வணிக வீதி

கிரிப்டோ கரன்சி நிர்வாக சட்டம் அவசியம்..

சோம வள்ளியப்பன்

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? பிட்காயின் என்பது மிக அதிகமாக விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்களே! இந்தியாவில் அவற்றை வாங்க முடியுமா? அனுமதி உண்டா? முன்பு ஏதோ தடை செய்ததாக செய்திகள் வந்தனவே! இப்போதைய நிலை என்ன? என்பன போன்ற கேள்விகள், தங்கம், பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்து வரும் அனுபவம் மிக்க முதலீட்டாளர்களிடம் கூட  இருக்கின்றன.

உலகின் முதல் ‘கிரிப்டோகரன்சி’  பிட்காயின். இது 2009-ல் அறிமுகமானதிலிருந்து  தொடர்ந்து செய்திகளில் இருந்து வருகிறது. காரணம், அதன் அபாரமான  விலை உயர்வு.  2011-ல் கிட்டத்தட்ட 6 டாலராக இருந்த ஒரு பிட்காயின் விலை, தற்போது 1.3 லட்சம் டாலர். அதாவது 17,166 மடங்கு. 

அரசுகளின் பியட் கரன்சிகள்: இந்திய ரூபாய், அமெரிக்க டாலர், ஜப்பானிய யென், ஐரோப்பிய  யூனியனின் யூரோ போன்ற பணப் பரிமாற்றத்துக்குரிய நாணயங்களை (கரன்சி),  அந்தந்த நாட்டின் அரசுகள் அவற்றின் மத்திய ரிசர்வ் வங்கிகள் மூலமாக வெளியிடும். ‘பியட் கரன்சி’களான அவற்றுக்கு வெளியிட்ட நாடுகளின் அரசுகள் உறுதி அளிக்கின்றன.

அந்தந்த நாடுகளின் பொருளாதார நிலை, ஏற்றுமதி, இறக்குமதி, அந்நியச் செலவாணி கையிருப்பு ஆகியவற்றைப் பொறுத்து அவற்றின் நாணயத்துக்கு சர்வதேச சந்தைகளில் மதிப்பு நிலவுகிறது. ஒவ்வொரு நாடும் அதன் நாணய மதிப்பை தக்க வைத்துக்கொள்ளவும் உயர்த்தவும் முயற்சிகள் செய்கின்றன. அதற்காக தங்கள் கரன்சியையும் அயல் நாட்டுகரன்சியையும்  பயன்படுத்த சில கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றன. கூடவே, அந்நிய நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் வரும்  மற்றும் வெளியேறும் கரன்சிகளை கண்காணிக்கின்றன. 

தனியார் கரன்சி: தாங்கள் செய்யும் வியாபாரம், சேவை மற்றும் பணப் பரிமாற்றத்தை அரசுக்கு தெரியாமல் செய்ய விரும்புகிற நிறுவனங்களும் அமைப்புகளும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய, அரசுகள் வெளியிடும் பியட் (Fiat) கரன்சிகளை தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துகின்றன. காரணம்,  கிரிப்டோகரன்சிகள் எந்த ஒரு குறிப்பிட்ட அரசாலும் வெளியிடப்பட்டவை அல்ல. அவைகரன்சி  தாள்களாகவோ, காசோலை,  வரை வோலைகளாகவோ  அல்லது  வங்கிகள், மணி எக்ஸ்சேஞ்ச் மூலமாகவோ நகர்வதில்லை.

கிரிப்டோ பணம் என்பது மின்னணு  பணம். இவற்றை எந்த அரசும் உருவாக்குவதோ, கண்காணிப்பதோ, கட்டுப்படுத்துவதோ இல்லை. எந்த நாட்டு அரசாலும் அல்லது வேறு எந்த நிறுவனங்களாலும் அந்த மூன்றையும் செய்யவும் இயலாது. எனவே,  தொடக்கத்தில் நிழல் உலக  பணப்பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட கிரிப்டோ கரன்சிகள், பிறகு, தங்களுடைய நாட்டின்  அரசு மற்றும் பணத்தின்  நிலைத்தன்மையின் மீது  நம்பிக்கை இல்லாதவர்களாலும், வங்கிகள்  மற்றும் பிற அமைப்புகள் மூலமாக அரசுகள் வெளியிடும் பணத்தை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கான கட்டணங்களை தவிர்க்க விரும்புகிறவர்களாலும்,  தாங்கள் வாங்குவதை விற்பதை மற்ற எவருக்கும் தெரியாமல் செய்ய முயல்பவர்களாலும் பயன்படுத்தப்படுகிறது.  

