள்ளதே? - விழிப்புணர்வு இல்லாத மக்கள் மோசடி சீட்டு நிறுவனங்களில் சேர்ந்து பணத்தை கட்டி ஏமாறும் அவலநிலை இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. இதனை உணர்ந்துதான் சீட்டு நடத்தும் முறை வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பதை உறுதி செய்ய சீட்டு நிதி சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டம் சீட்டு நிதி நிறுவனங்கள் எவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டும், நிர்வகிக்கப்பட வேண்டும் மற்றும் சீட்டு நடத்தும் விதிகள் ஆகியவற்றை வரையறுக்கிறது. பொதுமக்கள் பணத்தை பாதுகாக்கவும், சீட்டு மோசடிகளை தடுக்கவும் இது உதவுகிறது. சீட்டுக்களை எடுக்கும்போது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுடன் சீட்டுத் தொகையை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.
அவ்வப்போது இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, சட்டத்தை வலுப்படுத்தவும், காலத்துக்கேற்ப மாற்றியமைக்கவும் தொடர் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த சட்டத்துக்கு இணங்க முறையான ஆவணங்கள், உரிய டெபாசிட்டுடன் பதிவாளரிடம் பதிவு செய்து அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் ஏற்ப டிஎன்சி சிட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆனால் இவ்வளவு பாதுகாப்பான சட்டங்கள் இருந்தும் இன்றும் ஏராளமான மக்கள் புரிதல் இல்லாமல் பதிவு செய்யப்படாத போலி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் முதலீடு செய்து பணத்தை தொலைத்து நிற்பதுதான் வேதனையாக உள்ளது.
ஒரு நிறுவனம் ரூ.10 லட்சம் மதிப்பிலான சீட்டு நடத்துவதென்றால், சீட்டு நிதி சட்டப்படி அதே தொகைக்கு பத்திர பதிவாளரின் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். இடையில் சீட்டு தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்படும் போது அந்தப் பணம் உரியவர்களிடம் பிரித்தளிக்கப்படும்.
எனவே பதிவு செய்யப்பட்ட நிறுவனங் களில் சீட்டு கட்டி ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோன்று சீட்டு எடுத்த நபர் தொடர்ந்து தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்றாலும் நிறுவனம் சார்பில் பதிவாளரிடம் முறையிட்டு உரிய நிவாரணம் பெற முடியும். சீட்டு நிதி சட்டப்படி சீட்டு எடுத்தவரின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் உள்ளது. இந்த விதிமுறை இல்லை என்றால் சீட்டு நிறுவனங்களும் நிம்மதியாக தங்களது தொழிலை நடத்த முடியாது.
சீட்டு நடைமுறை எப்படி? - கல்வி, திருமணம், மருத்துவம் என பணத் தேவை என்பது மனிதனுக்கு எல்லா காலகட்டத்திலும் உள்ளது. சாமானிய மக்கள் இன்று வங்கிகளுக்கு சென்று கடன் பெறுவது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு மாற்றாகத்தான் டிஎன்சி போன்ற ஏலச் சீட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருவர் ரூ.1 லட்சம் சீட்டு போடுகிறார் என்றால் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 20 மாதங்கள் கட்ட வேண்டும்.
பணம் தேவைப்படுகிறது என்றால் அவர் முதல் மாதமே சீட்டு எடுத்துக்கொள்ளலாம். அதற்கான வட்டி கணக்கிடப்படும். உதாரணமாக ரூ.1 லட்சம் என்றால் ரூ.30 ஆயிரம் ரூபாய் போக மீதமுள்ள ரூ.70 ஆயிரம் அவருக்கு கிடைக்கும். அந்த 30 ஆயிரத்தில் நிறுவனத்தின் கமிஷன் போக எஞ்சிய பணம் அந்த சீட்டு குழுவில் உள்ள 20 பேருக்கும் டிவிடெண்டாக பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்த தொழிலில் உள்ள சாதனையும் சவால்களும் என்ன? - மற்ற சிட்பண்டுகளுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இதர நிறுவனங்களிடமிருந்து சீட்டு முடிந்து பணம் கைக்கு வர 2 மாதங்கள் வரை ஆகிவிடும். ஆனால், நாங்கள் 10 நாட்களில் பணத்தை கொடுத்து விடுவோம். அதற்கு தேவையான ஆவணங்களை குழுவை அமைக்கும்போதே வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று விடுவோம்.
அதுதான் டிஎன்சியின் சாதனையும் தனிச்சிறப்பும். சவால்கள் என்பது பணத்தை வசூல் செய்வதில்தான் உள்ளது. ஆனால், சரியான நேரத்தில் சீட்டு பணத்தை கொடுப்பதன் மூலம் இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ள முடியும். ஏனெனில் சீட்டு பணத்தை எடுத்தவர் உரிய பலனை அடையும்போது அவரே நேர்மையாக பணத்தை திருப்பிச் செலுத்திவிடுவார்.
