இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை எதிர்காலத்துக்காக பல்வேறு திட்டங்களில் சிறுக சிறுக சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், சிலர் தங்களுடைய சேமிப்பு அல்லது முதலீட்டை மறந்தே விடுகின்றனர்.
சிலர் ஆவணங்களை தொலைத்து விடுகின்றனர். இன்னும் சிலர் தங்களுடைய சேமிப்பு குறித்து குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளன.
நம் நாட்டில் வங்கிகள், அஞ்சலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்), மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தைகள் உள்ளிட்டவற்றில் உரிமை கோரப்படாமல் உள்ள முதலீட்டின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளில் உள்ள தொகை, ரிசர்வ் வங்கியின் சார்பில் செயல்படும் டெப்பாசிட் கல்வி விழிப்புணர்வு நிதியில் (டிஇஏஎப்) சேர்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ சொந்தமான முதலீடு இருக்கிறதா என்பதை இந்த அமைப்பின் இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்வதுடன் அதை திரும்பப் பெறவும் முடியும்.
இதுபோல, பங்குச் சந்தையில் உரிமை கோரப்படாத 110 கோடி பங்குகளின் மதிப்பு மட்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் துறையின் புள்ளி விவரம் கூறுகிறது. இதுபோல உரிமை கோரப்படாத லாபப் பங்கு (டிவிடெண்ட்) மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி ஆகும். இதற்கு தீர்வு காணும் வகையில், நிறுவனங்கள் சட்டப்படி (2013) முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (ஐஇபிஎப்ஏ) உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் பரிவர்த்தனை இல்லாமல் இருக்கும் பங்குகள் மற்றும் டிவிடெண்ட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஐஇபிஎப்ஏ-வுக்கு மாற்றிவிடுகின்றன.
ஐஇபிஎப்ஏ இணையதளத்தில் பான் எண் உள்ளிட்ட சில விவரங்களை உள்ளிட்டு, தங்களுக்கோ தங்கள் குடும்பத்தினருக்கோ உரிமை கோரப்படாத பங்குகள் மற்றும் டிவிடெண்ட்கள் இருக்கிறதா என தேடலாம். இதில், பங்குகள் அல்லது டிவிடெண்டகள் இருப்பது தெரியவந்தால், உரிமையாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சட்டப்படி தகுதியானவர்கள், உரிய ஆவணங்களை ஐஇபிஎப்ஏ-விடம் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐஇபிஎப்ஏ-வும் இந்திய பங்குச் சந்தை வாரியமும் (செபி) இணைந்து நாட்டின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர் முகாம்களை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐஇபிஎப்ஏ சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான மதிப்பு கொண்ட பங்குகளை உரிமை கோருபவர்கள், வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை. மேலும் நோட்டரி வழக்கறிஞர் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுக்கு பதிலாக சுயசான்று அளிக்கப்பட்ட ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
- anandhan.k@hindutamil.co.in