கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆஸ்டெக் பணியிட பகிர்வு அலுவலகம் நடத்தி வரும் அசீமா, அவரது கணவர் சையத் அசார். | படம்: ஜெ.மனோகரன் | 
வணிக வீதி

அலுவலக சூழலில் புதிய பரிமாணம் அதிகரித்து வரும் பணியிட பகிர்வு மையங்கள்

ஆர்.ஆதித்தன்

கரோனா பெருந்தொற்று காலத்தில் அலுவலகங்கள் பணியிட சவால்களை எதிர்கொண்ட நிலையில், செலவு குறைந்த கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணியிட பகிர்வு மையங்கள் அதிகரித்து வருகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதல் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) வரை இத்தகைய மையங்களை நாடி வருகின்றனர்.

பணியிட பகிர்வு மையம் என்பது பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரே இடத்தில் பணி புரிவதற்கான ஏற்பாடு ஆகும். தனியாக அலுவலகம் அமைக்க வசதி இல்லாத நிறுவனங்களுக்காக இத்தகைய மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. தேநீர், காபி உள்ளிட்டவற்றை பணம் செலுத்தி பருகலாம். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பணிபுரியும் இருக்கைக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

மேலும் மின் கட்டணம், பராமரிப்பு, உள்கட்டமைப்பு செலவு என எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதனால் அலுவலகத்துக்கான செலவு கணிசமாக குறைகிறது. குறிப்பாக, குறைவான முதலீட்டில் ஸ்டார்ட்-அப் தொடங்கும் தொழில்முனைவோருக்கு இது வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.

சென்னையில் உள்ள பணியிட பகிர்வு மையங்களில் சுமார் 1.4 லட்சம் இருக்கைகள், சுமார் 4.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக, கோவையில் சுமார் 16,000 இருக்கைகள் உள்ளன. மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் 1,000-க்கும் குறைவான இருக்கைகளுடன் செயல்பட்டு வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.3,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை..: தென்னிந்தியாவின் மான்செஸ்டராக அறியப்படும் கோவையில், அலுவலக அமைவிடம் மற்றும் அடிப்படை வசதிகளைப் பொறுத்து ஒரு இருக்கைக்கான மாதாந்திர கட்டணம் சுமார் ரூ.3,000, ரூ.4,000, ரூ.5,000-ல் தொடங்கி ரூ.15,000 வரை உள்ளது.

குறிப்பாக வடவள்ளி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், கணபதி, ஆவாரம்பாளையம், சரவணம்பட்டி, பீளமேடு, விமான நிலைய பகுதிகளில் இத்தகைய மையங்கள் செயல்படுகின்றன. கோவையில் வீ வொர்க், ரீகஸ் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும், 91ஸ்பிரிங்பீல்டு, இண்டிக்யூப், ஸ்மார்ட்வொர்க்ஸ் ஆகிய உள்ளூர் நிறுவனங்களும் இத்தகைய அலுவலகங்களை நடத்தி வருகின்றன.

இதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப், வங்கி நிதி சேவை, ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன. இந்தியாவில் வளர்ந்து வரும் பணியிட பகிர்வு மையங்களின் சந்தை மதிப்பு வரும் 2030-ல் ரூ.25,300 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெருநகரங்கள் மட்டுமல்லாமல், 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் இத்தகைய மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

600 இருக்கைகள்: இதுகுறித்து கோவையில் ஆஸ் டெக் கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் உரிமையாளர் அசீமா கூறும்போது, "கோவையில் கடந்த 2023 முதல் பணியிட பகிர்வு மையத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. எங்கள் நிறுவனம் சார்பில் 6 இடங்களில் அலுவலகங்களை நடத்தி வருகிறோம். சுமார் 600-க்கும் மேற்பட்ட இருக்கைகளை வாடகைக்கு விட்டுள்ளோம். பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து வருவோரும் எங்கள் அலுவலகங்களை தேர்வு செய்து வருகின்றனர். அடுத்த சில ஆண்டுகளில் கோவை நகரம் இத்துறையில் நட்சத்திர அந்தஸ்தை பெறும்" என்றார்.

அடிப்படை வசதி வேண்டும்: இதுகுறித்து, இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு செயலாளர் பிரதீப் நடராஜன் கூறும்போது, "தொழில் நகரான கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பணியிட பகிர்வு மையங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் கோவையில் மக்கள் தொகை பெருக்கமும், வாகன நெரிசலும் அதிகரித்து வருகிறது.

இதற்கேற்ப சாலை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாநில அரசு முன்வர வேண்டும். நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் தொலைநோக்குப் பார்வையுடன் கட்டமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்" என்றார்.

1.17 கோடி சதுர அடியாக உயரும்: கிரடாய் அமைப்பின் கோவை பிரிவு செயலாளர் ராஜீவ் ராமசாமி கூறும்போது, "கோவையில் தற்போது 30.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது வருங்காலத்தில் 1.17 கோடி சதுர அடியாக அதிகரிக்கும். அமைவிடம் உள்ளிட்ட வசதிகளைப் பொறுத்து, அலுவலகங்களுக்கு ஒரு சதுர அடி ரூ.45 முதல் ரூ.80 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

தரமான சாலைகளை அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அரசு அகற்ற வேண்டும். அனுமதி பெறாத கட்டுமானங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் வர்த்தக வளர்ச்சி பெருகும்" என்றார்.

நிலத்தின் விலை உயர்வு: கிரடாய் அமைப்பின் கோவை பிரிவு துணைத் தலைவர் அபிஷேக் கூறும்போது, "கோவையில் உள்ள பணியிட பகிர்வு மையங்களில், அமைவிடம், ஏசி உள்ளிட்ட வசதிகளைப் பொருத்து ஒரு இருக்கைக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிலம் மற்றும் கட்டுமான செலவு அதிகரித்துள்ள நிலையில், நிறுவனங்கள் இடம் வாங்கி அலுவலகம் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக பணியிட பகிர்வு மையங்களை நாடி வருகின்றன" என்றார்.

- aathithan.r@hindutamil.co.in

SCROLL FOR NEXT