அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். அவரது இந்த வரி விதிப்பு முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது இந்த நடவடிக்கை உலக வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் இதுவரை காணாத குழப்ப நிலையை உருவாக்கியது. இதையடுத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் வர்த்தக வரி தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதையடுத்து, வரி உயர்வை தற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தி வைத்தார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் வர்த்தக வரி ஒப்பந்தத்தில் கடந்த திங்கட்கிழமை கையெழுத்திட்டனர். பரஸ்பரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான வரிகளை குறைக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இது ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு சம்மதிக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் இடையே வெளியிடப்பட்டது. அங்கு, இரு தலைவர்களும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் புதிய முயற்சியை வலியுறுத்தினர்.
எனினும், இது முழுமையான வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இது முக்கியமாக மோட்டார் வாகனங்கள் மற்றும் விண்வெளி துறைகள் தொடர்பானது மட்டுமே. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் வேறு துறைகளிலும் வரும் நாட்களில் ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
ஒரு லட்சம் வாகனங்களுக்கு 10% வரி: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட நிர்வாக உத்தரவின்படி, இந்த ஒப்பந்தம் பிரிட்டனைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களுக்கு இடைக்கால வரி விகிதங்களை உறுதி செய்கிறது. ஆண்டுக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் வாகனங்களை 10% வரியுடன் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. இது மற்ற நாடுகள் சந்திக்கும் 25% வரியைவிட குறிப்பிடத்தக்க வகையில் குறைவானது.
விண்வெளி ஏற்றுமதிக்கு வரி இல்லை: மேலும், பிரிட்டனின் விமானங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உட்பட விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் மீதான வரிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன. இது, பிரிட்டனின் விமானத் துறைக்கு பெரிய ஆதரவாக அமையும்.
எஃகு மற்றும் அலுமினியம்: இந்த மாதத்தின் தொடக்கத்தில் பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை பிரிட்டன் தற்காலிகமாக தவிர்த்து இருந்தாலும், தற்போது கோட்டா அடிப்படையிலான ஒரு விலக்கு முறை ஏற்பட வழி உண்டு. அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லூட்னிக் கோட்டா அளவுகளை நிர்ணயிப்பார் என்று தெரிகிறது.
விவசாயம் மற்றும் மருந்து: விவசாயம் மற்றும் மருந்து பொருட்கள் மீதான வரிவிவரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. 13,000 மெட்ரிக் டன் அமெரிக்க மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது. இது பிரிட்டனின் உணவு பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும். ஆனால், மருந்து துறை போன்ற முக்கியமான பிரிவுகள் முழுமையாக சர்வதேச ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளுக்குமே இந்த ஒப்பந்தம் பயனளிக்கும். அமெரிக்கா செய்யும் இறக்குமதியால் அந்நாட்டினருக்கு தடையில்லாமல் பொருட்கள் கிடைக்கும். அதுவும் இறக்குமதி எண்ணிக்கைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் தேவையான அளவு மட்டுமே கிடைக்கும். தேவையின்றி பொருட்கள் குவிவது (Dumping) தவிர்க்கப்படும்.
பிரிட்டனைப் பொருத்தவரை ஏற்றுமதியால் உள்நாட்டில் வேலை வாய்ப்பு தொடரும். அந்நியச் செலாவணியும் கிடைக்கும். முக்கியமாக வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை மாறி வர்த்தகம் சுமூகமாக நடக்கும். இதனால் இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ என்ன பாதிப்பு அல்லது தாக்கம் உண்டாகும் என்று தற்போது அனுமானிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் ஏற்றுமதி பொருட்களும், அடக்க விலைகளும், தரமும் வெவ்வேறானவை.
ஆனால் அமெரிக்கா ஒரு சரியான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு தயார் என்பதே நேர்மறையான செய்தி. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வாகனங்களுக்கும் இந்த வரி விகிதங்கள் ஒரு அடிப்படையாக இருக்க வாய்ப்புண்டு. மற்ற உலக நாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு சிறிய நம்பிக்கையை தோற்றுவிக்கும் என்று சொல்லலாம். இந்தியாவுடனான வர்த்தக வரி ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 1952kalsu@gmail.com