மே மாதத்துக்கான மியூச் சுவல் பண்ட் முதலீட்டு தரவை இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (AMFI) சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, மே மாதத்தில் பங்குகள் சார்ந்த திட்டங்களுக்கான நிகர முதலீடு 22% குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ஏப்ரலில் ரூ.24,269 கோடியாக இருந்த முதலீடு, மே மாதத்தில் ரூ.19,013 கோடியாக குறைந்துவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இந்த தரவை சற்று விரிவாக பார்க்கலாம்.
முதலில், நிகர முதலீடு என்பது மொத்த முதலீட்டிலிருந்து திரும்பப்பெறப்பட்ட முதலீட்டை (Redemptions) கழித்த பிறகு வரும் தொகை. பணம் தேவை, பழைய முதலீட்டை மாற்றி புதிய நல்ல பண்டை தேர்வு செய்தல் என திரும்பப்பெறுவது பல காரணங்களுக்காக நடக்கலாம். மொத்த முதலீடு என்பது முதலீட்டாளர்கள் போட்ட மொத்த தொகை. அதனால்தான் இதை கவனிக்க வேண்டும்.
மே மாதத்தில் மொத்த முதலீடு ரூ.56,604 கோடி, ஏப்ரலில் ரூ.56,748 கோடி – இரண்டும் கிட்டத்தட்ட சமம். இதில் எஸ்ஐபி மூலம் ரூ.26,688 கோடி வந்துள்ளது, ஏப்ரலில் இது ரூ.26,632 கோடியாக இருந்தது. இது மொத்த முதலீட்டில் 47% ஆகும். மீதி 53% ஒரே முறையில் முதலீடு செய்யப்பட்டவை. திரும்பப்பெறுவது அதிகரித்ததால்தான் நிகர முதலீடு குறைந்தது. ஏப்ரலில் ரூ.32,479 கோடியாக இருந்த இது, மே மாதத்தில் ரூ.37,591 கோடியாக 16% அதிகரித்துள்ளது.
பெரும்பாலான வகைகளில் திரும்பப்பெறுவது அதிகம். வேல்யூ பண்ட்களில் (Value funds) மட்டும் 77% அதிகரித்துள்ளது (ரூ.1,264 கோடி). இது மொத்த திரும்பப்பெறப்பட்ட முதலீட்டில் ஒரு பங்காகும். இப்போது ஹைபிரிட் பண்ட்களை (Hybrid funds) பார்க்கலாம். இதில் பெரும்பாலானவை பங்குகள் சார்ந்த முதலீடாகவே இருக்கும். இதை பாதுகாப்பானது என்றும் சந்தை ஏற்ற இறக்கத்தில் நல்லது என்றும் முதலீட்டாளர்களும், விநியோகஸ்தர்களும் கருதுகிறார்கள்.
மே மாதத்தில் ஹைபிரிட் பண்ட் நிகர முதலீடு இரட்டிப்பாகி ரூ.5,063 கோடி (ஏப்ரலில் ரூ.2,457 கோடி) ஆனது. மொத்த முதலீடு 18% அதிகரித்து ரூ.13,949 கோடியாகவும், திரும்பப்பெறுவது 5% குறைந்து ரூ.8,886 கோடியாகவும் இருந்தது. இதனால், சந்தையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்சினை இருந்தபோதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான ஹைபிரிட் பண்டுக்கு மாறியுள்ளனர்.
முற்றிலும் பங்குகள் சார்ந்த மற்றும் ஹைபிரிட் இரண்டையும் சேர்த்து பார்த்தால், மே மாதத்தில் மொத்த முதலீடு 3% அதிகம் (ரூ.70,554 கோடி). திரும்பப்பெற்றது 11% அதிகம் (ரூ.46,477 கோடி). நிகர முதலீடு 10% குறைந்தது (ரூ.24,076 கோடி). ஹைபிரிட் பண்டில் வந்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு பங்குகளுக்காக பயன்படுத்தினாலும், மே மாதத்தில் மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள் ரூ.23,000 கோடி கூடுதலாக பெற்றுள்ளனர். இது சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க உதவும்.
சுருக்கமாக – இந்தியா-பாகிஸ்தான் இடையே சிறிய போர், பங்குகள் சார்ந்த திட்டங்களில் லாபத்தை எடுத்தல் ஆகியவை இருந்தாலும், பங்குகள் சார்ந்த மற்றும் ஹைபிரிட் பண்டில் முதலீடு நிலைத்துள்ளது. எஸ்ஐபி-யில் சாதனை அளவு முதலீடு உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை உறுதியாக உள்ளது.
தொடர்ச்சியாக 51 மாதங்கள் மியூச்சுவல் பண்ட்களில் நிகர முதலீடு நேர்மறையாக இருப்பது, இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையின் எதிர்காலம் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது.
செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்த சந்தையின் ஏற்ற இறக்கங்கள், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் (எப்ஐஐ) விற்பனை ஆகியவை இருந்தாலும், ஆகஸ்ட் 2024-ல் ரூ.23,547 கோடியாக இருந்த எஸ்ஐபி முதலீடு, மே 2025-ல் ரூ.26,688 கோடியாக அதிகரித்துள்ளது.
- sunilsubramaniam27@gmail.com