கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் (48) 25 ஆண்டுக்கு முன்பு வேலைக்காக இங்கிலாந்து சென்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்த அவர், கடந்த 2010-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு, அதேநேரம் தனது சொந்த ஊரை குறிக்கும் வகையில் கோவை.கோ என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார். இதன் அலுவலகம் கோவையிலும் இயங்குகிறது.
இந்நிறுவனம் மென்பொருள் தீர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த 2011-ல் பிஸ்டாக்360 என்ற பெயரில் தனது முதல் மென்பொருளை அறிமுகம் செய்தது. 5 முக்கிய மென்பொருளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 240-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனமான ஷெல், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஊடக நிறுவனமான பிபிசி ஆகியவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ரூ.866 கோடி சொத்து மதிப்பு கொண்ட இந்நிறுவனம், ஆண்டுக்கு ரூ.130 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில், ‘இணைந்து வளர்வோம்’ என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, தனது நிறுவனத்துக்கு விசுவாசமாக பணியாற்றி வரும் 140 ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடியை ஊக்கத் தொகையாக வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
நன்றியுணர்வு, பெருமை மற்றும் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகையாக வழங்கியதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சரவணக்குமார் கூறுகிறார். இந்த முயற்சி பல ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் முன்பணம் செலுத்தவும், நீண்டகால சொத்துக்களை வாங்கவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும் அல்லது கார்களை வாங்கவும் உதவியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்குவது மற்றும் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு பங்குகளை வழங்குவது ஆகியவற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். விருப்ப உரிமை பங்குகள் என்பது, பொதுப் பங்கு வெளியிடும் வரை வெறும் காகித பணமாகத்தான் இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்ததாக கூறுகிறார்.
தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள சரவணக்குமார், தனது நிறுவனத்தை யூனிகார்னாகவம் (ரூ.8,600 கோடி சொத்து மதிப்பு) ஆண்டு வர்த்தகத்தை ரூ.866 கோடியாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தனது மென்பொருளை விற்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தங்க சான்றிதழ் பெற்றுள்ள கோவை.கோ நிறுவனம், காக்னிசன்ட், டேட்டா பேஷன், இன்பீனி, கோசோகு ஐடி, மிடில்வே உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் மென்பொருள்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன.
இதுபோல சீனாவைச் சேர்ந்த ஹெனான் மைனிங் கிரேன் நிறுவனம், சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு வருடாந்திர ஊக்கத் தொகையாக ரூ.70 கோடியை வழங்கியது. குறிப்பாக, பணத்தை மேசை மீது வைத்துவிட்டு 15 நிமிடங்களுக்குள் எவ்வளவு பணத்தை எண்ண முடிந்ததோ அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.