வணிக வீதி

சர்வதேச பிராண்டுகளை தமிழகத்திலிருந்து உருவாக்க வேண்டும்: நிதின் அலெக்ஸாண்டர் நிறுவனர், அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ்

அ. ராஜன் பழனிக்குமார்

ஸ்டார்ட்அப் துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து அத்துறையில் ஏற்கெனவே சாதித்த ஜாம்பவான்களின் அனுபவத்தையும், ஆலோசனைகளையும் அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்ற நல்நோக்கோடு அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ், ஆண்டர்பர்னர் ஆப் மெட்ராஸ் போன்ற வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை உருவாக்கியுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த நிதின் அலெக்ஸாண்டர்.

பெண் தொழில்முனைவோருக்கான சிங்கப்பெண்ணே குழுவையும் இவர் நடத்தி வருகிறார். நிதினின் பெற்றோர் அரசு ஊழியர்கள். சென்னையில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த இவர், வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுவில் இன்று 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவருடன் உரையாடியதிலிருந்து சில பதிவுகள்..

தென்னிந்தியாவில் ஸ்டார்ட்அப் வளர்ச்சி எப்படி? - 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை மாறி தற்போது ஸ்டார்ட்அப் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் அதிகமாக உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களுடன் உரையாடுகையில் பல புதுவிதமான யோசனைகளுடன் ஸ்டார்ட்அப் களத்தில் குதிக்க அவர்கள் தயாராக இருப்பது தெரியவந்தது. அதுபோன்ற மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்லூரி மட்டுமின்றி, அரசும், எங்களைப் போன்ற வாட்ஸ் அப் கம்யூனிட்டிகளும் இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு கைகொடுத்து உதவ தயாராக உள்ளது.

தமிழக மாணவர்களை கொஞ்சம் கைதூக்கி விட்டால் போதும். அவர்கள் வானத்தையும் வில்லாக வளைக்கும் அளவுக்கு திறமையானவர்கள். நம் மாணவர்களின் கற்பனைகளுக்கு உயிர்கொடுக்க பல வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் துணிந்து முதலீடு செய்ய தயாராக உள்ளன. அதனால்தான், குஜராத், கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ஸ்டார்ட்அப் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த துறையில் புதிதாக நுழைவோருக்கு வழங்கும் ஆலோசனைகள் என்ன? - சந்தையில் நமக்கான வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தெளியவேண்டும். அதன் பிறகே ஒருவர் ஸ்டார்ட்அப் துறையில் களமிறங்குவது நல்லது. இந்த துறையில் ஏற்கெனவே சாதித்து எங்களது வாட்ஸ்அப் கம்யூனிட்டியில் இணைந்துள்ளவர்களின் அனுபவங்களை புதியவர்களுக்கு பெற்றுத் தரும் பாலமாக செயல்படுகிறோம். புதிய தொழில்முனைவோர் தங்களது தயாரிப்புகளை எங்களது கம்யூனிட்டியில் வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கான வாடிக்கையாளரையும், பிசினஸ் பங்குதாரர்களையும் அவர்களால் எளிதில் பெறமுடியும். எங்கும் தேடி அலைய வேண்டிய தேவை இருக்காது.

இதுவரை செய்த சாதனைகளாக கருதுவது? - பல்வேறு துறைகளில் கஷ்டப்பட்டு சாதித்த தொழிலதிபர்களை எங்களது கம்யூனிட்டி வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். ரூ.2,000 கோடி வர்த்தக மதிப்புள்ள மில்கி மிஸ்ட், பயர்சைடு வென்சர்ஸ் போன்ற பிரபல கம்பெனிகளின் நிறுவனர்களை இணைத்து நடத்திய சந்திப்புகளின் மூலமாக பலர் வர்த்தக வாய்ப்புகளை விரிவாக்கம் செய்து பயனடைந்துள்ளனர். சிறியது முதல் பெரியது வரையிலாக மொத்தம் ரூ.7,500 கோடி வர்த்தக மதிப்புள்ள நிறுவனங்களின் நிறுவனர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்.

