வணிக வீதி

சிக்கிம் மக்களுக்கு முழு வருமான வரி விலக்கு ஏன்?

செய்திப்பிரிவு

வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் சம்பாதிக்கும் வருமானத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை வருமான வரி விலக்கு உள்ளது. அந்த வரி விலக்கு உச்சவரம்பைதாண்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும். அத்துடன் ஆண்டுதோறும் வருமான வரிப் படிவம் (ஐடிஆர்-1) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.

இந்நிலையில், வருமான வரி செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்கு பெற்ற மாநிலம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், சிக்கிம் மாநிலம்தான் இத்தகைய பெருமையைப் பெற்றுள்ளது. அங்கு எத்தனை கோடி சம்பாதித்தாலும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

அரசியல் சாசனத்தின் 371(எப்)-வது பிரிவும் வருமான வரி சட்டத்தின் 10 (26ஏஏஏ)-வது பிரிவும் இந்த சலுகையை வழங்குகிறது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 26-க்கு முன்பு சிக்கிம் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அவர்களின் நேரடி வாரிசுகள் இந்த வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

சம்பளம் மட்டுமல்லாது, வட்டி, டிவிடெண்ட் உள்ளிட்ட எந்த வகையிலும் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டினாலும் ஒரு பைசா கூட வரி செலுத்த தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் இவர்கள் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்யவே தேவையில்லை.

வரி விலக்கு ஏன்? - கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இதன் மூலம் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மட்டும்தான் இந்தியா என்ற நாட்டின் வரையறைக்குள் வந்தன. அதே நேரம், இந்திய நிலப்பரப்புக்கு நடுவே ஆங்காங்கே ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர், சிக்கிம் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பகுதிகள் மன்னராட்சியின் கீழ் இருந்தன.

சுதந்திரத்துக்குப் பிறகு அந்தப் பகுதிகள் ஒவ்வொன்றாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அந்த வகையில் மன்னராட்சியின் கீழ் இருந்த சிக்கிம், கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. அப்போது ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிக்கிம் அதன் குடிமக்களுக்கு முழுமையான வருமான வரி விலக்கு உட்பட அதன் தனித்துவமான சில சட்டங்களையும் சலுகைகளையும் தக்க வைத்துக் கொண்டது.

பொருளாதார பலன்கள்: முழு வருமான வரி விலக்கு பெற்றிருப்பதால் சிக்கிம் மாநில மக்கள் அதிக அளவில் செலவிடும் வருமானத்தைக் கொண்டுள்ளனர். இது நுகர்வு அதிகரிக்க வகை செய்கிறது. மேலும் இது சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சிக்கிமின் தனித்துவமான நிலை முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

சிக்கிம் மாநிலத்தின் வரி இல்லாத சூழல் சுற்றுலா, விவசாயம் மற்றும் சிறு வணிகங்கள் போன்ற துறைகளுக்கு பயனளிக்கிறது. இந்த விலக்கு உள்ளூர் பொருளாதாரத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், சிக்கிமை முதலீட்டு நட்பு பிராந்தியமாக நிலைநிறுத்துகிறது.

SCROLL FOR NEXT