தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இப்போது இருக்கும் ரூ.35 லட்சம் கோடியிலிருந்து 2030-ம் ஆண்டுக்குள் ரூ.86 லட்சம் கோடியாக (1 ட்ரில்லியன் டாலர்) அதிகரிக்கும் வகையில் மாநில அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல நகரங்களில் தொழிற்பூங்காக்களை அமைத்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் எறையூரில் காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், அந்த ஊரைச் சுற்றியுள்ள மக்கள் குறிப்பாக, பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கு அமெரிக்க பிராண்டான `Crocs’ காலணிகள் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாமல் தோல் பயன்படுத்தப்படாத காலணிகளை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அதன் சார்பாக ஒப்பந்த அடிப்படையில் பல தொழிற்சாலைகளை அமைக்கும் பணி செய்யார், பர்கூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தோல் தொழில் துறையில் முன்னணி மாநிலமான தமிழ்நாடு, இப்போது தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும் சாம்பியனாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 38 சதவீதமாகவும், மொத்த தோல் ஏற்றுமதியில் 47 சதவீதமாகவும் இருந்து வருகிறது. இத்துறை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் இது 10 லட்சத்தைத் தொடும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.
2029-30-ம் ஆண்டில் இத்துறை 50 பில்லியன் டாலர் (ஏற்றுமதி 14 பில்லியன் டாலர், உள்நாட்டு விற்பனை 36 பில்லியன் டாலர்) என்கிற இலக்கை அடையும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 40% இருக்கும் என இத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். தோலைப் பயன்படுத்தாமல் மற்ற சிந்தட்டிக் பொருள்களைப் பயன்படுத்தி காலணிகள் செய்யும் நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது.
இதுவரையில் தமிழ்நாடானது மேம்பட்ட மின்னணு சாதனங்கள், மின்சார வாகனங்கள் தயாரிக்கும் தொழில் துறைகளில் கவனம் செலுத்தி வந்தது. மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் தொழில்மயமாக்கலுக்கான தேவை இருக்கிறது. அதற்கு அதிக திறன் தேவைப்படாத ஆனால் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் துறைகளைக் கண்டறிய வேண்டியிருக்கிறது. அதில் ஒன்றாக இந்த செயற்கைப் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் காலணி தொழிற்சாலைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா +1 கொள்கை.. மேலும் தோல் அல்லாத செயற்கைப் பொருள்களைக் கொண்டு காலணிகளை தயாரிக்கும் நிறுவனங்களும் அதனுடைய ஒப்பந்த தொழிற்சாலைகளும் தமிழ்நாட்டில் ரூ.17,500 கோடி முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் சுமார் 2,30,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். இந்தத் தொழிலைப் பொறுத்தவரையில் `சீனா + 1’ என்கிற கொள்கை வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது எனத் தெரிகிறது.
இன்றைக்கு தமிழ்நாடானது உலகளவில் நைக்கி, பூமா, க்ராக்ஸ், அடிடாஸ் மற்றும் பல பிராண்டுகளை உற்பத்தி செய்து சப்ளை செய்யும் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இன்றைக்கு தோல் பயன்படுத்தப்படாத காலணிகளின் பங்கு உலகளவில் 86 சதவீதமாகும்.
சிந்தட்டிக் பொருள்களைக் கொண்டு காலணிகள் தயாரிப்பதில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உருவானது அவ்வளவு எளிதாக நடந்து விடவில்லை. அதுபோல தோலைத் தவிர வேறு சிந்தட்டிக் பொருள்களைக் கொண்டு காலணிகளை தயாரிப்பதற்கு உள்ளூர் தொழில் முனைவோரை சம்மதிக்க வைப்பதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெரம்பலூரில் நிறுவபட்ட காலணி தொழிற்சாலையில் சுமார் 2,500 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் 90% பெண்கள் ஆவர். இதுவரை இத் தொழிற்சாலை இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமென சுமார் 20 லட்சம் ஜோடிகளை க்ராக்ஸ் பிராண்டின் கீழ் தயாரித்திருக்கிறது.
