வணிக வீதி

ஏற்றுமதியை அதிகரிக்கும் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் 

சுனில் சுப்ரமணியம்

இந்தியா, பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தாராள வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகி உள்ளது. மூன்று வருட ஸ்டாப்-ஸ்டார்ட் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவும் பிரிட்டனும் தாராளமய சந்தை அணுகலைப் பெறும். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள் பரஸ்பரம் தளர்த்தப்படும்.

இது ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு பிரிட்டன் மேற்கொண்ட மிக முக்கியமான ஒப்பந்தமாகும். மேலும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு வெளியே இந்தியா மேற்கொண்டுள்ள முதல் ஒப்பந்தமாகும். தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவும், 6-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் பிரிட்டனும் (IMF உலகப் பொருளாதார கண்ணோட்டம் ஏப்ரல் 2025-ன்படி), இந்த இருதரப்பு வர்த்தக ஏற்பாட்டிலிருந்து கணிசமாக லாபம் ஈட்டும்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2022-23 நிதியாண்டில் 20.36 பில்லியன் டாலரில் இருந்lது (ரூ.1.74 லட்சம் கோடி). இது 2023-2024 நிதியாண்டில் 21.34 பில்லியன் டாலராக (ரூ.1.82 லட்சம் கோடி) உயர்ந்தது. இப்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தம் மூலம் 2040-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகம் 34 பில்லியன் டாலராக (ரூ.2.9 லட்சம் கோடி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பிரிட்டன் இடையே 3 ஆண்டுகளாக 14 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதன் பிறகுதான் இந்தியா, பிரிட்டன் இடையிலான பேச்சுவார்த்தை வேகம் எடுத்தது. டொனால்டு ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைக்க முடியுமா என்று இரு நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. டெல்லி மற்றும் லண்டன் இரண்டுக்கும் ஒரு முக்கிய வர்த்தக பங்காளியான அமெரிக்காவுடன் இலவச வர்த்தக ஒப்பந்தங்களை நாடுகின்றன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிக பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்காக இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பொருட்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உட்பட 26 அத்தியாயங்களைக் கொண்டது இந்த ஒப்பந்தம்.

எந்தத் துறைக்கு நன்மை? - இந்த புதிய இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல், உணவு மற்றும் பானங்கள், மதுபானங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகள் அதிகம் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் விஸ்கி, சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்கிறது. ஆட்டோ இறக்குமதிக்கான இரு தரப்பு ஒதுக்கீட்டையும் இது ஒப்புக் கொள்கிறது.

பிரிட்டன் அரசும், இந்தியாவும் இப்போது 90% இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைக்கும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் 85% இறக்குமதி வரியற்றதாக மாறும். ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின் மீதான குறிப்பிடத்தக்க வரிக் குறைப்புகளை பிரிட்டன் சுமார் 50% ஆகவும், இந்தியாவுக்கான கார் ஏற்றுமதியை ஓர் ஒதுக்கீட்டின் கீழ் 10% ஆகவும் பெற்றுள்ளது. இது ட்ரம்பின் வரிகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரிட்டனின் இரண்டு முக்கிய தொழில்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது.

ஜவுளி மற்றும் காலணிகள் போன்ற தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், தாராள வர்த்தக ஒப்பந்தம் மூலம் குறைந்த பிரிட்டிஷ் வரிகளால் பயனடைய உள்ளன. இத்துறையின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும்.

ஐ.டி. துறைக்கும் பயன்: 'டபுள் கான்ட்ரீபியூஷன் கன்வென்ஷன்' எனப்படும், ஒரே நேரத்தில் இரு நாடுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இரு நாட்டு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு பெரும் பலன் கிடைக்கும். இரு நாட்டிலும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

குறிப்பாக, இது பிரிட்டனில் பணிபுரியும் இந்திய நிபுணர்களுக்கு மூன்று ஆண்டு காலத்துக்கு சமூகப் பாதுகாப்பு கட்டணங்களை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும். இது ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் 20% சேமிக்க வழிவகுக்கும். ஐ.டி. துறையைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலக்கு பிரிட்டனில் தற்காலிகமாக பணிபுரியும் நிபுணர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளை இரட்டிப்பாக்குவதை முடிவுக்குக் கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவுக்கு அதிக பணம் அனுப்ப வழிவகுக்கும். தற்காலிகமாக பிரிட்டனில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கும், அவர்களின் முதலாளிகளுக்கும் பிரிட்டனில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இந்திய சேவை வழங்குநர்களுக்கு குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும். பிரிட்டன் சந்தையில் அவர்களின் போட்டித்தன்மையை அதிகரிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்த விலக்கு காரணமாக சுமார் 4,000 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- sunilsubramaniam27@gmail.com

SCROLL FOR NEXT