வணிக வீதி

ஆட்டம் காணும் அமெரிக்க கருவூல பத்திரங்கள்

முனைவர் அ.ஜ.ஹாஜா முகைதீன் 

சர்வதேச நிதி சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவும் போதெல்லாம் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடாக விளங்குவது அமெரிக்க அரசின் கருவூல பத்திரங்கள் ஆகும். உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர்டொனால்டு ட்ரம்ப் தனது வர்த்தகப் போரை தொடங்கியதற்கு பிறகு அமெரிக்காவின் பங்கு சந்தை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியிலிருந்து தங்களது முதலீடுகளை பாதுகாக்க அந்நாட்டு கருவூல பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர் மாறாக முதலீட்டாளர்கள் தங்களிடமிருந்த கருவூல பத்திரங்களை அதிக அளவில் விற்பனை செய்தனர்.

கருவூல பத்திரங்களின் வலிமை: பட்ஜெட் செலவுகளை மேற்கொள்ளவும் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் கடன்களை சமாளிக்கவும் அமெரிக்க அரசு கருவூலத் துறையின் பத்திரங்களை வெளியிடுகிறது. உலக முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முக்கிய காரணம், இவை டாலர் மதிப்பில் வெளியிடப்படுவதே ஆகும்.

அமெரிக்காவின் பொருளாதார வலிமை மற்றும் தேவைப்படும்போதெல்லாம் எவ்வளவு டாலரை வேண்டுமானாலும் அச்சடித்துக் கொள்ளலாம் என்கிற நிதி அதிகார வலிமையோடு இருப்பதால் கடன்களை திருப்பிச் செலுத்துவதில் அமெரிக்கா எப்போதும் தவறுவது கிடையாது; திவாலாகுவதற்கும் வாய்ப்பு இல்லை என்கிற அசாத்தியமான நம்பிக்கை சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருப்பதும் மற்றொரு காரணம் ஆகும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.

குறிப்பாக, தாங்கள் சம்பாதித்த டாலரை சீனாவும் ஜப்பானும் அமெரிக்க கருவூல பத்திரங்களிலேயே முதலீடு செய்கின்றன. 1.2 ட்ரில்லியன் டாலரை ஜப்பானும் 760 பில்லியன் டாலரை சீனாவும் முதலீடு செய்துள்ளன. கரன்சி சந்தைகளில் டாலர் தொடர்ந்து வலிமையோடு வலம் வரவும் குறைந்த வட்டியில் கடன் வாங்கவும் அமெரிக்காவுக்கு இவை உதவுகின்றன.

கருவூல பத்திரங்களின் அடிப்படை கூறுகள்: கடன் பத்திரத்தில் அதன் முகமதிப்பு (விலை), முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதம் (கூப்பன் ரேட்) குறிப்பிடப்பட்டிருக்கும். முதிர்வு காலம் ஒரு வருடத்தில் தொடங்கி 30 வருடங்கள் வரை வெவ்வேறு கால அளவுகளில் உள்ளன. முதலீட்டாளர்கள் பத்திரங்களை அதன் முதிர்வு காலம் வரை வைத்திருக்க வேண்டியது இல்லை. இரண்டாம் நிலை சந்தையில் இந்த பத்திரங்களை விற்பனை செய்யலாம். பத்திரங்களின் விலையை சந்தையில் நிலவும் தேவையும் சப்ளையும் தீர்மானிக்கும்.

பத்திரங்களுக்கான தேவை அதிகமாக இருந்தால் அவைகளின் விலை உயரும். மாறாக சப்ளை அதிகமாக இருந்தால் விலை குறையும். பத்திரங்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை (Yields) பாதிக்கும். பத்திரங்களின் விலையும் வருவாயும் எதிர்மறையான தொடர்பு கொண்டவை. அதாவது பத்திரங்களின் விலை அதிகரித்தால் வருவாய் குறையும். பத்திரங்

களின் விலை குறைந்தால் வருவாய் அதிகமாகும். உதாரணமாக 3% வட்டி தரும் ரூ.100 முக மதிப்புடைய பத்திரத்தில் இருந்து வருட இறுதியில் ரூ.103 கிடைக்கும். வருவாய் விகிதம் 3% (3/100). மேற்படி பத்திரத்தின் விலை 90 ஆக குறைந்தால் அதை வாங்கும் முதலீட்டாளருக்கு முதிர்வு கால முடிவில் ரூ.103 கிடைக்கும்.

