இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனிநபர் நுகர்வுச் செலவின் பங்கு சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த நுகர்வில் உணவுப் பொருள்களுக்கென அவர்கள் செலவிட்ட தொகை சுமார் 47% ஆகவும் இதரப் பொருள்களின் மீது செலவிட்ட தொகை 53% ஆகவும் இருந்தன. இது நகர்ப்புற மக்களிடையே முறையே 40%, 60%-ஆக இருந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
'டெலாய்ட் இண்டியா' என்கிற ஆலோசனை நிறுவனமும், ரீடெயிலர்ஸ் அசோஷியேசன் ஆஃப் இண்டியாவும் இணைந்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில், இந்தியாவில் தனிநபர் நுகர்வானது 2013-ம் ஆண்டு 1 ட்ரில்லியன் டாலராக இருந்தது எனவும் 2024-ம் ஆண்டு இது 2.1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கடந்த 11 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 7.2 % வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. இது நுகர்வில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடைந்த வளர்ச்சியைவிட அதிகமாகும்.
இளைய தலைமுறையினரை அதிகம் கொண்ட இந்தியாவால் உலகிலேயே மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாக மாற முடியும். ஆனால் `டெமோகிராஃபிக் டிவிடெண்ட்’ என அறியக் கூடிய மக்கள் தொகை பலனைப் பெறுவதற்கு வேலை வாய்ப்புக்கும், திறன் நெருக்கடிக்கும் தீர்வு காண்பது அவசியமாகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக மெதுவாக ஆனால் நிலையாக அதிகரித்து வந்த தனிநபர் வருமானமும் பேரார்வம் கொண்ட இளைஞர்களின் வளர்ச்சியும் நுகர்வோர் பொருள்களுக்கான சந்தை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வர உதவியது.
இன்றைக்கு நம் நாட்டின் ஜிடிபி அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்து 5-வது இடத்தில் உள்ளது. மற்ற நாடுகளைவிட நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது. இந்த நிலை தொடரும்பட்சத்தில் அடுத்த ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக யுபிஎஸ் செக்யூரிட்டீஸின் அறிக்கை கூறுகிறது.
தொழில் துறைகளை அவதானித்து வரும் ஆலோசகர்கள், இந்தியா இப்போது மிகு வளர்ச்சிப் புள்ளியில் (tipping point) இருப்பதாகவும் இதனால் அடுத்த தசாப்தத்தில் 3-ம் இடத்தில் உள்ள ஜெர்மனியையும் 4-ம் இடத்தில் உள்ள ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறிச் செல்லக்கூடும் எனவும் கணித்திருக்கிறார்கள்.
நுகர்வோர் செலவு செய்வதைப் பொறுத்தவரையில் இப்போது 4-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2030-களின் தொடக்கத்தில் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுக்கும் எனவும் கூறி வருகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வரும் நடுத்தர வகுப்பு, உயர் நடுத்தர வகுப்பினரின் (upper middle class) செலவும் சுமார் 46% அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இது 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வருமான வரிச் சலுகைக்கு முன்பே மதிப்பிடப்பட்டதாகும். எனவே, அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைக்குப் பிறகு மக்களின் செலவழிக்கும் திறன் மேலும் அதிகரித்து நுகர்வோர் சந்தையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
உலகப் பொருளாதார அமைப்பின் தரவுகளின்படியும் இந்த மதிப்பீடு ஒன்றும் மிகையில்லை எனத் தெரிய வருகிறது. ஏனெனில், இந்தியாவில் 2005-ம் ஆண்டு உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1.7 கோடி. இது 2018-ல் நான்கு மடங்கு அதிகரித்து 6.9 கோடியானது. 2030-க்குள் இது மேலும் 185% அதிகரித்து 19.7 கோடி, அதாவது, இந்திய மக்கள் தொகையில் சுமார் 7% குடும்பத்தினர் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இந்தியர்களின் சராசரி வயது 30: ஓரிரு ஆண்டுகளாக நுகர்வோர் பொருள் சந்தையின் வளர்ச்சி ஓரளவு மந்தமாக இருந்து வந்தாலும், இந்தக் கணிப்புகள் எல்லாம் இத்துறை சார்ந்த நிறுவனங்களை அதன் வளர்ச்சி சார்ந்து கனவு காண வைத்திருக்கின்றன. "நீண்ட காலத்துக்கான மாற்றுப் புள்ளி (inflection point) தெளிவாகத் தெரிகிறது" என நாட்டின் முன்னணி நுகர்பொருள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவரின் நிர்வாக இயக்குநர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதிகரித்து வரும் வருமானம், டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்புகளை அணுகுவதில் ஏற்பட்டிருக்கும் மேம்பாடு, இந்தியர்களின் சராசரி வயது 30 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பது போன்றவையும் இந்த வளர்ச்சிக்கு உதவும் என்பது அவரது கருத்தாகும். இதுபோல `இளைஞர்களை அதிகமாகக் கொண்ட இந்திய சமுதாயம் உலகத்தில் மிகப் பெரிய நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது’ என மற்றொரு நுகர்பொருள் உற்பத்தியாளரான மாரிக்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் கூறியிருக்கிறார்.
