வணிக வீதி

தொழில் வல்லரசாகிறது சீனா

மு.இராமனாதன்

சீனா ‘உலகின் தொழிற்சாலை' என்றழைக்கப்படுகிறது. ஆனால் இப்போது அது ஒரு தொழில் வல்லரசாக மாறிவிட்டது. அது என்ன ‘தொழில் வல்லரசு'? அமெரிக்காதான் வல்லரசாக அறியப்படுகிறது. ஏனெனில், அமெரிக்கா தனது ராணுவத்துக்கு செலவிடும் தொகை, அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் 10 நாடுகள் செலவிடும் கூட்டுத் தொகையைவிட அதிகம். ஆகவே, அமெரிக்கா ஒரு வல்லரசு, அல்லது ராணுவ வல்லரசு. இதுபோல உலக அளவில் தொழில் துறையில் தனக்கு அடுத்து உள்ள 8 நாடுகளைவிட சீனா அதிகமான பொருட்களை உற்பத்தி செய்கிறது.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, உலக உற்பத்தியில் சீனவின் பங்கு 35%. அடுத்த இடங்களில் அமெரிக்கா (12%), ஜப்பான் (6%), ஜெர்மெனி (4%) ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன. அடுத்து 3% உற்பத்தியோடு இந்தியாவும், தென் கொரியாவும் வருகின்றன. அடுத்து, 2% உற்பத்தியுடன் பிரான்ஸ், இத்தாலி, தைவான் ஆகிய நாடுகள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

இந்த 8 நாடுகளின் உற்பத்தி விகிதத்தின் கூட்டுத்தொகை 34%, இது சீனாவின் 35%விடக் குறைவு. உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் எஞ்சிய 31% உற்பத்தியை பங்கிட்டுக்கொள்கின்றன (OECD TiVA தரவுத்தளம், 2023).

இதை எளிமையாக சொல்வதானால், உலகில் உற்பத்தியாகும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை சீனா மட்டுமே உருவாக்குகிறது. இன்னொரு மூன்றில் ஒரு பங்கை முன்குறிப்பிட்ட 8 நாடுகளும், எஞ்சிய பங்கை மீதமுள்ள அனைத்து உலக நாடுகளும் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படி உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களை சீனா என்ன செய்கிறது? உள்நாட்டில் அதற்கொரு சந்தை இருக்கிறது. ஆனால் அது குறைவு. அதன் உற்பத்தியில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்துக்காகவே அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் இன்னொரு அம்சமும் கவனத்துக்குரியது.

சீனா பிற நாடுகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களின் மதிப்பு, அது அந்நாடுகளிலிருந்து வாங்கிக் கொள்ளும் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் மிக அதிகம். 2024-ம் ஆண்டின் இறுதியில் சீனா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 3.6 ட்ரில்லியன் டாலர், இறக்குமதி 2.6 ட்ரில்லியன் டாலர். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு ஒரு ட்ரில்லியன் டாலர்.

இது மிகை வணிகம் (trade surplus) என்றழைக்கப்படுகிறது.அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் வெவ்வேறு கால கட்டங்களில் வணிகத்தில் கோலோச்சின. அப்போது அவை கணிசமான மிகை வணிகத்தை எட்டவும் செய்தன. ஆனால், அந்த மிகையை இன்றைய பண மதிப்பில் கணக்கிட்டால்கூட, சீனா இப்போது எட்டியிருக்கும் ஒரு ட்ரில்லியன் டாலரைவிட மிகவும் பின்னால் இருக்கின்றன. மிகை வணிகத்தில் ஒரு ட்ரில்லியன் எனும் மைல்கல்லை சீனாதான் முதலில் எட்டியிருக்கிறது.

இந்தியாவின் பங்கு: சீனாவின் இந்த மிகை வணிகத்தில் இந்தியாவின் பங்கு என்ன? விடை: 10.3%. அதாவது 103 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகை வணிகம் இந்தியாவிடமிருந்து சீனாவுக்குக் கிடைக்கிறது. இதை இந்தியாவின் பார்வையில் சொன்னால், சீனாவுடனான இந்தியாவின் குறை வணிகம் (trade deficit) 103 பில்லியன் டாலர். அதாவது, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பைவிட, அந்த நாட்டுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 103 பில்லியன் டாலர் குறைவு. இது சமனற்ற வணிகம். இது இந்தியாவுக்கு பாதகமானது.