ஸ்டார்ட்அப் தொழிலுக்கான தகுதி என நீங்கள் எண்ணுவது ? - தயாரிப்பு, விற்பனை இந்த இரண்டு பண்புகளில் சிறந்து விளங்கும் எவரும் ஸ்டார்ட்அப் துறையில் நட்சத்திரமாக ஜொலிக்கமுடியும். தொழில்முனைவோருக்கு தகவல் தொடர்புத் திறன் என்பது எதிர்கால அவசிய தேவை. புத்தாக்க முறையில் ஒரு தயாரிப்பை உருவாக்குவது மட்டுமல்ல அதனை சந்தைப்படுத்தும் நுட்பமான வழிமுறைகளையும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். தமது தயாரிப்பின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலான பேச்சுத்திறன் அவர்களிடம் இருக்க வேண்டும்.

இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் கதையை உதாரணமாக கூறமுடியும். ஆப்பிள் தயாரிப்புகளை கட்டமைத்தவர் ஸ்டீவ் வோஸ்னியாக். என்றாலும் அதனை தனது புதிய சிந்தனைகளின் மூலம் உலக மூலைமுடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இதனை மறுக்க முடியாது. ஒரு நாணயத்துக்கு எப்படி 2 பக்கங்கள் தேவையோ அதேபோல் தான் ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கும் தயாரிப்பை கட்டமைப்பவரும் (பில்டர்ஸ்) அதனை விற்பனை செய்பவரும் (செல்லர்ஸ்).

தயாரிப்பை மட்டும் வடிவமைக்க தெரிந்த ஒருவர் திறமையான சந்தைப்படுத்தும் ஒரு வரை இணை நிறுவனராக தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஸ்டார்ட்அப் இலக்கு எட்டப்படும். இவர்கள் இருவரையும் இணைத்து வைக்கும் பணியை எங்களது கம்யூனிட்டி செய்து வருகிறது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உங்களின் பங்கு? - அண்டர்டாக்ஸ் ஆப் கம்யூனிட்டி வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது பிஸினஸுக்கு என்ன தேவை என்பதை இந்த தளத்தின் மூலமாக சுட்டிக்காட்டுவர். அதற்கு தகுதிவாய்ந்த திறமையான நபரை எங்களின் சமூகம் அவருக்கு அடையாளம் காட்டும். அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் படிக்கும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். கம்பெனியை பதிவு செய்வது முதல் அதற்கான பணியாளர்களை தேர்வு செய்வது வரை ஸ்டார்ட்அப் எக்கோ சிஸ்டத்துக்கான முழுமையான பணிகளையும் கம்யூனிட்டி மூலமாக செய்து வருகிறோம். இதற்கான சிறப்பு சந்திப்புகளை அடிக்கடி நடத்துவதற்கும் முன்னுரிமை தந்து செயல்படுகிறோம்.

பெண் தொழில்முனைவோருக்கான சிங்கப் பெண்ணே வாட்ஸ்அப் குழுவுக்கு வரவேற்பு எப்படி? - பெண் நிறுவனர்களுக்கு ஒரு சுதந்திரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சிங்கப் பெண்ணே கம்யூனிட்டி. ஆனால், இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இன்று சென்னையில் உள்ள முன்னணி பிராண்டுகளின் பெண் நிறுவனர் எங்களுடன் இணைந்து பயணிக்கின்றனர்.

நாங்கள் நடத்தும் தொழில்முனைவோர் சந்திப்புகளில் 80 சதவீதம் ஆண்களின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. இதனால், பெண்கள் அசவுகரியமாக உணர்வதை அவர்களிடம் நடத்திய உரையாடலில் இருந்து அறிந்தோம். அதன் பிறகுதான் சிங்கப் பெண்ணே குழுவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முதலில் 20 பெண் நிறுவனர்களை மட்டுமே வைத்து நிகழ்ச்சிகளை நடத்திய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 200-ஆக அதிகரித்துள்ளது.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஸ்டார்ட்அப் துறையில் சவால்களை எதிர்கொண்டு பெண் நிறுவனர்கள் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்படவும், இக்கட்டான சமயங்களில் அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான தளமாக இது மாறியுள்ளது.

மத்திய, மாநில அரசு ஸ்டார்ட்அப் துறைக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து..? - 10 ஆண்டுகளுக்கு முன்பான நிலை இப்போது இல்லை. மத்திய, மாநில அரசுகள் புதுமையான யோசனைகளுடன் ஸ்டார்ட்அப் தொடங்க வருவோருக்கு பல்வேறு மானியங்கள், திட்டங்களை வழங்குகின்றன. குறிப்பாக, ஸ்டார்ட் அப் திட்டங்களுக்கு தமிழ்நாடு SEED பண்டாக ரூ.10 லட்சம் வரை வழங்குகிறது.