நகரமயமாக்கல் 40% ஆக அதிகரிக்கும்: அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரமயமாக்கலும் நுகர்வோர் பொருள்களின் சந்தை வளர்ச்சிப் போக்குக்கு உதவும் என பல தரவுகள் தெரிவிக்கின்றன. 2030-ம் ஆண்டுவாக்கில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 40% பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2005-ல் இது 28% ஆகவும் 2018-ல் 34% ஆகவும் இருந்தது. நம் நாடு மொத்த மக்கள் தொகையில் மட்டுமல்லாமல் இளம் வயது நுகர்வோர்களை அதிகமாகக் கொண்ட நாடாகவும் இருந்து வருகிறது.
2018-ல் மொத்த மக்கள் தொகையில் சுமார் 82% பேரின் சராசரி வயது 50 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2030-ல் 77% அளவுக்குக் குறையும் எனத் தெரிகிறது. 15-லிருந்து 49 வயதுக்குட்பட்டோர் எண்ணிக்கை சுமார் 53% இருக்கும் எனவும், அமெரிக்காவில் இவ்வயதைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 45% ஆகவும் சீனாவில் இது 44% ஆகவும் இருக்கும் எனவும் தெரிகிறது.
இன்னொரு முக்கியமான போக்கு என்னவெனில் ஸ்மார்ட்போன் மூலமாக தகவலை அணுகுவதும், இண்டெர்நெட் அணுகலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நன்கு பிரபலமான நிறுவனங்களிடமிருந்து தரம் மிக்க சிறந்த பொருள்களுக்கான விருப்பமும் அதிகரித்து வருகிறது. `வளர்ச்சி என்பது விலை அதிகமாக இருக்கும் பொருள்களை வாங்குவதன் மூலமும் (premiumization) புதிய பொருள் வகைமைகளை ஏற்றுக் கொள்வதன் மூலமும் வரக்கூடியதாகும்’ என நெஸ்லே நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
பணவீக்க சவால்கள்: நுகர்வோர் பொருள்களின் சந்தை வளர்ச்சி அடைய நேர்மறையாக பல காரணிகள் இருந்தாலும் சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. சமீப காலமாக நிலவும் பணவீக்கம், அதிகரித்து வரும் வேலையின்மை காரணமாக, சில காலாண்டுகளாக கிராம, நகர்ப்புற சந்தைகளின் நுகர்வு வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கின்றன. 2023-ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 7.3% ஆக இருந்த வருடாந்திர வளர்ச்சி 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 1.9% அளவுக்கு சரிந்திருக்கிறது. அதன்பின் டிசம்பர் காலாண்டில் வளர்ச்சியானது 5% என்கிற நிலையைத் தொட்டது.
வளர்ச்சியை தடுக்க முடியாது: இந்தியாவின் நுகர்வோர் பொருள்கள் சந்தையில் கிராமப்புறங்களின் பங்கு 36% ஆக உள்ளது. கடந்த சில காலாண்டுகளாக கிராமப்புறச் சந்தையின் வளர்ச்சியிலும் சுணக்கம் நிலவி வருகிறது என பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன் ஐக்யூ (NielsenIQ) அறிக்கை கூறுகிறது. இந்த அறிகுறிகள் எல்லாம் குறுகியகால அளவைக் கொண்டது. 2025-26 நிதியாண்டில் அமலுக்கு வர உள்ள புதிய வருமான வரிச் சலுகையானது நுகர்வோரின் கைகளில் ஓரளவுக்கு அதிக பணப்புழக்கத்துக்கு வழி வகுக்கும்பட்சத்தில் அவர்கள் செலவு செய்யும் திறனும் அதிகரிக்கும்.
அதன் மூலம் இத்துறை நல்லதொரு வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நிதிநிலை அறிக்கையின் சில கொள்கை அறிவிப்புகளின் மூலம் வேலைவாய்ப்பும், நகரமயமாக்கலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதும் அதிகரிக்கும்பட்சத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட இந்தக் காரணிகளால் உணவுப் பொருள்கள், டீ, காபி போன்ற பானங்கள், துணிகள், தனிநபர் ஆரோக்கியம் சார்ந்த பொருள்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரிக்கக்கூடும். நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் தற்காலிகமாக சில குறைபாடுகள் இருந்தாலும் அவற்றின் மீது கவனம் கொண்டு தீர்வு காணும்பட்சத்தில் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதோடு நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வோர் என இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் தொழில் துறைகள் கண்டிப்பாக இனி வரும் ஆண்டுகளில் செழிக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்.
- sidvigh@gmail.com