அனைவரும் பணக்காரராக விரும்புகிறார்கள். ஆனால் செல்வத்தை கட்டியெழுப்புவது ஒரு நீண்ட பயணம் என்பதையும் அதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதையும் எத்தனை பேர் உணர்கிறோம்? ஏதோ சிலருக்கு லாட்டரியில் பரிசு கிடைக்கலாம். அல்லது பெரும் சொத்தை யாராவது அவர்களுக்கு விட்டுச் செல்லலாம்.
ஆனால் பொதுவாக எல்லோரும் செல்வந்தராவது நிதி நிர்வாகத்தில் நல்ல பழக்கங்களை அனுசரிப்பதால் மட்டுமே. 'ஒருவரது வழக்கமான நடத்தை – ஒருவர் அடிக்கடி செய்யும் ஒரு செயல்' 'பழக்கம்' என பிரிட்டானிகா அகராதி விவரிக்கிறது.
பழக்கம் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் HABIT எனப்படுகிறது. இதில் H எழுத்தை நீக்கினால் A Bit என்று வருவதும் A எழுத்தையும் நீக்கினால் Bit என்று வருவதும் B எழுத்தையும் நீக்கினால் It தொடர்வதையும் யோசித்தால் பழக்கம் எந்த அளவுக்கு நம்முள் கரைந்து போகிறது என்பது புரியும். அதாவது ஒரு பழக்கம் உருவானதும், அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, அதற்கு நாம் அடிமை என்பதே. சத்தில்லாத உணவோ அல்லது உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையோ எப்படி உடல் நலத்துக்கு கேடோ அதேபோல் தவறான நிதி நிர்வாக பழக்கங்கள் உங்கள் செல்வத்துக்கு கேடு விளைவிக்கும்.
இதோ உங்கள் செல்வச் செழிப்பை சேதப்படுத்தும் சில பழக்கங்கள்:
நிதி இலக்குகள் இல்லாமை: ஒவ்வொரு பயணத்துக்கும் ஒரு இலக்கு தேவை. நிதி திட்டமிடுதலிலும் குறிக்கோள் தேவை. அது குழந்தையின் கல்வி செலவாகவோ, வீடு வாங்க தேவையான நிதியாகவோ அல்லது வேறு ஏதேனும் நீண்டகால அடிப்படையில் சொத்து சேர்ப்பதற்காகவோ இருக்கலாம். ஆனால் தெளிவான இலக்குகள் தேவை. தெளிவான இலக்குகள் இல்லாமல் சேமிப்பது என்பது எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் பயணிப்பது போன்றது.
சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பது தோல்விக்கு திட்டமிடுவதற்கு ஒப்பாகும். ஒரு முறை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிறகு அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டாம். இது திட்டங்களை குழப்பம் அடையச் செய்து முன்னேற்றத்தை தாமதமாக்கும். மாறாக, உங்கள் இலக்குகளை முன்னுரிமைப்படுத்தி, யதார்த்தமான காலக்கெடுவை அமைக்கவும்.
சொத்து ஒதுக்கீட்டை புறக்கணித்தல் சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது பங்குகள், டெபாசிட்டுகள், வீடு/நிலம், தங்கம் மற்றும் பணம் ஆகியவற்றில் முதலீட்டை எவ்வாறு பிரித்து ஒதுக்குகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒதுக்கீடுகள் உங்களால் எந்த அளவுக்கு இழப்பை தாங்க முடியும் என்பதையும், நீங்கள் எதிர்பார்க்கும் லாப சதவீதம் எவ்வளவு என்பதையும், உங்கள் முதலீட்டின் கால அளவு போன்ற பலவற்றையும் உள்ளடக்கி முடிவு செய்ய வேண்டியது ஆகும். ஆனால் பல முதலீட்டாளர்கள் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளுக்கேற்ப தங்கள் ஒதுக்கீடு திட்டத்தை விட்டு விடுகிறார்கள். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் நீண்டகால நிதி வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்.
கடன் வாங்கி முதலீடு செய்தல் (Leverage) - கடன் வாங்கி முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான பழக்கம். இது லாபத்தை பெருக்கலாம். ஆனால் இழப்புகளையும் பெரிதாக்கும். சந்தையில் முதலீடு வீழ்ச்சியை சந்திக்கும்போது கடனுக்கான மார்ஜின் வீழ்வதால், முதலீட்டை இழப்புடனாவது விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். டெரிவேட்டிவ் என்று சொல்லப்படும் ஆப்ஷன் போன்ற முன்பேர வணிகங்களும் ஒருவகையில் கடன் வாங்கி முதலீடு செய்வது போன்றதே.
இவைகளை ஹெட்ஜிங் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவைகளை ஸ்பெகுலேஷனுக்காக பயன்படுத்துவது அபாயகரமானது. டெரிவேட்டிவில் முதலீடு செய்யும் தனிநபர்களில் 90 சதவீதம் பேர் நஷ்டம் அடைகின்றனர் என செபி நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணர்ச்சியால் முதலீட்டு முடிவுகள் எடுப்பது பங்குச் சந்தைகள் ஏறுவதும், இறங்குவதும் இயற்கையானது. இந்த ஏற்றத்தையும் இறக்கத்தையும் தாங்கும் மன உறுதி உள்ளவர்கள் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் உணர்ச்சிப் பேரழுத்தத்தில் தங்கத்தின் விலை உயரும்போது அதை வாங்குவார்கள்.
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது பங்குகளை பயத்தினால் விற்பார்கள். இதுபோன்ற பழக்கங்கள் நிதிக்கு கேடான பழக்கங்கள். உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் உங்கள் நீண்டகால முதலீட்டு திட்டத்தை முன்பே நிர்ணயித்தபடியே முன்னெடுத்து செல்வதே செல்வம் சேர்க்கும் வழி.
இயலாததை கட்டுப்படுத்த முயல்வது: நீங்கள் உங்கள் செலவு, சேமிப்பு, முதலீட்டு முடிவுகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் சந்தையை கட்டுப்படுத்த முடியாது. இந்த உண்மையை ஏற்க வேண்டும். இது, ஒரு புத்திசாலியான முதலீட்டாளராக மாறுவதற்கு முக்கியமாகிறது. பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இயற்கையானது என்ற புரிதலுடன் அதை மனச்சோர்வு இல்லாமல் எதிர்கொள்ளுங்கள். செல்வத்தை உருவாக்குவது என்பது பரபரப்பான சந்தைகளை பின்தொடர்வது அல்ல.
செல்வச் செழிப்புக்கு சரியான திட்டமிடலும் அந்த திட்டத்தை ஒரு ஒழுங்குடனும் பொறுமையுடனும் முன்னெடுத்துச் செல்வதே. நல்ல உடல் நலத்துக்கு தினசரி பழக்கங்கள் அவசியம் என்பதுபோல் நல்ல நிதி நிர்வாகத்துக்கும் நல்ல பழக்கங்கள் அவசியம். இன்று நீங்கள் உருவாக்கும் பழக்கங்கள், நாளைய உங்கள் நிதி நிலையை தீர்மானிக்கின்றன. எனவே அவற்றை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்.
- 1952kalsu@gmail.com