இப்போது உங்களின் வாடிக்கையாளரின் பலம் என்ன? - டிஎன்சி சீட்டு நிறுவனத்தைப் பற்றி 10 லட்சம் பேர் தெரிந்து வைத்துள்ளனர். அதேநேரம் ஒரு லட்சம் பேர் எங்களது நிறுவனத்தால் நேரடியாக பயனடைந்துள்ளனர். இப்போது 35,000 வாடிக்கையாளர்களுடன் சீட்டு தொழில் நடத்தப்பட்டு வருகிறது. மாத சம்பளதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் பெரிய தொழில் தொடங்குபவருக்காக அதிகபட்சம் ரூ.5 கோடி வரை சீட்டு நடத்துகிறோம்.
இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பு என்ன? - இந்த தொழிலுக்கான நெருக்கடி என்பது 18% ஜிஎஸ்டிதான். மத்திய நிதி அமைச்சரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளோம். வங்கிகளில் டெபாசிட் செய்து பணத்தை எடுப்பதுபோலதான் சிட்பண்ட் தொழிலும். எனவே இதற்கு 18% ஜிஎஸ்டி போடும்பேது நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெளிவாக அவரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் இந்த கோரிக்கையை பரிந்துரைத்து நல்ல முடிவை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
போட்டி நிறுவனங்களை சமாளிப்பது எப்படி? - வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவை அளிக்கும்போது அவர்களே இதர வாடிக்கையாளர்களை நமக்கு தேடித் தருவார்கள். அப்படி வளர்ந்ததுதான் டிஎன்சி நிறுவனம். எங்களுக்கு கீழ் எங்களது ஊழியர்கள் உட்பட 1,000 ஏஜென்டுகள் திறமையாக செயல்பட்டு போட்டியை எதிர்கொள்ள உதவுகின்றனர்.
சிட்பண்ட் சந்தை இப்போது எப்படி உள்ளது... மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? - ரியல் எஸ்டேட் துறையைப் போன்றதுதான் இந்தத் துறையும். இதிலும் அவ்வப்போது ஏற்றம் இறக்கங்கள் இருக்கும். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி உள்ளூரில் பண்டிகைக் கால சீட்டு போன்ற ஏராளமான நிறுவனங்கள் அவ்வப்போது புற்றீசல் போல முளைத்து, திடீரென காணாமல் போய்விடுகின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பதிவு செய்யப்படாத எந்த நிறுவனத்திலும் விட்டில் பூச்சிகளாக சிக்கிக் கொள்ள கூடாது. போட்டி அதிகமாகிவிட்டது. அதிக லாபம் தரக்கூடிய தொழில் இல்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே அதிக வட்டி, டிவிடெண்ட் தருகிறோம் என்று கூறும் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஎன்சி போன்ற முறைப்படி தொழில் செய்யும் நிறுவனங்களிடம் மக்கள் ஏமாறுவதற்கு வாய்ப்பில்லை. பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் குறித்தும் சீட்டு கம்பெனியின் பாரம்பரியம் குறித்தும் மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்களுக்கு சிட்பண்ட் பற்றிய புரிதல், ஆர்வம் இல்லாமல் இருப்பது ஒரு குறை. அதனை தெரிந்து கொள்ளவும் அவர்கள் விரும்புவதில்லை. கவர்ச்சியான முதலீடுகளை தேர்வு செய்து அவர்கள் எளிதில் ஏமாந்து விடுகின்றனர். அவர்களின் கவனம் சிட்பண்டின் பக்கம் திரும்ப வேண்டும் என்பது எனது ஆசை. கிராமம், நகரம், ஓய்வூதியதாரர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சிட்பண்ட் திட்டங்கள் உள்ளன.
எதிர்கால திட்டங்கள் குறித்து... ஏற்கெனவே விரும்பிய இலக்கை அடைந்துவிட்டோம். இந்த 45 கிளைகளையும் சிறப்பாக பராமரித்து டிஎன்சி பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். ஆண்டுக்கு ஆயிரம் கோடி வர்த்தகம் என்ற நிலையே ஏற்கெனவே தொட்டுவிட்டோம். டாப் 5 நிறுவனங்களில் டிஎன்சி சிட்ஸ் இடம்பெற்றுவிட்டது.
பண விவகாரம் என்பதால் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 50 கிளைகளை தொட வேண்டும் என்பது எங்கள் கூடுதல் விருப்பம். மதுரையில் 45-வது கிளைையை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எஞ்சிய கிளைகளை தொடங்குவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
- rajanpalanikumar.a@hindutamil.co.in