இந்தத் தொழிற்சாலையில் இன்னும் விரிவாக்க வேலைகள் நடந்து வருகின்றன. இது உறுதிப்படுத்தியிருக்கும் முதலீடு ரூ.1,750 கோடி ஆகும். இந்த விரிவாக்க வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இந்தத் தொழிற்சாலையில் சுமார் 15,000 பேர் வேலை பார்ப்பார்கள் என்றும், ஏறக்குறைய 4 கோடி ஜோடி க்ராக்ஸ் காலணிகள் தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, ரூ.5,000 கோடி முதலீட்டில் அடிடாஸ் பிராண்ட் காலணிகளை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனத் தெரிய வருகிறது. இன்றைக்கு தோல் அல்லாத சிந்தட்டிக் பொருள்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் காலணிகளைத் தயாரித்து வரும் மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவி வருகின்றன.
இதுபோல நைக்கி காலணிகளை தயாரிக்கும் நிறுவனம், 2006-ம் ஆண்டிலேயே செய்யார் பகுதியில் தொழிற் சாலையை நிறுவி செயல்பட்டு வருகிறது. இத் தொழிற்சாலையின் விரிவாக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரிலும் திண்டிவனத்திலும் நடைபெற்று வருகிறது. இத் தொழிற்சாலைகளில் சுமார் 37,000 பேர் வேலை பார்ப்பார்கள் என்றும் ஆண்டுக்கு ஏறக்குறைய 2.5 கோடி ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்தட்டிக் பொருள்களைக் கொண்டு காலணிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்த நிறுவனங்கள், உற்பத்திச் செலவு குறைவு, தொழிலாளர்களுக்கான சம்பளம் குறைவு, தொழிலாளர்களும் அபரிமித எண்ணிக்கையில் கிடைக்கிறார்கள் என்கிற காரணங்களினால் 1980-களிலேயே சீனாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தன. ஆனால் அப்போது, அதற்குப் பிறகும் கூட இந்தியா தயார் நிலையில் இல்லை. இதனால், இவர்கள் தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகளில் தங்களது விரிவாக்கத்தை மேற்கொண்டனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி அதுவும் தமிழ்நாட்டை நோக்கித் திரும்பியிருப்பது என்பது இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இத் தொழிற்சாலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மிகவும் மலிவானதாகும். சீனாவில் ஒரு மணி நேரத்துக்கு 3 டாலர் ஊதியம் என்றால் இந்தியாவில் 1 டாலருக்கும் குறைவு (90 செண்ட்) ஆகும்.
தமிழ்நாடு அரசின் சலுகைகள்: தைவான் நிறுவனங்களைச் சமாதானப்படுத்தி அவர்களை இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைப்பதற்கு மாநில அரசானது அத் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது, தடையில்லா மின்சாரம், குறைந்த விலையில் தொழிற்சாலைக்கான நிலம், துறைமுக இணைப்பு போன்ற வசதிகளைச் செய்து கொடுப்பதாக உறுதி அளித்திருக்கிறது.
இவர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் முயற்சி 2018-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் பல முறை தைவானுக்கு பயணம் செய்து அங்கு இத் தொழிலில் இயங்கி வரும் உற்பத்தியாளர்களையும், குறிப்பிட்ட அமைப்புகளையும் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கின்றனர்.
இந்தக் காலணிகளை தயாரிக்க தேவையான பிரத்யேகமான ரசாயனப் பொருள்கள், அழகியல் சம்பந்தப்படாத டெக்னிக்கல் டெக்ஸ்டைல், கொக்கிகள், பசை போன்ற பொருள்களைத் தயாரிப்பதற்கென ராணிப்பேட்டை, எறையூர் போன்ற இடங்களில் இருக்கும் காலணி தொழிற் பூங்காக்களில் மாநில அரசு இடம் ஒதுக்கியிருக்கிறது.
இவை தவிர, ஏற்கெனவே இத் தொழில் மற்றும் கல்வி சார்ந்த அமைப்புகளான தோல் ஆராய்ச்சி மையம் (CLRI), தோல் ஏற்றுமதி கவுன்சில் (CLE), காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் (FDDI) ஆகியவை தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணம் இங்கு இயங்கி வரும் மற்ற துறை சார்ந்த தைவான் நிறுவனங்களின் (பாக்ஸ்கான், பெகட்ரான்) வெற்றியும் ஆகும்.
இம்முயற்சிகளின் தொடர்ச்சியாக மாநில அரசானது புதிய முதலீடுகளை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை நோக்கி திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக, மதுரை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற நகரங்கள் ஆகும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மதுரையிலும் கடலூரிலும் ரூ.250 கோடி செலவில் தோல் பயன்படுத்தப்படாத காலணிகளுக்கான தொழிற்பூங்காக்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பது, தென்மாவட்டங்களின் மீது அரசு கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
- sidvigh@gmail.com