இதில் இன்னொரு புள்ளிவிவரம் நம்மை மேலும் தொந்தரவு செய்யக்கூடியது. சீனாவின் மொத்த ஏற்றுமதியில் இந்தியா பெறுவது 3.5%தான். ஆனால் சீனாவின் மிகை வணிகத்தில் இந்தியாவின் பங்கோ 10.3%. இதன் பொருள், சீனாவுக்கான நமது ஏற்றுமதி மிகவும் குறைவு. கடந்த ஆண்டில் இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு 121 பில்லியன் டாலர்.

அதேவேளையில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 18 பில்லியன் டாலர்தான். இப்படித்தான் இந்தியாவின் குறை வணிகம் 103 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) ஆனது. கடந்த ஆறேழு ஆண்டுகளாகவே சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கூடவில்லை. மாறாக சீன இறக்குமதி அதிகரித்து வருகிறது.

ஜிடிபி 5 மடங்கு அதிகம்: இந்தப் போக்கு கவலையளிக்கக்கூடியது. சீனா எண்பதுகளில் தாராளமயத்தின் பக்கம் சாயத் தொடங்கியது. அப்போது அதன் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சமமாக இருந்தது ($190 பில்லியன்). இந்தியா தொண்ணூறுகளில் தாராளமயத்தின் பாதையில் அடியெடுத்து வைத்தது. சீனாவுக்கு நிகரான மனிதவளம் மிக்க நாடு இந்தியா. எனினும் சீனாவின் நாலுகால் பாய்ச்சலுக்கு நிகராக நம்மால் ஓட முடியவில்லை.

இன்று சீனாவின் ஜிடிபி இந்தியாவைவிட சுமார் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. (சீனா- $17.79 ட்ரில்லியன், இந்தியா- $3.57 ட்ரில்லியன், உலக வங்கித் தரவு, 2023). சீனாவின் இந்த அதீத வளர்ச்சிக்கு அது உலகின் தொழிற்சாலையாக மாறி நிற்பதுதான் காரணம். இன்று ஒட்டுமொத்த உலகமுமே சீனாவின் பொருட்களைச் சார்ந்திருக்கிறது. சீனா வணிகத்தை ஒரு ஆயுதமாகக் கையிலேந்தி நிற்கிறது. உலக நாடுகள் அதைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இறக்குமதி செய்யும் பொருட்கள்: ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் ‘சவுத்சைனா மார்னிங் போஸ்ட்' நாளிதழ் அந்தப் பொருட்களைப் பட்டியலிட்டது. இந்தியா இறக்குமதி செய்யும் மின்னணு பொருட்களில் 60%,நீடித்துழைக்கும் பயனர் பொருட்களில் (consumer durables) 45% சீனத் தயாரிப்புகள். மருந்துகளுக்கான மூலப் பொருட்களில் 70% சீனாவிலிருந்து வருகின்றன. ஆட்டோ மொபைல் உதிரிப் பாகங்களில் 25% சீனாவில் தயாராகின்றன.

ஏற்றுமதி செய்யும் பொருட்கள்: இரும்புத் தாது, கடல்சார் பொருட்கள், மசாலா பொருட்கள், வேதிப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் முதலானவை. அதாவது இந்தியா, சீனாவுக்கு ஏற்றுமதி செய்பவை முக்கியத்துவம் குறைந்த மூலப் பொருட்களாகவும் இடைநிலைப் பொருட்களாகவும் இருக்கின்றன. அதேவேளையில் இறக்குமதி செய்பவை முழுமையடைந்த பொருட்களாகவும் இன்றியமையாத மூலப் பொருட்களாகவும் இருக்கின்றன. இதுதான் சமனற்ற வணிகத்துக்குக் காரணம்.

உற்பத்திப் பாதை எவ்விதம் தொடங்கியது? - எண்பதுகளில் பன்னாட்டு முதலீடுகளுடன் பாரம்பரியமான ஆலைகளை நிறுவியது. அவைபட்டு மற்றும் பஞ்சினில் ஆடைகள் உருவாக்கின. அடுத்து, குடைகளும் உழுபடைகளும் கோணிகளும் இரும்பாணிகளும் செய்யத் தொடங்கியது. ஆயுதமும் காகிதமும் உற்பத்தி செய்தது. அடுத்த கட்டமாக, ஆட்டோமொபைல், கப்பல் கட்டுமானம், மின்னணுப் பொருட்கள், வேதிப் பொருட்கள், பெரும் இயந்திரங்கள், அணு உலைகள் என்று வளர்ந்தது.

கடந்த பத்தாண்டுகளில் உயர் தொழில்நுட்பம் சார்ந்த சூரிய ஆற்றல், மின்சார வாகனங்கள், செயற்கைக்கோள், கணினி தொழில்நுட்பம் முதலான துறைகளில் முத்திரை பதித்து வருகிறது. ஆகக் கடைசியாய், டீப்-சீக் எனும் செயலி வாயிலாக செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதன் பிதாமகர்களான அமெரிக்காவுக்குச் சவால் விட்டிருக்கிறது.