ஆனால் லாபம் ரூ.13. வருவாய் விகிதம் 14.4% (13/90) ஆகும். வருவாய் விகிதம் 3 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்வதால் முதலீட்டாளர்கள் புதிய கருவூல பத்திரங்கள் மீதான தங்களின் புதிய முதலீடுகளுக்கு அதிக வருவாயை எதிர்பார்ப்பார்கள். அதாவது முதலீட்டாளர்களை கவர்வதற்கு அதிக வட்டி தரும் புதிய கருவூல பத்திரங்களை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்படும்.

அமெரிக்கா சந்திக்கப் போகும் சவால்கள்: அமெரிக்க பொருளாதாரத்தின் மீது சந்தை வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டதால் கருவூல பத்திரங்கள் அதிக அளவில் விற்கப்பட்டன. குறிப்பாக ஜப்பான் தன்னிடம் இருந்த அமெரிக்க பத்திரங்களில் ஒரு சிறு பகுதியை விற்பனை செய்தது.

அதிகப்படியான பத்திரங்களின் சப்ளையினால் விலை குறைந்து 4.5% முதல் 5% வரை வருவாய் அதிகரித்தது. இதனால் புதிதாக வெளியிடப்படும் கருவூல பத்திரங்களிலிருந்து அதிக வட்டியை முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பார்கள். வர்த்தகப் போரின் அபாயங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுக்கு அதிக
வட்டியை எதிர்பார்ப்பார்கள்.

பத்திரங்களை வாங்குவதற்கு உலக நாடுகள் தயங்கும்போது அமெரிக்கா தனக்குத் தேவைப்படும் வளர்ச்சிக்கான மூலதனத்தை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டுவது கடினமாகும். இத்தகைய சூழலில் அமெரிக்கா தனது வளர்ச்சிக்கான செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது அதிக வட்டிக்கு புதிய கடன் பத்திரங்களை வெளியிட்டு கடன் வாங்க வேண்டி இருக்கும். அமெரிக்க கடன் நிர்வாகம் என்பது ஏற்கெனவே பத்திரங்களின் மூலமாக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதற்கு புதிய பத்திரங்களை வெளியிட்டு கடன் வாங்குவதாகும். புதிய கடன்களுக்கான வட்டியை அரசாங்கம் உயர்த்துவதால் நாட்டின் பொதுவான சந்தை வட்டி வீதம் உயரும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் புதிதாக கடன்களை பெறுவதற்கு அதிக வட்டி கொடுக்க வேண்டி இருக்கும். அதிக வட்டியினால் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதை குறைப்பார்கள். வீட்டு அடமான கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி உயரும். தனிநபர்கள் கடன் வாங்கி செய்யும் நுகர்வு செயல்களை குறைப்பார்கள். இது அமெரிக்காவில் பொருளாதாரத் தேக்க நிலையை ஏற்படுத்தும்.

சீனா தன் வசம் உள்ள கருவூல பத்திரங்களை தங்கமாக மாற்றவோ அல்லது வேறுநிதி சொத்துக்களில் முதலீடு செய்ய முயற்சித்தாலோ கருவூல பத்திரங்களின் மதிப்பு சரியும். உலக நாடுகள் கருவூல பத்திரங்களை வாங்குவதை குறைத்துக் கொள்வதால் ஏற்படும் அந்நிய முதலீட்டு இழப்பினை ஈடு கட்டுவதற்கு அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலர்களை அச்சடித்து வெளியிடும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும்.

36 ட்ரில்லியன் டாலர் கடன்: கருவூல பத்திரங்களுக்கான தேவை குறையும்போது டாலருக்கான தேவையும் குறைந்து அதன் மதிப்பு குறையும். இதனால் அமெரிக்காவின் இறக்குமதி செலவு அதிகரித்து விலைவாசி உயரும். மேலும் டாலர் மதிப்பு குறைவதால் ஏற்கெனவே உள்ள கடன் சுமை மேலும் அதிகரிக்கும்.

