திருச்சி என்று சொன்னால் மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி நினைவுக்கு வருமோ அப்படி அந்த மாநகரின் மற்றொரு அடையாளம்தான் திருச்சி சாரதாஸ்..! இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான சாரதாஸ், கடந்த 1969-ல் மணவாளன் பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது.
அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றளவும் இளமையோடு நிலைத்திருப்பதற்கு அதன் ஆகச்சிறந்த வணிக நடைமுறையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும்தான் அடிப்படை காரணம். சிறிய அளவில் தோற்றுவிக்கப்பட்டு இன்று தென்னிந்தியாவில் ஜவுளி விற்பனையில் தனி அடையாளமாக விளங்குவதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் அதன் நிறுவனரான காலஞ்சென்ற மணவாளன்.
திருச்சி மாவட்டத்தின் ஓமாந்தூர் கிராமத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்து ஆசியாவில் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மணவாளன், ஆன்மிக செம்மல், மக்களின் வணிகர் என்றும் அறியப்படுகிறார். எளிமை, நேர்மை, கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக அவரது சகாக்களால் சுட்டிக்காட்டப்படுபவர்தான் திருச்சி சாரதாஸ் நிறுவனர் மணவாளன். ‘முதலாளி தான் கடைசி தொழிலாளி' எனும் தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தவர்.
'வாடிக்கையாளர்கள்தான் தெய்வம்' என்று அடிக்கடி கூறும் அவர், பணியாளர்களை தனது குடும்பத்தில் ஒருவராக கருதி அவர்களுக்கு தேவையானவற்றை, காலம் அறிந்து கொடுத்து உதவியதை இன்னும் நினைவு கூர்கின்றனர் அவரால் பயனடைந்த பலர். கடைதான் உலகம், அவரது பணியாளர்கள்தான் தனது பிள்ளைகள் என எண்ணி வாழ்ந்த அவர், தமிழகத்தில் பல தொழிலதிபர்கள் உருவாக காரணமாக இருந்தவர். இதற்கு சில உதாரணங்களாக எம்சிஆர், ராம்ராஜ் போன்ற நிறுவனங்களை கூறுகின்றனர்.
வயோதிக காலத்திலும் வாடிக்கையாளர்களுடன் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு சேவையாற்றுவதில் மன நிறைவை கண்டவர். இதனால்தான் நாட்டின் பல பகுதிகளின் வாடிக்கையாளர்கள் தலைமுறைகள் பல கடந்தும் சாரதாஸ் என்ற பந்தத்துடன் இணைந்து நிற்கின்றனர்.
மணவாளன் பிள்ளையின் மகன்கள் ரோஷன், ஷரத் ஆகியோர், தந்தையின் வழியை பின்பற்றி இன்றைய தலைமுறையினரின் தேவையறிந்து அவற்றை நிறைவு செய்து வருகின்றனர். தங்களின் தந்தை பற்றிய நினைவலைகளை அவர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து..
திருச்சியில் மண்ணச்சநல்லூருக்கு அருகேயுள்ள ஓமாந்தூர் கிராமம்தான் அப்பா மணவாளனின் சொந்த ஊர். சுறுசுறுப்புக்கு பெயர் போனதால் எங்களது குடும்பத்தை ‘சுள்ளெரும்பு குடும்பம்' என்றுதான் அழைப்பார்கள். ஆரம்ப காலகட்டத்தில் அப்பாவின் கடின உழைப்பை பார்த்து ‘இவர் பின்னாளில் பெரியஆளாக வருவார்' என எங்கள் ஊர் மக்கள் முன்கூட்டியே கணித்துள்ளனர். பெரிய அளவில் படிக்கவில்லை என்றாலும் அவருக்கு 5 மொழிகள் தெரியும்.
‘ஆள் பாதி ஆடை பாதி' என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஆடையும் முக்கியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். கடந்த 1946-ம் ஆண்டு தனது 13-வது வயதில் மாட்டை விற்று கிடைத்த 10 ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு தனது மூத்த அண்ணனுடன் சேர்ந்து இலங்கைக்கு பயணமானார்.
அங்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளை முதலீடாக்கி அந்த பணத்தைக் கொண்டு இலங்கையில் 1955-ல் நாவலப்பட்டி என்ற ஊரில் முதன் முதலாக சாரதாஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையை ஆரம்பித்தார். அதன்பிறகு 1957-ல் கொழும்புவில் புதிய கடையை தொடங்கினார்.
1963-ல் மீண்டும் தாய் மண்ணுiக்கு திரும்பி திருச்சி என்எஸ்பி சாலையில் இருந்த அம்பீஸ் கபே ஓட்டலை வாங்கி இப்போதுள்ள சாரதாஸ் நிறுவனத்தை 15-10-1969-ம் ஆண்டு சாதாரணமாக தொடங்கினார். கடன் கிடையாது, அதுபோல் பேரமும் கிடையாது என்று துணிச்சலாக கூறி ஜவுளி தொழிலில் இறங்கிய முதல் நபராக இருந்தார் எங்களது தந்தை.
எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ற வகையில் வணிகத்தை விரிவாக்கினார். இதனால் அவரை ‘ரீடெயிலின் தந்தை' என்றே அழைக்கத் தொடங்கினர். செய்யும் தொழிலை பயபக்தியுடன் செய்தால் சிகரத்தை தொடலாம் என்பது அவரது வாழ்க்கையிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். சாரதாஸின் விலையும், ரகமும் வேறு எங்கும் கிடைக்காது என்ற நம்பிக்கையை மனதில் விதைத்ததன் விளைவாகத்தான் இன்றும் வாடிக்கையாளர்கள் நான்கு திசைகளிலிருந்தும் திருச்சியை நோக்கி வருவதற்கான அடித்தளம்.
ஒரு நிறுவனத்தின் முதுகெலும்பு பொருட்களை கொள்முதல் செய்வதுதான் என்று கூறும் எங்களது தந்தை, தரமான பொருட்களை நாடு முழுவதும் தேடி ஓடி குறைந்த விலையில் கொள்முதல் செய்வதில் வல்லவர். பில்வாரா, சூரத், பெங்களுரு, மும்பை என நகரம் நகரமாக சுற்றித்திரிந்து நவீன பேஷன் ஆடைகளை தேடிப்பார்த்து அதனை உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்தி விலைக்கே நேரடியாக வாங்கி வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதை சாரதாஸின் தனி பாணியாக்கினார்.
1980-2006 வரை உற்பத்தியாளர்களிடமிருந்து கடைக்காரர்கள் நேரடியாக கொள்முதல் செய்யமுடியாத சூழலே இருந்தது. இதனை மாற்றிக்காட்ட லட்சக்கணக்கில் பெரிய பெரிய ஆர்டர்களை எடுத்த கையோடு அதற்கான பணத்தையும் உடனடியாக கொடுத்து புதிய பாதையை உருவாக்கி காட்டியவர். கடையில் வேலை செய்பவர்களை ஊழியர்களாக பார்க்காமல் கடைசி வரை தம் மக்களாகவே நினைத்து, முகம் பார்த்து உணவளித்தது, தலை முறை தாண்டியும் இன்றும் சாரதாஸ் பணியாளர்களின் நினைவில் நிற்கிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிக வாடிக்கையாளர்களை வரவழைத்து பெரும் லாபம் பார்ப்பதுதான் நிறுவனங்களின் வாடிக்கை. ஆனால், அதிலிருந்து விலகி கடையை மூடி, பகுதி பகுதியாக விற்பனை உத்தியை கையாண்டவர் அப்பா மணவாளன். இதற்கு அவர் கூறும் 3 காரணங்கள் முக்கியமானது. ஒன்று வாடிக்கையாளர்கள் நெரிசல் இல்லாமல் தங்களுக்கு பிடித்ததை வாங்க வேண்டும். இரண்டாவது தங்களது பணியாளர்கள் சாப்பிட இடைவேளை கிடைக்க வேண்டும். மூன்றாவது நம்மை சுற்றியுள்ள மற்றவருக்கும் வியாபாரம் நடக்க வேண்டும்.
பணம் இவற்றுக்கு அப்பாற்பட்டதுதான் என்று கூறுவார். அவரின் இந்த நல்ல நோக்கங்களை கண்டு நாங்கள் வியந்து பார்த்ததுண்டு. வாடிக்கையாளர்தான் முதலாளி. அவர்கள் கொடுக்கும் காசில்தான் நாம் வாழ்கிறோம். எனவே, அவர்கள் மனம் வருத்தப் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அதேபோன்று, ஆன்மிகத்திலும் அளவு கடந்த நாட்டம் கொண்டவர். பல்வேறு திருப்பணிகளை முன்னின்று நடத்தி வைத்தவர் என்கின்றனர் அவரது மகன்கள்.
நேற்று தொடங்கிய கடைகள் கூட பல்வேறு ஊர்களில் கிளைகளைப் பரப்ப ஆர்வம் காட்டி வரும் நிலையில் சாரதாஸ் அதிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அகலமாக போவதைவிட ஆழமாக போக வேண்டும் என்பதில் தெளிவாக இருந்த அவர், பல்வேறு ஊர்களில் இருந்து நம்ம கடையை பார்க்க கூட்டம் கூட்டமாக வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அதை நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்கிறார்கள் அவரது மகன்கள்.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் சாரதாஸ் நிறுவனர் மணவாளன். அதனால்தான் இறைப்பணி, கல்வி, மருத்துவம், மரக் கன்றுகள் நடுதல், ஆதரவற்றோருக்கான சேவை என ஏராளமான உதவிகளை சத்தமின்றி அவர் செய்து வந்துள்ளார்.
கடையை கோயிலாகவும், அங்கு வரும் வாடிக்கையாளர்களை தெய்வமாகவும் போற்றி சேவை செய்த மணவாளன் தனது 91 வயதில் (30-04-2024) இவ்வுலகை விட்டு மறைந்தார். ஆனாலும் வாடிக்கையாளர்களின் மனதில் இன்னும் அவர் நீங்காமல் வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாரதாஸை மறக்காமல் படையெடுத்து வரும் மக்களே சாட்சி.
- rajanpalanikumar.a@hindutamil.co.in