சீனாவின் வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது நம்மவர்கள் பொதுப்படையாகச் சொல்லும் காரணங்கள் சில: சீனா ஒரு எதேச்சதிகார நாடு, அங்கு ஒரு-கட்சி ஆட்சி நடைபெறுகிறது, அங்கு வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் கடுமையாக ஒடுக்கப்படும், தொழிலாளர் ஊதியம் குறைவு, தொழிற்சாலைக்கும் உள்கட்டுமானத்துக்கும் இடங்களைக் கையகப்படுத்துவது எளிது, நிலத்தின் விலை சகாயம், தொழில் துறைக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகம்.

சீனப் பொருட்கள் தரம் குறைந்தவை, மலிவானவை. இவற்றில் சில முழு உண்மைகள், சில அரை உண்மைகள், சில உண்மைக்கு மாறானவை. ஆனால் இவற்றால்தான் சீனா இன்று தொழில் வல்லரசாக உருவாகியிருக்கிறது என்று சொல்பவர்கள், உண்மையான காரணங்களை ஆராய மறுக்கிறார்கள்.

சீனா எப்படிச் சாதித்தது? - வல்லுநர்கள் சொல்லும் காரணங்கள் பல. அவற்றுள் சில: தொழில் முயற்சிகளையும் தொழிற்சாலைகளையும் அரசு ஊக்குவிக்கிறது. தனது உள்கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தி வருகிறது. சாலைகள், பாலங்கள், ரயில்கள், துறைமுகங்கள், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் முதலானவை தொழில் தொடங்கவும் இயங்கவும் ஏது செய்கின்றன. ஒரு உற்பத்தியில், மூலப் பொருட்களில் தொடங்கி, அது முழுமையடையும் வரையிலான உற்பத்திச் சங்கிலியில் எல்லாக் கண்ணிகளும், அல்லது மிகப் பெரும்பாலான கண்ணிகள், சீனாவிலேயே இருக்குமாறு திட்டமிடப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பருத்தி விளைந்து, அது பஞ்சாகி, நூலாகி, துணியாகி, நிறமேறி, பொத்தான் பொருத்தி, உடையாகிற வரை எல்லாக் கட்டங்களிலும் இயன்ற வரை பிற நாடுகளைச் சார்ந்திருக்காத வண்ணம் திட்டமிடப்படுகிறது. பன்னாட்டு மூலதனங்களை சீனா இருகரம் நீட்டி வரவேற்கிறது.

அந்நிய முதலீடுகள் சிவப்பு நாடாக்களாலும் ஊழலாலும் சுணங்கிப் போவதில்லை. இதுபோல உள்நாட்டு முதலாளிகளும் கணிசமாக முதலீடு செய்கிற சூழல் இருக்கிறது. தொழிலாளர் ஊதியம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதற்கு சந்தையும் ஒரு காரணம்.

இவை தவிர, ஆய்வாளர்கள் கவனப்படுத்தும் இரண்டு அடிப்படையான அம்சங்கள், கல்வியும் ஆரோக்கியமும். பொதுப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் எல்லோருக்குமானவையாக, போதுமானவையாக, தரம் மிக்கவையாக இருக்க வேண்டும். திறமையும் பயிற்சியுமே ஒரு நல்ல தொழிலாளியை உருவாக்கும். இதற்கு அடிப்படைக் கல்வியும் நல்ல ஆரோக்கியமும் அவசியம். சீனா வணிகத்திலும் தொழிலிலும் வெகு தூரம் முன்னேறிவிட்டது. இன்றைக்கு மனிதவளத்தில் சீனாவோடு போட்டியிடத்தக்க ஒரே நாடு இந்தியாதான்.

நாம் சீனா முன்னேறிய பாதையை கவனமாக ஆராய்ந்து அதில் நமக்கான பாடங்களை எடுத்துக்கொண்டு முறையாகத் திட்டமிட வேண்டும். சாதி மத வன்மங்களையும், அது சார்ந்த பெருமைகளையும் விட்டொழிக்க வேண்டும். அப்போது ‘மேக் இன் இந்தியா', (இந்தியாவில் தயாரிப்போம்), ‘ஆத்ம நிர்பார் பாரத்’ (சுயச் சார்புள்ள இந்தியா) போன்ற திட்டங்களின் இலக்குகளை எட்ட முடியும். அப்போது இந்தியா தொழில் வல்லராசாகும் பாதையில் தீர்க்கமாக முன்னேறும்.

- Mu.Ramanathan@gmail.com

SCROLL FOR NEXT