ஏப்ரல் மாதம் நெருங்கும் நிலையில், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தயாராகி வருகின்றன. இதனிடையே, வரும் நிதியாண்டு முதல் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பால் ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனிடையே, 2025-ல் இந்திய நிறுவனங்களில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு குறித்து ராண்ட்ஸ்டாட், மூடிஸ் போன்ற நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலேயே அதிக சம்பள வளர்ச்சியுடன் இந்தியாவின் கார்ப்பரேட் துறை முன்னிலை வகிக்கிறது. மனிதவள ஆலோசனை நிறுவனமான ராண்ட்ஸ்டாட், சமீபத்தில் வெளியிட்ட 'இந்தியாவில் சம்பளப் போக்கு அறிக்கை'யில், 2025-ல் இந்தியாவில் சராசரியாக 9.5% சம்பள உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2024 நவம்பரில் மூடிஸ் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் அதிகரிக்கும் நுகர்வு, குறையும் பணவீக்கத்தால் 7.2% GDP வளர்ச்சியை கணித்திருந்தது. எனினும், இந்த கணிப்பு பின்னர் குறைக்கப்பட்டது.
அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலரைக் கடந்து 7 ட்ரில்லியன் டாலரை நெருங்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வின் பின்னணியில் பொருளாதார நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம், பணியாளர் தக்கவைப்பு உத்திகள், அரசின் துணிகர கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகள் உள்ளன. 2026-ல் ஜப்பான், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னிலை வகிக்கும் துறைகள்: விளம்பரம், சந்தை ஆராய்ச்சி, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் இளநிலை ஊழியரின் சிடிசி அடிப்படையிலான சம்பளம் (மொத்த ஊழியர் செலவு) ஆண்டுக்கு ரூ.7.04 லட்சமாக அதிகரித்திருக்கிறது. நடுத்தர நிலை ஊழியர் சம்பளம் ரூ.21.94 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது 2023-ம் ஆண்டைவிட 26% அதிகம். டிஜிட்டல் மயமாக்கல், ஏ.ஐ. புரட்சி, சமூக ஊடகங்களின் ஆதிக்கமும் இத்துறையை வேகமாக உயர்த்துகின்றன.
வங்கி, நிதிச் சேவைகள், இன்சூரன்ஸ், எரிசக்தி & பயன்பாடுகள், உள்கட்டமைப்பு & கட்டுமானம் ஆகிய துறைகளில் அனைத்து மட்டங்களிலும் கவர்ச்சிகரமான ஊதியம் வழங்கப்படுகின்றன. எரிசக்தி, சுகாதாரம், உற்பத்தி, அதிகமாக விற்கும் நுகர்வு பொருட்கள் (எப்எம்சிஜி), தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் வேலை வாய்ப்புச் சந்தையில் வலுவான இடத்தைப் பிடித்திருக்கின்றன.
ஊடகம் & பொழுதுபோக்கு துறை எல்லா நிலைகளிலும் எழுச்சியைக் காட்டுகிறது. இளநிலை ஊழியர் மட்டத்தில், சராசரி சம்பளம் டயர்-1 நகரங்களின் தேசிய சராசரியைவிட 23% அதிகமாக உள்ளது. நடுத்தர மட்டத்தில் 9% உயர்வும், முதுநிலை ஊழியர்களின் சம்பளம் நகரங்களுக்கு தகுந்த வகையில் 4 முதல் 12% வரையிலான உயர்வும் காணப்படுகிறது.
டிஜிட்டல் மீடியா, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கேமிங் துறைகள் 2023-26 காலகட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10% (சிஏஜிஆர்) வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையம், இ-காமர்ஸ் துறை, ஸ்மார்ட்போன் பரவல், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றம், நுகர்வோரின் ஆன்லைன் ஷாப்பிங் ஆர்வம் ஆகியவற்றால் 2024-ல் 23.8% வளர்ச்சியையும், 2028-க்குள் 18.7% சிஏஜிஆர்-ஐயும் எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக சம்பள உயர்வில் சுகாதாரத் துறை முன்னிலை வகிக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு, ஆராய்ச்சி, மருந்து கண்டுபிடிப்பு, நோய் அறிதல் மற்றும் உற்பத்தி நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஏ.ஐ., மெஷின் லேர்னிங்..: தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) வணிக உலகின் இயக்கச் சக்தியாக மாறியுள்ளது. புதுமை, டிஜிட்டல் மாற்றம், வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் செயல்திறன் மேம்பாட்டின் அடித்தளமாக செயல்படுகிறது. ஏ.ஐ., மெஷின் லேர்னிங், சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஒழுங்குமுறை இணக்கம், ரிஸ்க் மேலாண்மை மற்றும் நிதி குற்றத் தடுப்பு ஆகியவற்றில் நிபுணர்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்கப்படும் என்பது தெரிந்ததே. பெங்களூரு, மும்பை போன்ற பெரியமையங்களுடன் அகமதாபாத், சென்னை, ஹைதராபாத் ஆகியவையும் சம்பள உயர்வில் முன்னணியில் உள்ளன. சூரத், நாசிக், புவனேஸ்வர், மைசூரு போன்ற நகரங்கள் வேலைவாய்ப்பு மற்றும் சம்பளத்தில் முன்னேறி வருகின்றன.
பொருளாதார வளர்ச்சியின் புதிய பாதை: 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி பயணிக்கிறது. பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி இந்தியாவை ஆசியாவின் மையமாக மாற்றுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டம் செமி கண்டக்டர், மின்னணுவியல் துறையில் தன்னிறைவை உருவாக்குகிறது.
பசுமை ஆற்றல் துறைகளில் முதலீடுகள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. திறன் மேம்பாட்டு திட்டங்கள் இளைஞர்களை சர்வதேச தரத்துக்கு தயார்படுத்துகின்றன. சம்பளத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப், ஹைபிரிட் வேலை முறைகள் புதிய வேலைச் சூழலை உருவாக்குகின்றன. இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டான 2047, பொருளாதார மறுமலர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
- somasmen@gmail.com