அக்ரிடெக், மொபிலிட்டி என எந்த துறையிலும் புதுமையான முயற்சியில் தொழில் தொடங்குவோருக்கு அரசு மட்டுமின்றி தற்போது கல்லூரி அளவிலும் அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோன்ற திறமையான மாணவர்களை முன்னரே கவுன்சிலிங் மூலமாக கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதற்கு தேவையான உதவிகளை கல்லூரிகள் வழங்கி வருகின்றன.

இந்த துறையில் மாணவர்களின் மனநிலை தற்போது எப்படி உள்ளது? - நல்ல புதுமையான நோக்குடன் ஸ்டார்ட் அப் துறைக்குள் நுழைந்து சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பலர் கார், பங்களா என சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த துறையில் கால்பதிக்க நினைப்பது அண்மையில் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் மூலம் தெரியவந்தது. இந்த துறையில் வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஏராளமான புறக்கணிப்புகள் இருக்கும். அத்தனையும் தாண்டி பொறுமையுடன் செயல்பட்டால்தான் வெற்றிக்கனியை பறிக்க முடியும்.

ஜெயித்தவர்களை பார்த்து நாமும் அவர்களைப் போல உடனடியாக உலக பிரபலமாகி விடலாம் என்பது மாணவர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், ஜெயித்தவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடினமான உழைப்பையும் நாம் அலசிப் பார்த்து ஆராய வேண்டும். மாணவர்களிடம் இதுகுறித்த தெளிவையும், விழிப்புணர்வையும் எங்களது கம்யூனிட்டி வாயிலாக ஏற்படுத்தி வருகிறோம்.

அதேநேரம், திறமையான மாணவர்களின் தொழில் கனவுக்கு கை கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் உட்பட எல்லா கல்லூரிகளும் இன்குபேஷன் சென்டர்களை பிரத்யேகமாக உருவாக்கி அவர்களுக்கு வழி காட்ட காத்திருக்கின்றன. கூடுதலாக எங்களைப் போன்ற தனியார் குழுக்களும் திறமையான மாணவர்களை உலகுக்கு அடையாளம் காட்டுவதற்காக உழைத்து வருகின்றன.

உங்கள் பார்வையில் ஸ்டார்ட்அப்பின் எதிர்காலம்? - இந்தியாவைப் பொருத்தவரையில் தனிநபர் வருவாய் உயர்ந்து வாங்கும் சக்தி அதிகரித்து வருகிறது. இதனால், நுகர்வோரை மையப்படுத்திய பொருளாதாரம் தற்போது பலமடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. பல சர்வதேச பிராண்டுகள் இந்தியாவை நோக்கி படையெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம். எனவே உற்பத்தி சார்ந்த பொருளாதார ஸ்டார்ட்அப்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோன்று, ஏஐ தொழில்நுட்பம் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருவதால் அதுதொடர்பான ஸ்டார்ட்அப்களுக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

எப்படி இருப்பினும், இந்த துறையில் நுழையதுடிக்கும் மாணவர்களின் நோக்கம் என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கும் தயாரிப்பு மக்களுக்கு இடையிலும், சமுதாயத்துக்கு இடையிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். எலான் மஸ்க், மார்க் ஸுகர்பெர்க் ஆளுமைகள் போல தோல்விகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்போர் மட்டுமே ஸ்டார்ட்அப் உலகில் நுழைய ஆசைப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

உங்கள் பயணத்தின் இலக்கு? - அடுத்த 5 ஆண்டுகளில் அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ் மூலம் குறைந்தபட்சம் 10,000 தொழில் முனைவோர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து 200 பிராண்டுகளை தேசிய, சர்வதேச அளவில் பிரபலமடைய செய்ய வேண்டும் என்பது எங்களின் முக்கிய இலக்கு.அதேபோல, இந்த துறையில் 1,000 மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்கான முன்முயற்சிகளை தொய்வின்றி தொடருவோம் என்கிறார் நிதின் கண்களில் நம்பிக்கை மிளிர.

- rajanpalanikumar.a@hindutamil.co.in

SCROLL FOR NEXT