ஓர் எளிய விவசாய-கிராமப் பின்னணியில் பிறந்து இன்று தனது உழைப்பால் ராம்ராஜ் காட்டன் எனும் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் கே.ஆர்.நாகராஜன். தனது தொழில் முனைவுக் கதையை இந்து தமிழ் திசை வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து….
உங்கள் நதிமூலம், ரிஷிமூலம்? - எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள கைகாட்டி கிராமம். அப்பா எஸ்.ராமசாமி ஒரு விவசாயி, அண்மையில் காலமானார். அம்மா கருணாம்பாள் எங்களுடன் இருக்கிறார். அண்ணன் சிதம்பரநாதன் டிஇஓ ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். என் இரு மகள்களுக்கும் மணமாகிவிட்டது. அவர்களும் மருமகன்களும் தொழிலில் என்னுடன் இணைந்துவிட்டனர்.
உங்களுடைய முதல் தொழில் முனைவு அனுபவம்? - எனது 13-வது வயதில் தொடங்கியது அது. பக்கத்து வீட்டுக்காரர் ஜம்பு ஒரு செய்தித்தாள் முகவர். அனைத்து பத்திரிகைகளும் படிக்கக் கிடைத்த நூலகம் அவருடைய வீடு. நாமும் அவரைப்போலவே ஏன் இந்தத் தொழில் செய்யக் கூடாது என்று ஒரு யோசனை, உடனே 15 பைசா அஞ்சலட்டையை எடுத்து ‘பால மித்ரா’ இதழின் ஆசிரியருக்கு ‘நான் ஒரு மாணவன். என்னால் வைப்புத் தொகை செலுத்த முடியாது. எனக்கு 100 இதழ்களை அனுப்பி வைத்தால் விற்றுத் தர முடியும்.
என்மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்தால் என் படிப்புக்கு அது உதவியாக இருக்கும்’ என்று கடிதம் எழுதினேன். உடனே ரயிலில் 100 இதழ்கள் என்னைத்தேடி வந்தன. மிதிவண்டியில் வைத்து அவற்றைக் கடைகளுக்கு விநியோகம் செய்தேன். மாதம் ரூ.20 வருவாய் கிடைத்தது. இந்தத் தொழிலை 18 முதல் 21 வயது வரை செய்தேன். பின்னர் எனது நண்பர் குமாருக்கு அதைக் கைமாற்றி விட்டுவிட்டேன்.
அந்த வெற்றி உங்களுக்கு எந்த மாதிரியான உணர்வைக் கொடுத்தது? - அது அன்றைக்கு மிகப் பெரிய விஷயம். எனக்குக் கிடைத்த வருமானத்தில் என் அண்ணனுக்கு தேர்வுக் கட்டணம், எனது கல்விக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தினேன். முயற்சி, வருமானமாகப் பயன் தரும்போது அது தன்னம்பிக்கையைத் தரும். அதனால் கூடுதல் முயற்சி எடுக்கத் தோன்றும். அப்படித்தான் 1973-74ல் எனது வாடிக்கையாளர்களுக்கு (கடைகளுக்கு) ரப்பர் ஸ்டாம்ப் செய்து தரும் முகவரானேன்.
உங்களுடைய சந்தைப்படுத்துதல் பாணி எப்படிப்பட்டது? தரக்கொள்கை என்ன? - அந்தக் காலத்தில் வேட்டி தயாரிக்கும் நெசவாளர்களுக்கு கிடைத்த கூலி சொற்பம்தான். எனவே, அவர்களுக்கான கூலியை நாங்கள் உயர்த்திக் கொடுத்தோம். இதனால் அடக்க விலை அதிகரித்தது. கடைக்காரர்கள் விலையேற்றத்துக்கான காரணத்தைக் கேட்டனர்.
