கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஒரு முக்கியமான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. இது, சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்புடையது.
அதுவே, ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. கனவு காண்பது மட்டும் போதாது, அதை உண்மையாக்க கடின உழைப்பு தேவை என்பதை தெளிவுபடுத்தி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், ‘உங்கள் கனவுகளை உயர்த்துங்கள், உழைத்திடுங்கள், வாழ்க்கையும் உயர்ந்திடும்' என இளைஞர்களிடம் அடிக்கடி அறிவுறுத்தினார்.
2047-ம் ஆண்டுக்கு இன்னும் 22 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. அப்போது, இன்றைய நடுத்தர வயதைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் சுறுசுறுப்பான வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். “சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைப் போல என் நாடு வளமாக இருப்பதை நான் பார்ப்பேனா” என்று அவர் கேட்பார்.
20 வயதுடைய ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் “அடுத்த மூன்று ஆண்டுகளில் நான் வேலைச் சந்தையில் நுழைவேன், பொறியியலில் முதுகலை பட்டம் அல்லது ஏதேனும் தொழில்நுட்பத் தகுதியுடன் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா, பின்னர் நான் குடும்ப வாழ்க்கையை தொடங்க முடியுமா?” என்று கேட்பார்.
இந்தக் கேள்விகளை ஆராய்வதற்கு முன்பு, வளர்ந்த நாடு என்பதன் வரையறைகளையும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைத் தவிர்த்து, இன்றைய நவீன நாடுகள், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில், உலகின் ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் எவ்வாறு இருந்தன என்பதையும் ஆராய்வோம்.
சராசரி தனிநபர் வருமான வரையறை: உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி அதன் உறுப்பு நாடுகளை நான்கு குழுக்களாக தனிநபர் சராசரி (Percapita) வருமானத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது. 2024-ம் ஆண்டு நிலவரப்படி குறைந்த வருமானம் (1,145 டாலருக்கு கீழ்), குறைந்த நடுத்தர வருமானம் (1,146 முதல் 4,515 டாலர் வரை), உயர் நடுத்தர வருமானம் (4,516 முதல் 14,005 டாலர் வரை) மற்றும் உயர் வருமான நாடுகள் (14,006 டாலருக்கு மேல்) என தனிநபர் சராசரி வருமானத்தின் அடிப்படையில் வரம்புகள் விதிக்கப்படுகின்றன.
இது முந்தைய ஆண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது. பணவீக்கத்தின் விளைவுகள் நீக்கப்படுவதால், அவை பொருளாதார வல்லுநர்களால் உண்மையான தனிநபர் வருமானம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையான வருமானம், பெயரளவு (nominal) வருமானத்திலிருந்து பணவீக்கத்தின் விளைவுகள் நீங்க வேறுபட்டவை.
குறைந்த நடுத்தர வருமான நாடு: 1980-ம் ஆண்டு விலை மட்டத்தில் உண்மையான சராசரி தனிநபர் வருமானப்படி, 1980-ல் இந்தியா குறைந்த வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டது. அது 2007-ல் குறைந்த நடுத்தர வருமான நாடாக மாறியது, 2023 நிலவரப்படி தனிநபர் வருமானம் 2,540 டாலராக உள்ளது. 2024 விலை மட்டத்தின் அடிப்படையில், அது உயர் நடுத்தர வருமான நாடாக மாற 4515- டாலரைக் கடக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானம் 2029-ம் ஆண்டில் 4,195 டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது உயர் நடுத்தர வருமான வரம்புக்கும் ($4,516) குறைவு ஆகும். 2029-ஐ அடைய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. 2029-ம் ஆண்டை முதலில் அடைந்து, உயர் நடுத்தர வருமானக் குழுவைதொட்டு, பிறகு 2047 வரை தொடர்ந்து உயர் வருமானக் குழுவில் உறுப்பினராக தகுதி பெற மிகக் கடினமாக உழைக்க வேண்டும். பணக்கார நாடு என்று பெயர் வேண்டும் என்பது ஒரு கனவுதான்.
