ஆயுள் காப்பீடு, உடல் ஆரோக்கிய காப்பீடு, பொதுக் காப்பீடு என எந்தவொரு காப்பீடாக இருந்தாலும் நெருக்கடி நிலையில் ஆபத்பாந்தவனாக உதவுகிறது. காப்பீடு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கரோனா பெருந்தொற்று காலத்தில் நம்மில் பலரும் உணர்ந்திருக்கக்கூடும். ஆனாலும், உலக அளவில் ஒப்பிடுகையில் நமது நாட்டில் காப்பீடு எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. காப்பீட்டு துறை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பார்க்கலாம். இந்தியாவில் முதன் முதலாக 1818-ம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகமான `ஓரியண் டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’ தொடங்கப்பட்டது.
அதன்பின் 1850-ல் முதல் பொதுக் காப்பீட்டு நிறுவனமான `தி ட்ரைட்டன் இன்சூரன்ஸ் கம்பெனி’ தொடங்கப்பட்டது. 1956-ல் சுமார் 245 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டு `லைஃப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் (எல்ஐசி)’ நிறுவனமும், 1972-ல் 107 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டு `ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனமும் உருவாக்கப்பட்டன. 1991-ல் தாராளமய கொள்கை அமலான பிறகு இத்துறையில் தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடும் அனுமதிக்கப்பட்டன. 2021-ல் இத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இது 2025-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 100 சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஒரு முன்மொழிவு அறிவிக்கப்பட்டது. இன்றைக்கு இத்துறையில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் எடுத்திருக்கும் காப்பீடுகளுக்கு பிரீமியமாக வசூலித்திருக்கும் தொகையின் மொத்த மதிப்பு ரூ.11.05 லட்சம் கோடி.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய காப்பீட்டுத் துறை கடந்து வந்த பாதை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1994-ம் ஆண்டு மல்ஹோத்ரா கமிஷனின் பரிந்துரைப்படி 2000-வது ஆண்டில் இத்துறையைக் கண்காணிக்கும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) உருவாக்கப்பட்டது.
சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடி: 2001-02-ல் 27 காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வந்தன. இது 2010-ல் 48 ஆக உயர்ந்தது. இப்போது இதன் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 26 ஆயுள் காப்பீடு, 25 பொதுக் காப்பீடு, 8 உடல் ஆரோக்கிய காப்பீடு, மீதமுள்ள 14 நிறுவனங்கள் மறுகாப்பீடு மற்றும் பிரத்யேக காப்பீட்டுப் பிரிவில் இயங்கி வருகின்றன. இதில் 10 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.11 லட்சம் கோடியாகும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் காப்பீட்டு துறையின் மதிப்பானது 3.7 சதவீதம் மட்டுமே. இதில் 2.8% ஆயுள் காப்பீடு, சுமார் 1% பொதுக் காப்பீடாகும். இது உலக சராசரியான 7 சதவீதத்தோடு ஒப்பிடும்போது, 50 சதவீதம்தான். எனவே, சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இத்துறை மேலும் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஐஆர்டிஏஐ அமைப்பின் 2023-24-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் இயங்கி வரும் காப்பீட்டு நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டிருக்கும் பாலிசிகளின் எண்ணிக்கை 36.5 கோடி. இதன் மூலம் வசூல் செய்யப்பட்டுள்ள மொத்த பிரிமீயத் தொகை ரூ.11.19 லட்சம் கோடி, இதுவரை வாடிக்கையாளர்களின் உரிமைக் கோரல் (கிளைம்ஸ்) அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஈட்டுத் தொகை ரூ.7.66 லட்சம் கோடி, இத்துறையில் சுமார் 49 லட்சம் முகவர்கள் இயங்கி வருகின்றனர்.
எல்ஐசியானது பெரும்பாலும் ஒரளவுக்கு நகர்ப்புறமாகி இருக்கும் பகுதிகளில் (semi-urban) கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் பெருநகரங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கி வருகின்றன. இப்போது இத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்று ஆலோசனை நிறுவனமான மெக்கின்சியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதன்படி Go Digit, ACKO ஆகிய நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீதான கவனம் போன்ற அணுகுமுறைகளின் மூலம் பெற்றிருக்கும் பிரீமியத் தொகையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 60% ஆகும்.
இவை ஸ்மார்ட்போன் உதவியுடன் ஆய்வுகளையும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றின் அடிப்படையில் மோசடிகளை கண்டுபிடிப்பது, உடனடியாக அனுமதி அளிப்பது, மின்னணு உதவி கொண்டு எளிதாக உரிமை கோரல் பெறுவது போன்ற வசதிகளைக் கொண்டு தங்களது தொழிலைக் கட்டமைத்து வளர்ச்சியடைந்து வருகின்றன.
ஆயுள் + உடல் ஆரோக்கிய காப்பீடு: இந்நிறுவனம் பொது மக்களிடம் நடத்திய ஆய்வின்படி, 67% பேர் காப்பீடு வாங்க விருப்பம் கொண்டிருப்பதாகவும் ஆனால் அது ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் என இரண்டும் சேர்ந்ததாக இருக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள். இனி வரும் காலத்தில் இது சாத்தியமாகலாம். அதுபோல, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சில பிரிவினரைக் கவர வேண்டுமென்பதற்காக அவர்களது தேவைக் கேற்ப பாலிசிகளை வடிவமைத்து வருகின்றன.
குறிப்பாக, நீரிழிவு, இதய நோய், புற்று நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கவரும் வகையிலும், ரூ.1 கோடி வரை பாதுகாப்பு, மகப்பேறு காலத்தின்போது குறுகிய காலத்துக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள், வெளி நோயாளிப் பிரிவில் சிகிச்சை பெறுபவர்கள் போன்றவை இதில் அடங்கும்.
4% பேருக்கு மட்டுமே காப்பீடு: இந்தியாவில் காப்பீடு எடுத்தவர்களின் எண்ணிக்கை வெறும் 4% ஆகும். ஆனால் வளர்ந்த நாடுகளில் இது 15% ஆகும். அது தவிர வளர்ச்சியடைந்து வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருமானம், விரிவாகி வரும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை, புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை இத்துறைக்கு இருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது.
அதோடு, சமீப காலத்தில் மருத்துவப் பணவீக்கமானது (medical inflation) மருத்துவச் செலவுகளை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், காப்பீட்டு பிரிமீயங்கள் மீதான 18% சரக்கு, சேவை வரியை அரசு குறைத்தால் இத்துறை மேலும் வளர்ச்சியடைந்து அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற உதவியாக இருக்கும்.
- sidvigh@gmail.com