நானும் நெசவாளர்களின் கஷ்டங்களை விளக்கி சொல்லிப் புதிய விலைக்கு அவர்களை சம்மதிக்கச் செய்தேன். நமக்காகப் பேசாமல் மற்றவர்களின் வாழ்வாதாரத்துக்காகப் பேசி வணிகம் செய்யும்போது ஒரு தைரியம், ஊக்கம் கிடைக்கும். முன்பெல்லாம் வேட்டி உற்பத்தியாளர்கள் லாபம் வேண்டுமென்றால் தரத்தைக் குறைத்துக்கொள்வர்.
ஆனால் நானோ, தரத்தைக்கூட்டி அதற்கான விலை வைத்தேன். கடைக்காரர்களிடமும் வரவேற்பு கிடைத்தது. நெசவாளர்களின் ஆதரவும் தொடர்ந்தது. அவர்கள் மூலமாக ஆண்டின் 365 நாட்களும் தறிகள் இயங்குகின்றன. பண மதிப்பிழப்பு காலத்திலும் சரி, கோவிட் பொது முடக்கத்தின்போதும் சரி, வேலையைக் கொடுத்துக்கொண்டேதான் இருந்தோம். 1983-ல் 50 தறிகள் இருந்தன. இப்போது 50 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் எங்களுடன் இருக்கின்றன.
உங்கள் நண்பர்கள் உங்கள் சொந்தத் தொழிலுக்கு உதவினரா? - ஆம். 10-ம் வகுப்பில் தோல்வியடைந்த எனக்கு வேட்டி வியாபாரத்தை அறிமுகம் செய்தவர் என் பள்ளித்தோழர் முனுசாமிதான். திருப்பூரில் விஜயலட்சுமி காதி பந்தன் கடையில் என் நண்பருக்கு வேலை கிடைத்தது. அவர்மூலம் எனக்கும் அங்கேயே வேலை கிடைத்தது. அதேபோல, ராம்ராஜ் காதி ட்ரேடர்ஸ் என்ற பெயரில் 1983-ல் தொழில் தொடங்கியபோதும் நண்பர்கள் கூட்டாகக் கொடுத்த ரூ.83 ஆயிரம்தான் எனது முதலீடு.
உங்களுக்கு எப்போதாவது தோல்வி பயம் இருந்திருக்கிறதா? - நமது சுய ஆசைகளை பூர்த்தி செய்ய நாம் வணிகம் செய்தால் பயம் வரும். ஆனால், நான் வறுமை நிலையில் இருக்கும் நெசவாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே இயங்கியதால் தோல்வி பயம் வரவே இல்லை.
நீங்கள் சந்தித்த சவாலான தருணம்? - தொழில் தொடங்கி வளரும் கட்டத்தில் ஒவ்வொரு கடையாகப் போய் ஆர்டர் எடுப்பது சவாலாக இருக்கும். உதாரணமாக, தொடக்க காலத்தில் ஆந்திராவில் ஒரு கடைக்குப் போவேன். அங்கு ஆர்டர் கிடைத்ததே இல்லை. நானும் விட மட்டேன். ஒரு நாள் அவர் வீட்டில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, கடையில் டென்ஷனாகவே இருந்தார். நான் அவருக்கு வணக்கம் சொன்னவுடன் கடுமையாகத் திட்டிவிட்டார். அப்போது அவரைவிட நான் பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தேன். ஒரு சாதாரண நபராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு திட்டிவிட்டு வந்திருப்பார்கள்.
நானோ, ‘ஐயா, மன்னிச்சுக்கோங்க, நான் காலையில முதல் வணக்கத்தை உங்களுக்கு சொல்லிட்டு போனா மற்ற இடங்களில் ஆர்டர் கிடைக்கும். தொந்தரவா நினைக்காதீங்க’ என்று சொன்னேன். பதறிய அவர், அடுத்த நொடி அவர் என்கையைப்பிடித்து அமரவைத்து தேநீர் கொடுத்து உபசரித்தார்.