7.8% சராசரி வளர்ச்சி தேவை: உலக வங்கி, ‘ஒரு தலைமுறையில் உயர் வருமானம் கொண்ட பொருளாதாரமாக மாறுதல்' எனும் அறிக்கையில் இது சாத்தியம் என்று கூறுகிறது. அதாவது உயர் வருமான நிலையை அடைய அடுத்த 22 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 7.8% வளர்ச்சியடைய வேண்டும் என்கிறது. 2000 மற்றும் 2024-க்கு இடையில் இந்தியாவின் வேகமான வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.3 சதவீதமாக இருப்பதை அங்கீகரித்து, இந்தியாவின் கடந்தகால சாதனைகள் அதன் எதிர்கால லட்சியங்களுக்கு அடித்தளத்தை வழங்குகின்றன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
10 ஆண்டில் ஜிடிபி 4 மடங்கு உயர்வு கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பாராட்டத்தக்க வளர்ச்சியடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4 மடங்கும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 மடங்குமாக அதிகரித்துள்ளது. உலகப்பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2000-ம் ஆண்டில் 1.6 சதவீதமாக இருந்தது. இது 2023-ல் 3.4 சதவீதமாக (இரு மடங்கு) உயர்ந்துள்ளது.
ஜிடிபி அடிப்படையில் இந்தியா உலகின் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் கதையில் தீவிர வறுமையின் செங்குத்தான சரிவும், சேவை வழங்கல் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு விரிவாக்கமும் அடங்கும். இந்த சாதனைகளின் அடிப்படையில், இந்தியா 2047-க்குள் உயர் வருமானம் கொண்ட நாடாகமாற வேண்டும் என்ற இலக்கை அமைத்துள்ளது. இலக்கை அடைய மேலும் சில சீர்திருத்தங்கள் தேவைப்படும். மேலும், அவற்றை செயல்படுத்துவது இலக்கைப் போலவே கடினமாகவும் இருக்கும்.
உலக வங்கியின் பரிந்துரைகள்: கடந்த மூன்று நிதியாண்டுகளில் இந்தியா தனது சராசரி வளர்ச்சி விகிதத்தை 7.2 சதவீதமாக அதிகரித்ததை தக்கவைத்து, அடுத்த இரண்டு தசாப்தங்களில் (Decades) சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் எனவும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக மாறுவதற்கு இந்தியா அடுத்த 22 ஆண்டுகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் உலக வங்கி பின்வரும் பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
* மாநிலங்கள் அனைத்தும் விரைவான வளர்ச்சியை அடைவது;
* தற்போதைய ஜிடிபி மதிப்பி ல் 33.5% பங்கு வகிக்கும் முதலீட்டை (அரசு, தனியார் உட்பட) 2035-க்குள் 40% ஆக உயர்த்துவது;
* தொழிலாளர் பங்கேற்பை 56.4%லிருந்து 65%-க்கு மேல் அதிகரித்தல்;
* ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்; உலக வங்கி குறிப்பிட்ட படிகள்
* மனித மூலதனத்தில் முதலீடு, (கல்வித் துறை வளர்ச்சியில், முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் அதற்கு மேல் உயர் நிலைகளில் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி திறன்கள் உட்பட) செய்வதன் மூலம் இந்தியா தனது மக்கள் தொகை ஈவுத் தொகையை (DIVIDEND) பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வேலைகளுக்கான சூழ்நிலைகளை (அனைத்து மட்டங்களிலும் மகளிருக்கான பாதுகாப்பு) உருவாக்கி, மகளிர் பங்கேற்பு விகிதங்களை 35.6%இருந்து 2047-க்குள் 50% சதவீதமாக உயர்த்தலாம்.
* நிதித்துறை விதிமுறைகளை வலுப்படுத்துதல்.
* குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) முறையான கடனுக்கான தடைகளை நீக்கலாம்.
* அந்நிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கைகளை எளிமையாக்கலாம்.
புதிய வழிமுறைகள்: மேற்கண்ட முக்கியமான படிகளைக் குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல், புதிய வழிமுறைகளும் உள்ளன. வியட்நாம் (73 சதவீதம்) மற்றும் பிலிப்பைன்ஸ் (60 சதவீதம்) போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (56.4%) குறைவாக உள்ளது.
வேளாண் செயலாக்க உற்பத்தி (processed production), விருந்தோம்பல் (Hospitality Services), முதியோர் கவனிப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற வேலைகள் நிறைந்த துறைகளில் முதலீடு செய்ய தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது. தற்போது வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 45 சதவீதமாக உள்ளது.
உற்பத்தி மற்றும் சேவைகள் போன்ற அதிக உற்பத்தித் துறைகளுக்கு நிலம், உழைப்பு மற்றும் மூலதனத்தை ஒதுக்கீடு செய்தால் தொழிலாளர் உற்பத்தித் திறனை உயர்த்த முடியும். உலக வங்கியின் மேற்கண்ட பரிந்துரைகளை அமல்படுத்தினால், 2047-க்குள் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
- tkjayaraman@yahoo.com