வணிக வீதி

வளர்ச்சியை ஆதரிக்கும் ரிசர்வ் வங்கியின் கொள்கை

சுனில் சுப்ரமணியம்

இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் 55-வது கூட்டம் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பணவீக்க நிலவரம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது குறித்து பார்ப்போம்.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன் வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 0.25% குறைத்தது. இந்நிலையில் 3-வது முறையாக ரெபோ விகிதத்தை 0.5% குறைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 6.5% ஆக இருந்த ரெபோ விகிதம் 5.5% ஆக (1%) குறைந்துள்ளது.

இதுபோல, ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் இருப்பு வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை (CRR) 4%-லிருந்து 3% ஆகக் குறைத்துள்ளது. இதனால் வங்கிகளில் ரு.2.5 லட்சம் கோடி பணம் கூடுதலாக புழக்கத்துக்கு வரும். அடுத்தபடியாக அக்காமடேட்டிவ் (accommodative) என இருந்த கொள்கை நிலைப்பாடு நியூட்ரல் (neutral) ஆக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அடுத்த பணக் கொள்கை கூட்டத்தில் பணவீக்கம் மற்றும் வளர்ச்சி இரண்டையும் கணக்கில் கொண்டு வட்டி குறைப்பு அல்லது அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என பொருள். அக்காமடேட்டிவ் என்றால் வட்டி குறைக்க வாய்ப்பு இருக்கும் என பொருள்.

1. பொருளாதாரப் பார்வை

பணவீக்கம்: ஏப்ரல் 2025-ல் நுகர்வோர் பணவீக்கம் (CPI) 3.16% ஆக குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4%-க்கும் கீழ் உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கியால் அதிக அளவில் வட்டி விகிதத்தைக் குறைக்க முடிந்தது.

வளர்ச்சி கவலை: கடந்த 2024-25 நிதியாண்டின் 4-வது காலாண்டு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருந்தாலும், முழு நிதியாண்டின் வளர்ச்சி 6.5% ஆகக் குறைந்துள்ளது. இது 2019-க்குப் பிறகு மிகவும் குறைந்த வளர்ச்சி ஆகும்.
உலகளாவிய பிரச்சினைகள்: அமெரிக் காவின் சுங்க வரிகள், கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், உலக நாடுகளின் நிதிநிலை போன்றவை இந்திய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

2. பொருளாதார விளைவு

கடன் மற்றும் நுகர்வு உயர்வு: ரெபோ விகிதம் மற்றும் சிஆர்ஆர் குறைக்கப்பட்டதால் கடன் வாங்குவது மலிவாகியுள்ளது. இது நுகர்வு, வீடு வாங்குதல், மற்றும் தொழில் துறை முதலீட்டை ஊக்குவிக்கும்.

பண வழங்கல்: சிஆர்ஆர் குறைப்பால் ரூ.2.5 லட்சம் கோடி பணம் வங்கிகளுக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. இது அதிக கடன்கள் வழங்குவதை ஊக்குவிக்கும்.

வளர்ச்சி ஆதரவு: உள்நாட்டு தேவை குறைவு மற்றும் உலகளாவிய பிரச்சினைகளுக்கு எதிராக வளர்ச்சியைத் தூண்ட ரிசர்வ் வங்கி முயற்சிக்கிறது.

பணவீக்கம் எதிர்பார்ப்பு: நடப்பு 2025-26 நிதியாண்டில் பணவீக்கம் 3.7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வட்டி குறைப்புக்கு ஆதரவான கொள்கைக்கு ரிசர்வ் வங்கி மாற்றலாம்.

பங்குச் சந்தை பார்வை

1. உடனடி சந்தை எதிர்வினை

பங்குகள் உயர்வு: வங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் வாகனம் போன்ற வட்டியுடன் தொடர்புடைய துறை சார்ந்த நிறுவன பங்கு கள் உயரும்.

நேர்மறை உணர்வு: எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் வட்டி விகிதம் குறைக்கப் பட்டது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

2. சந்தை எதிர்பார்ப்பு

குறுகிய காலம்: கடன் வட்டியுடன் தொடர்புடைய பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். ஆனால் ரிசர்வ் வங்கியின் நியூட்ரல் நிலைப்பாடு காரணமாக, எதிர்காலத்தில் சந்தை வளர்ச்சி முதலீட்டாளர்களின் வருவாய் மற்றும் உலக நிலைகளைப் பொறுத்து இருக்கும்.

ஆபத்துகள்: வங்கிகளின் லாப வரம்புகள் குறையலாம். உலகளாவிய ஏற்ற இறக்கம், சுங்க வரி பிரச்சினைகள் போன்றவை சந்தை மற்றும் பொருளாதாரத்துக்கு ஆபத்தாக இருக்கும்.

துறைகள் மற்றும் விளைவு

வங்கி: கடன் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால் வங்கிகளின் லாபம் குறையலாம்.

ரியல் எஸ்டேட்: வீட்டுக் கடன் தவணை குறைந்து வீடு வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாகனம்: கார் கடன் மலிவாகி வாகன விற்பனை அதிகரிக்கும்.

உள்கட்டமைப்பு: குறைந்த வட்டி விகிதம், புதிய திட்டங்கள் தொடங்குவதற்கு உதவும்.

நுகர்வோர் பொருட்கள்: மாதாந்திர தவணைகுறைவால் நுகர்வோர் செலவு அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கையால் பங்குச் சந்தைகளில் கடன் வட்டியுடன் தொடர்புடைய துறை சார்ந்த பங்குகள் வலுவாக உயர வாய்ப்பு உள்ளது. எனினும், ரிசர்வ் வங்கியின் நியூட்ரல் நிலைப்பாடு காரணமாக, எதிர்காலத்தில் சந்தை வளர்ச்சி நிறுவனங்களின் வருவாய் மற்றும் உலகளாவிய நிலைகளைப் பொறுத்தே இருக்கும். இந்த கொள்கை, வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் உள்ளது. ஆனால் பணவீக்கம் மற்றும் உலகளாவிய ஆபத்துகளுக்கு எச்சரிக்கையாகவும் உள்ளது.

- sunilsubramaniam27@gmail.com

SCROLL FOR NEXT