அப்படியும் அங்கு ஆர்டர் கிடைக்கவில்லை. 17 ஆண்டுகள் கழித்து அவருடைய புதுக்கடைக்குத்தான் ஆர்டர் கொடுத்தார். அவ்வளவு காலம் காத்திருந்து, ஒரு கடைக்கு நடையாய் நடந்து விடாப்பிடியாக இருந்து ஆர்டர் வாங்குவது சவால். தொழிலில் உற்பத்தி, கணக்கு-வழக்கு ஆகியவை ஒரே மாதிரியாகத் தொடரும். ஆனால், சந்தைப்படுத்துதல் தினமும் மாறக்கூடியது.
உங்களுடைய பலம்?: என் இளம் வயதில் அனுபவித்த வறுமைதான். இளம் வயதில் தொழிலில் இறங்கும் தேவையை அதுதான் உருவாக்கிக் கொடுத்தது. வறுமைதான் பெரிய ஆசான்.
தொழில் வெற்றிக்கான சூத்திரம் என்ன? - ‘எல்லாமே மாற்றத்துக்குரியது. ஆனால் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அதில் மாற்றம் இருக்கக்கூடாது’ என்பதுதான். காலத்துக்கு தகுந்தபடி நம்மைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் வேட்டித் தொழிலில் இறங்கினேன். பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணவில்லை.
அதே நேரத்தில் மாற்றங்களுக்கும் என்னை உட்படுத்தினேன். 1987-ல் தொடங்கி 2003 வரை வழக்கமான வேட்டிகளை விற்பனைதான் செய்தேன். 2003-க்குப் பிறகு வெள்ளை வேட்டி-சட்டை என்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம். என் பேரன் பிறந்தபோது உதித்தது லிட்டில் ஸ்டார் (அடர் வண்ண சட்டை, வெள்ளை வேட்டி) யோசனை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்காக ‘ஒட்டிக்கோ-கட்டிக்கோ’ வேட்டிகளை உருவாக்கினோம். அத்தோடு நிற்காமல் வேட்டியில் செல்பேசி, பர்ஸ் வைத்துக் கொள்வதற்கான பாக்கெட்களை வைத்தோம்.
இப்போது ராம்ராஜூக்கு எவ்வளவு கிளைகள் இருக்கின்றன? - தென்னிந்தியா முழுவதுமாக 300-க்கும் மேல் இருக்கின்றன. 15 ஆயிரம் ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகின்றனர். இந்த ஆண்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தோம், அடுத்த ஆண்டு எவ்வளவாக அதை அதிகப்படுத்தலாம் என்றுதான் யோசிப்பேன். அதேபோல, அடுத்த ஆண்டு சமூக சேவைக்கு எவ்வளவு செலவிடலாம் என்றுதான் யோசிப்பேன். இதுவே வளர்ச்சியைக் கொண்டு வருகிறது.
நமது இளைய தலைமுறை தொழில் முனைவோராக உருவாக விடாமல் தடுப்பது எது? - நமது குழந்தை வளர்ப்பு முறைதான். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது என்ன சொல்கிறோம்? ‘நல்லா. படிச்சு நல்ல வேலைக்குப் போகணும் தங்கம்’ என்று நாம் சொல்கிறோம். இப்படி வளர்க்கப்படும் குழந்தை எப்படி பிற்காலத்தில் துணிந்து சொந்தத் தொழிலில் இறங்கும்? ‘பாதுகாப்பாக’ வாழத்தான் முயலும். அதேபோல இளம் வயதில் அதிகமாக சொகுசு கிடைத்தாலும் போராடுகிற எண்ணம் வராது. அளவாக நீர் ஊற்றப்படும் மரம் வேரூன்றி வளரும். எந்நேரமும் நீர் ஊற்றப்படும் மரம் எளிதில் அலைக்கழியும் இல்லையா…
தொழில் தொடங்க ஏற்ற வயது எது? - வேலை செய்யத்தான் வயது உண்டு; தொழில் முனைவு ஊக்கத்துக்கு குறைந்தபட்ச வயது கிடையாது.. அதேபோல தொழில் முனைவோருக்கு ஓய்வு வயதும் கிடையாது.
