கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பணவீக்கம் குறைந்தது. நுகர்வோர் விலை குறியீடு (CPI) 3.16% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் குறைவு ஆகும். மேலும் ரிசர்வ் வங்கியின் 4% பணவீக்க இலக்கைத் தொடர்ந்து மூன்றாவது மாதமாக கடந்துள்ளது.
காய்கறிகள், பருப்பு விலை குறைந்ததால் உணவு பணவீக்கம் 1.78% ஆக சரிந்ததே இதற்கு முக்கிய காரணம். கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை குறியீடு (WPI) 0.85% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 13 மாதங்களில் மிகவும் குறைவு ஆகும். எரிபொருள், கச்சா எண்ணெய் விலை மற்றும் இதர முக்கிய பொருட்கள் விலை குறைந்தது இதற்கு முக்கிய காரணம். உணவுப்பொருள் விலை மாதந்தோறும் சிறிது உயர்ந்தாலும், வருடாந்திர அளவில் குறைந்துள்ளது.
சிபிஐ, டபிள்யுபிஐ ஆகிய இரண்டும் குறைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு பருவமழையும் நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி அடுத்த (ஜூன் மாதம்) நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்பு அதிகம். ஏற்கெனவே இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி இரு முறை வட்டியை தலா 0.25% குறைத்துள்ளது, தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைவான அளவு ஆகும். வட்டி குறைப்பால் வீடு, கார், வணிகக் கடன் வாங்குவது அதிகரிக்கும்.
எந்த துறைகளுக்கு லாபம்? - பணவீக்கம் குறைந்து வரும்போது வட்டி விகிதமும் குறைந்தால் கடன் வாங்கும் செலவு குறையும், வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். இதனால், வங்கி, வாகனம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் துறைகள் வளர்ச்சி பெறும். கடந்த 6 மாதங்
களில் நிப்டி 50 குறியீடு 4.86% வருமானம் கொடுத்தாலும், வட்டியுடன் தொடர்புடைய துறைகள் பின்தங்கி உள்ளன. அதனால், வட்டி குறையும்போது இவை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது.
* தனியார் வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) வட்டி குறைப்பை விரைவாக கடனாளிகளுக்கு வழங்கும். இவை ரீடெயில் கடன்களில் வலுவாக உள்ளன. அரசு வங்கிகள் மெதுவாக செயல்படும், பெரும்பாலும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்.
* நடப்பு நிதியாண்டில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்களின் கைகளில் 1 லட்சம் கோடி பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கார், வீடு, வீட்டு பயன்பாட்டு சாதனங்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். தனியார் வங்கிகள் குறைந்த மாதாந்திர தவணையுடன் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.
* வரிச் சலுகையின் ஒரு பகுதி சேமிப்பு, முதலீட்டுக்கு செல்லும். இதனால் தனியார் வங்கிகள் இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் அதிக வருவாய் பெறும். மற்ற நிதி நிறுவனங்களும் லாபம் பெறும். அதனால், தனியார் நிதி நிறுவனங்களுக்கு வரும் காலங்களில் நல்ல வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. நடுத்தர காலத்தில் நுகர்வோர் தேவை அதிகரிக்க, நிறுவனங்கள் திறனை அதிகரிக்கும்போது, அரசு வங்கிகள் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி லாபம் பெறும்.
முதலீட்டை எப்போது மீட்க வேண்டும்: ஒரு தனிப்பட்ட நிறுவன பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது நல்லது. பண்ட் மேனேஜர்கள் சரியான சமநிலையை வைத்திருப்பார்கள். மேலே உள்ள கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். ஆனால் முதலீடு செய்யும்போது எதற்காக எவ்வளவு ரூபாய் சேர்க்க வேண்டும் என நீங்கள் ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக கார் வாங்கவா, வீடு வாங்கவா என்ற இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் முதலீட்டை, நிதிச் சேவை நிதி (Financial Services fund), நுகர்வுநிதி (Consumption fund) மற்றும் உள்கட்டமைப்பு நிதி (Infrastructure fund) என மூன்றாக பிரித்து முதலீடு செய்யலாம். இந்த நிதி திட்டங்களில் நீங்கள் தொடர்ந்து 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம், நீங்கள் நிர்ணயித்த ரூபாய் மதிப்பு இலக்கை அடையும் போதெல்லாம் உங்கள் முதலீட்டை மீட்டெடுக்க வேண்டும்.