பிரபல தன்னம்பிக்கை எழுத்தாளர் மார்ஷல் கோல்ட்ஸ்மித் எழுதிய 'உங்களை எது இங்கே கொண்டு வந்ததோ, அது அங்கே கொண்டு செல்லாது' (What Got You Here, Won’t Get You There' by Marshall Goldsmith) என்கிற நூல் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
அந்த நூலில் 'வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதரும், அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்' என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டு இருக்கக்கூடிய கருத்துகளை இங்கே உங்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம்.
1 நீங்கள் புத்திசாலி என்பதை உலகுக்கு காட்ட முயற்சி செய்யாதீர்கள். பிறர் அதை விரும்புவதும் இல்லை.. ஏற்றுக் கொள்வதும் இல்லை.. மாறாக, உங்கள் செயல்கள் மூலம் அதை நிரூபித்துக் காட்டுங்கள்.
2 ‘இல்லை...', 'ஆனால்...', 'எனினும்...' என்ற எதிர்மறை வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். எது சாத்தியம் என்பதை முதலில் சொல்லிப் பழகுங்கள். முடிந்தால் திறந்த மனதோடும், நேர்மறை சிந்தனையோடும் எதனையும் எதிர்கொள்ளுங்கள்.
3 தகவலை மறைக்க முயற்சி செய்யாதீர்கள். வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை உருவாக்கும்.
4 உங்களைச் சுற்றி உள்ளவர்களை பாராட்ட தயங்காதீர்கள். அவர்கள் உங்கள் அருகில் இருப்பதனாலேயே, அவர்களது திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். முடிந்தால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களைக் கொண்டாடுங்கள்.
5 உங்களுக்கு தகுதி இல்லாத பாராட்டை ஏற்காதீர்கள். அதை உங்கள் குழுவில் உழைத்தவருக்கு வழங்குங்கள்.
6 கோபத்தில் இருக்கும்போது யாருடனும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். முடிந்தால் பேசுவதையே தவிர்த்து விடுங்கள்.
7 தவறுகள் நேருகிறபோது சூழல்களையோ, பிற மனிதர்களையோ குறை கூறாதீர்கள். அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகில் தவறிழைக்காத மனிதர் என்று யார்தான் இருக்கிறார்?
8 உங்களது கடந்த காலப் புகழும், பெருமையும், வெற்றியும் இன்றைய உணவுக்கு உதவாது. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள்.
9 உங்கள் மீது தவறு இருந்தால், மன்னிப்பு கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள். அது உங்கள் கவுரவத்தைக் குறைக்காது. மாறாக, உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கும்.
10பிறருக்கு நன்றி சொல்லவும் வெட்கப்படாதீர்கள். உங்களுக்கு மீண்டும் எப்படி உதவ முடியும் என்று அடுத்தவரை சிந்திக்கச் செய்வதே, நீங்கள் காட்டும் நன்றி உணர்வுதான். இந்தக் கட்டுரையைப் படித்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள்!
- rkcatalyst@gmail.com