வேறு பயன்கள்: அறிமுகமான காலத்தில் பணப் பரிமாற்றத்துக்கு மட்டுமே  பயன்படுத்தப்பட்ட கிரிப்டோ கரன்சிகளை பிற்பாடு அவற்றின் வெவ்வேறு பயன்களுக்காகவும் வாங்கப்படுகின்றன. உதாரணமாக Decentralized games, Market places or Social networks போன்றவற்றை உருவாக்க Ethereum கிரிப்டோ கரன்சி  பயன்படுத்தப்படுகிறது.  பணப் பரிமாற்றம் தவிர வேறு குறிப்பிட்ட தேவைகளுக்காக பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் நடைபெறும் Stablecoins; Utility Tokens; Governance Tokens ஆகியவையும் வாங்கப்படுகின்றன.

Web3, NFTs, dApps போன்றவை இணைய பயன்பாடுகளுக்காக வாங்கப்படுகின்றன. முக்கியமாக, உலகெங்கும் உள்ள மக்கள் இவற்றின் விலை உயர்வில் லாபம் பார்பதற்காகவும் வாங்குகிறார்கள். தவிர, ஸ்டேபிள்காயின்கள், கவர்னன்ஸ் டோக்கன்கள், மீம், சோசியல் காயின்கள் ஆகியவையும் வர்த்தகமாகின்றன.

அனுமதிக்கும் நாடுகள்: அபார வளர்ச்சி காரணமாக  அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோ கரன்சியின் முதலீடுகளும் பரிவர்த்தனைகளும்  சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களும் தனி நபர்களும் தங்களுக்குள்  செய்து கொள்ளும் பணப் பரிமாற்றத்துக்கு கூட  இவற்றை பயன்படுத்த  அனுமதி  வழங்கப்பட்டிருக்கிறது. 

சீனா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மொராக்கோ, எகிப்து ஆகிய நாடுகளில் கிரிப்டோ கரன்சிகள்  முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவிலும், ஈரானிலும் கிரிப்டோ கரன்சிகள்  உருவாக்க பயன்படும் ‘மைனிங்’ அனுமதிக்கப்பட்டிருக்கிறது.  நாடுகளுக்கு இடையே பரிவர்த்தனையும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்நாட்டுக்குள் கிரிப்டோவை பணமாக பயன்படுத்த முடியாது.

இந்தியாவில் வாங்கலாம்: இந்தியாவிலும் கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம், விற்கலாம். அதற்கு தடையில்லை. ஆனால், 2023-ம் ஆண்டு முதல் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தின்படி (PMLA), நிதி புலனாய்வு குழுவிடம் (FIU-IND) பதிவு செய்து கொண்டு வாடிக்கையாளர்களை முறையாக  KYC செய்கிற தளங்கள்  மூலமாக மட்டுமே வாங்க, விற்க வேண்டும்.  CoinDCX, CoinSwitch, ZebPay, Uno coin போன்ற தளங்கள் FIU இடம் பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

அனுமதிக்கப்படாத தளங்களில் பரிவர்த்தனை செய்வது சட்டவிரோதமானதும் ஆபத்தானதும் ஆகும். நம் நாட்டில் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மற்றும்  வர்த்தகம் மூலம் கிடைக்கிற லாபத்துக்கு 30% மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.  பங்கு வர்த்தகத்தில் செய்வது போல ஏற்படும் நட்டங்களை, லாபத்தில் கழித்துக் கொண்டு வரி கட்ட இயலாது.

பிற கிரிப்டோகரன்சிகள்:

இருக்கும் கிரிப்டோ கரன்சிகளிலேயே மிக அதிக விலை உயர்வு கண்டதும் அதிக விலையில் பரிவர்த்தனை ஆவதும் பிட்காயின் மட்டும்தான்.  அதற்குப் பிறகு பல புதிய  கிரிப்டோ கரன்சிகள் சந்தைக்கு வந்து விட்டன. எத்திரம் (ETH), சொலனா (SOL), USDT (Tether), USDC என்பவையும் பிரபலமாக இருக்கின்றன. இவற்றின் மீது முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகம் செய்பவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அபாரமான மோகம் காரணமாக தொடர்ந்து பல கிரிப்டோ கரன்சிகள் சந்தைக்கு வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது வர்த்தகமாகும் கிரிப்டோ கரன்சிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 17,000 என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் எல்லாவற்றின் விலையும் பெரிய அளவில் உயர்வதில்லை.