புதிய தொழில் முனைவோருக்கு முதலீட்டைத் திரட்டுவது சவாலாக இருக்கிறதே? - தொழில் தொடங்க அடிப்படையான விஷயங்கள் மூன்று: முதலீடு, அனுபவம், உழைப்பு. இம்மூன்றையும் இயற்கை ஒருவருக்கு ஒரே நேரத்தில் தராது. எனவே, இம்மூன்றில் எது இருக்கிறதோ அதை வைத்துத் தொழில் தொடங்கிவிட வேண்டும். மற்ற இரண்டும் இறையருளால் தானாகவே வந்து சேரும்.
எல்லாப் பூட்டையும் திறக்க சாவி உண்டு. சாவி இல்லாமல் எந்த பூட்டும் கிடையாது. அதேபோல வியாபார நோக்கத்தை மட்டும் சரியாகப் புரிந்துகொண்டு உழைத்தால் முதலீடு தேடி வரும்.
தொழில் முனைவோருக்கு குடும்பம் எவ்வளவு முக்கியம்? - ரொம்பவே முக்கியம். என்னுடைய ஆரம்ப காலத்தில் குடும்பத்தையே பார்க்காமல் வியாபாரத்துக்காக சுற்றிக்கொண்டு இருந்தேன். ஆழியார் போய் வேதாத்திரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற பிறகு என்னுடைய வாழ்க்கைப் பாணியே மாறிவிட்டது. குடும்பத்துடன் போதுமான அளவுக்கு நேரத்தைச் செலவு செய்கிறேன்.
நிறுவன சமூகப் பொறுப்பாக ராம்ராஜ் என்ன செய்கிறது? - நான் இரண்டு விஷயங்களைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதாவது இரண்டு ‘V’. மனிதர்களை வெண்மையான ஆடை மூலம் அழகுபடுத்துவதற்கு வேட்டி (V); மனதை வெண்மையாக்க வேதாத்திரி மகரிஷி (V) காட்டிய வழி. இரண்டு V-யையும் ஒன்று சேர்த்தால் W (அதாவது WE என்ற பொருளில்) என்ற எழுத்து கிடைக்கும். அதுதான் ‘நாம்’. அந்த வகையில் பல சமூகக் கடமைகளைச் செய்கிறோம்.
பல்வேறு தொழிற்பயிற்சிகள், வாழ்வியல் பயிற்சிகளை வழங்குவது, இலக்கியச் சேவை, நகைச்சுவை மன்றம், சிந்தனைப் பேரவை என்று பல வகைகளிலும் இயங்குகிறோம். ஏழை எளிய மாணவர்களுக்காக அகரம் பவுண்டேஷனை 2010-ல் ஆரம்பிக்க நான்தான் ஆலோசனை கொடுத்தேன். மேலும் ஐஏஎஸ் படிப்பவர்களுக்கு உதவி செய்கிறோம். எங்கள் வருவாயின் ஒரு பகுதியை மேற்கண்ட அமைப்புகளுக்கு உதவுவதற்காக ஒதுக்குகிறோம்.
புதிய தொழில் முனைவோருக்கு உங்களுடைய அறிவுரை என்ன? - ‘நேர்மையாக செயல்படுங்கள்; திட்டமிட்டு செயல்படுங்கள்; படிப்படியாக வளருங்கள்; பணியாளர்களைப் பராமரியுங்கள்; தகுதி வாய்ந்த தலைமையை உறுதி செய்யுங்கள்’ என்பதுதான் என் அறிவுரை.
- Editor@munaivu.com