இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை 2016-ல் தொடங்கப்பட்டது. யுபிஐஆனது பயனர்களின் பல வங்கிக்கணக்குகளை ஒரே மொபைல் பயன்பாட்டின் கீழ் இணைக்க அனுமதிக்கிறது. கூகுள்பே, போன் பே, பேடிஎம் ஆகியமூன்று நிறுவனங்கள் யுபிஐ பரிவர்த்தனையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ரிசர்வ் வங்கியின் அனுமதியைத் தொடர்ந்து, யுபிஐ நிறுவனங்கள் பேமண்ட்வங்கியை 2017-ல் தொடங்கின. ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே டெபாசிட் (2021-ல்ரூ. 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டது) பெறவேண்டும், கிரெடிட் கார்டுகளை வழங்ககூடாது, கடன் கொடுக்க கூடாது, என்ஆர்ஐ டெபாசிட்டுகளை பெறக்கூடாது என அப்போதே பல கட்டுப்பாடுகள் பேமண்ட் வங்கிகள் மீது விதிக்கப்பட்டன.
பேடிஎம் ஏற்கெனவே பணப்பட்டுவாடா சேவைகளை வழங்கி வந்ததால் இதன் வங்கியில் ஏராளமானோர் எளிதாகஇணைய வாய்ப்பு உருவானது. இந்த நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக பேடிஎம் பேமண்ட்வங்கியின் செயல்பாடுகளை முடக்குவதாக ரிசர்வ் வங்கி ஜனவரி 31-ல் பிறப்பித்த உத்தரவு அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீன நிறுவனங்களிடமிருந்து முதலீட்டை அதிகரித்ததும் இந்த தடைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதால் பேடிஎம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்ககடந்தாண்டு மார்ச் மாதமே தடைவிதிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர் குழுவையும் அமைத்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி ரிசர்வ் வங்கி முடக்கியுள்ளது.
2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நகரங்கள், கிராமங்கள் என டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பெருகிவிட்டது. இதில், பேடிஎம் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும்30 கோடி பேர் பேடிஎம் வாலெட்டுகளையும், 10 கோடிக்கும் அதிகமானோர் பேடிஎம் வங்கியிலும் கணக்கு வைத்திருப்பதாக அதன் இணையதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நிதி நிலை அறிக்கையில் பிரச்சினை, விதிகளுக்கு இணங்காதது போன்ற காரணங்களை காட்டி2024 பிப்ரவரி 29-க்குப் பிறகு பேடிஎம்பேமண்ட் வங்கி செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணம் செலுத்துவதற்கோ, வரவு வைப்பதற்கோ, பரிவர்த்தனை செய்வதற்கோ வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையை மேற்கொள்ள இம்மாத இறுதிக்குப் பிறகு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்கும் அதற்குள் தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேமிப்பு வங்கி கணக்கு, நடப்பு கணக்கு, பாஸ்ட்டேக் உள்ளிட்ட பிற சேவைகளில் உள்ள பணத்தைஉடனடியாக திரும்பப் பெற கட்டாயம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், பேடிஎம் செயலி வாயிலான யுபிஐ பரிவர்த்தனை பிப்.29-க்கும் பிறகும் தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் பேடிஎம் பேமண்ட் வங்கியை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உடனடியாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுபேடிஎம்-ன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடனடியாக சென்றடைவது நிச்சயமற்றது. இதனால், அவர்களின் வைப்புத் தொகை நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயமும் உள்ளதாக வங்கியாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம், இதர வங்கிகளுடன் கூட்டாண்மையை விரைவுபடுத்துவதன் மூலம் தங்களது வாடிக்கையாளர், வணிகர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க பேடிஎம் எடுக்கும் நடவடிக்கை வரவேற்புக்குரியது.
முதலீட்டாளர்களுக்கு இழப்பு: ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடியைத் தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்’ பங்குகளின் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. ஐபிஓ விலை ரூ.2,150-ஆக இருந்த நிலையில், தற்போது பங்கின் விலை ரூ.500-க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு இதுவரை 70 சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போதைய பிரச்சினையால் பேடிஎம் வருவாய் ரூ.500 கோடி வரை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- rajanpalanikumar.a@hindutamil.co.in