வர்த்தக அளவு: உலக அளவில் என்று பார்த்தால், கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில், 2024-ல் அமெரிக்கா முதலிடத்திலும் ஐரோப்பிய யூனியன் 2-வது இடத்திலும் இருக்கின்றன. ஒரு ஆண்டுக்கு சுமார் 18.4  ட்ரில்லியன் (லட்சம் கோடி) அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. சந்தை மதிப்பு 3.5 ட்ரில்லியன் டாலர்கள்.  இந்தியாவில், குறிப்பாக 2-ம், 3-ம் நிலை நகரங்களில் தனி நபர்கள் பலரும் இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். 2023-ம் ஆண்டு, இந்தியாவில் கிரிப்டோ கரன்சி மார்க்கெட் சொத்து மதிப்பு 2.6 பில்லியன் (260 கோடி) அமெரிக்க டாலர்கள். இது தொடர்ந்து வளர்வதாக சொல்லப்படுகிறது.

மோசடிகள்: மிகப்பெரிய  லாப வாய்ப்பை கொடுக்கிற, உலகளாவிய வர்த்தக பொருளாக இருக்கிற கிரிப்டோ கரன்சி வர்த்தகம்,  மற்ற வர்த்தகங்களைக் காட்டிலும் அதிகமான மோசடி களுக்கு இடம் கொடுக்கிறது. இந்தியாவில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலவிதமாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நம்பிக்கைக்குரிய செயலிகளைப் போலகாட்சி தரும் போலி செயலிகளை உருவாக்கி, அவற்றில் முதலீட்டாளர்களை பணம் செலுத்த வைப்பது;   போலி கிரிப்டோ நாணயங்களை உருவாக்கி, அவற்றை எதிர்காலத்தில் பெரிய வருமானம் தரும் என்று கூறி முதலீடு செய்ய வைப்பது; ஒரு நாணயம் குறித்த போலி செய்திகள் பரப்பி, ‘சமூக ஊடக  விளம்பரங்கள், அதன் விலையை மிக அதிகமாக உயர்த்தி, மக்களை விழுந்தடித்து வாங்க வைப்பது. 

பிறகு, அவர்கள் வசமிருக்கும் மிக அதிக எண்ணிகையிலான அதே நாணயங்களை  அதிக விலையில் விற்றுவிட்டு வெளியேறுவது. (Pump-and-Dump ஏமாற்று). எம்.எல்.எம். (Multi-Level Marketing) முறையில், பலரையும் முதலீடு செய்யவைப்பதோடு, அவர்களை வைத்து இன்னும் பலரையும் முதலீடு செய்ய வைப்பது என விதம் விதமாக ஏமாற்றிக் கொண்டே  இருக்கிறார்கள்.

கிரிப்டோ பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள்,  குறைகளைத் தீர்த்துக்கொள்ள மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் தனியாக சட்டம் இயற்றப்படாததால் எது வர்த்தக நட்டம், எது மோசடி போன்றவை குறித்து முடிவெடுக்க நீதிமன்றங்கள் சிரமப்படுகின்றன.

தனிச்சட்டம் வேண்டும்: கிரிப்டோ கரன்சி என்பது ஒரு புது வகையான வித்தியாசமான சொத்து வகையாக இருப்பதால் அதுகுறித்த புகார்களை, வழக்குகளை விசாரிக்க ஒரு நிபுணர்கள் குழு அல்லது  அவர்களை கலந்தாலோசித்த பிறகு இயற்றப்படுகிற சட்டம் அவசியம். இதை 2023-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வேறு ஒரு வழக்கிலும் தெரிவித்திருந்தது.
2021-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக இருந்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ இதுவரை அது தாக்கல் செய்யப்படவில்லை.  ஏன் இன்னும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. நியாயமான கேள்விதான். விரைவாக ஒரு தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் கேள்வி: கிரிப்டோ கரன்சியில் பல்வேறு வகையான மோசடிகளை பல மாநிலங்களில் செய்த குற்றங்களுக்காக சிறையில் இருந்த குஜராத்தை சேர்ந்த சைலேஷ் பாபுலால் பட்  ஜாமீன் மனுசெய்திருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு,   கிரிப்டோ கரன்சி  வர்த்தகத்தை முறைப்படுத்தும் வழிமுறைகளை வெளியிடாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

தவிர, கிரிப்டோ வர்த்தகம் வேறு விதமான ஹவாலாதான்  என்றும்,  ஒரு முறைப்படுத்தும் சட்டம் இல்லாத காரணத்தினால் தான் நாடுகளுக்கு இடையே சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன என்றும் கூறி இருக்கிறது. 

வேகமாக மாறிவரும் உலகில், கிரிப்டோவை முழுமையாக தடை செய்வது புத்திசாலித்தனம் அல்ல என்று தெரிகிறது. அதேநேரம், இவற்றை வர்த்தகம் செய்யும் முறைகள் குறித்து அவசியம் சரியான வழிகாட்டுதலும் சட்டமும் இருக்க வேண்டும் என்று  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

- writersomavalliappan@gmail.com

SCROLL FOR NEXT