அமெரிக்காவின் கடன் 36 ட்ரில்லியன் டாலரைத் தாண்டி உள்ள நிலையில், கருவூலப் பத்திரங்களின் வட்டி உயர்த்தப்பட்டால் உள் கட்டமைப்பு சுகாதாரம் மற்றும் கல்விக்காக அமெரிக்கா செலவிடும் தொகையை குறைக்க நேரிடும். தொடர்ச்சியாக வட்டி விகிதம் அதிகரித்தால் 2030-ம் ஆண்டில் அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வருமானத்தை வட்டி செலுத்துவதற்காகவே பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்ற) பட்ஜெட் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களுடைய அந்நியச் செலாவணி கையிருப்புகளிலிருந்து கருவூலப் பத்திரங்களின் அளவை படிப்படியாக குறைக்கலாம். கருவூலப் பத்திரங்களின் விலை குறைவை தடுப்பதற்கு பெடரல் ரிசர்வ் வங்கியே அந்த பத்திரங்களை வாங்கலாம்.

அவ்வாறு வாங்குவதற்கு அதிகளவு டாலர்கள் அச்சடிக்கப்பட வேண்டி இருக்கும். இதனால் பணவீக்கம் ஏற்படும். அமெரிக்க பத்திரங்களின் மீதான நம்பிக்கை குறையும் போது தற்போதைய பட்ஜெட் பற்றாக்குறை, உலகளாவிய அரசியல் நெருக்கடிகள் அமெரிக்க அரசின் கடன் வாங்கும் கொள்கை
களுக்கு பெரிய இடையூறாக அமையும்.

டாலரின் வலிமை? - டாலரின் வலிமைக்கு எதிராக உலக நாடுகள் எடுக்கும் முயற்சிகள் உடனடியாக வெற்றி அடையப் போவதில்லை. அது நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பொருளாதார அரசியல் முயற்சிகளைப் பொறுத்து அமையும். பிற நாடுகளின் பத்திர சந்தைகளோடு ஒப்பிடும்போது அமெரிக்காவின் பத்திர சந்தை மிகப்பெரியதாகும். 28 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட அமெரிக்க பத்திர சந்தையில், தினசரி 1 ட்ரில்லியன் டாலருக்கு வணிகம் நடைபெறுகிறது. அமெரிக்க பத்திரங்கள் மீதான முதலீடு என்பது டாலருக்கான தேவையை நிலை நிறுத்துவதோடு அதன் மதிப்பையும் உயரச் செய்கிறது.

டாலரின் மதிப்பு உயர்ந்தால் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்களின் ஏற்றுமதிகளை அதிகரிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். நடைமுறைக்கு மாறாக பத்திரங்களின் வருவாய் அதிகரித்ததால் தனது வணிகக் கூட்டாளி நாடுகள் மீது விதித்திருந்த வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். வர்த்தகப் போர் ஏற்படுத்துகின்ற பொருளாதார தேக்க நிலையின் பாதிப்புகளை உணர்ந்து சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா தங்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளை நடத்தி எதிர்மறை விளைவுகளை தடுக்க முன்வர வேண்டும்.

அமெரிக்க அரசின் முன்கூட்டி கணிக்க முடியாத பொருளாதார அறிவிப்புகள் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை முதலீட்டாளர்கள் மத்தியில் குறைத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முதலீட்டாளர்கள் அமெரிக்க நிதி சொத்துகளை மட்டுமே நம்பி இல்லாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நிதி சந்தைகளை நோக்கி முதலீடு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தனது பொருளாதார வலிமையை புவிசார் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வந்த அமெரிக்காவின் பொருளாதாரத்தை தற்போதைய வர்த்தகப் போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, சரியும் டாலர் மதிப்பு மற்றும் கருவூலபத்திரங்களின் மீதான நம்பிக்கையை அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

- ajhajamohideen17@gmail.com

SCROLL FOR NEXT