களிறு: காத்திரமான பதிவு

By ஆதி

யானைகளை விரட்டப் பட்டாசு களைக் கொளுத்தி அவற்றின் அருகே விட்டெறிகிறார்கள் மனிதர்கள். வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு சம்பவங்களில் இது தொடர்கிறது. பேருடலைத் தவிர வேறு எதையும் கொண்டிராத அந்த அப்பாவி உயிரினங்களை, தாங்கள் வாழும் பகுதியிலிருந்து எப்படியாவது விரட்டியடித்துவிட வேண்டும் என்பதே மனிதர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ‘களிறு’ ஆவணப் படம் இப்படித்தான் தொடங்குகிறது. இந்தச் சம்பவங்களின் உச்சமாக நீலகிரி ரிசார்ட் ஒன்றுக்கு வந்த யானையின் மீது எரிபொருளில் நனைக்கப்பட்ட துணியைத் தீயுடன் மனிதர்கள் வீசியெறிந்து, அந்த யானை பலியானதும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

யானை-மனித எதிர்கொள்ளல் மிகத் தீவிரமாக இருந்துவரும் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளின் பிரச்சினை குறித்து மனித பார்வையிலிருந்து மட்டுமில்லாமல் யானைகளின் தரப்பு சார்ந்த பிரச்சினைகளையும் முன்வைக்கிறது சந்தோஷ் கிருஷ்ணன் -ஜெஸ்வின் கிங்ஸ்லி இயக்கியுள்ள ‘களிறு’ ஆவணப் படம். 18 நிமிடங்களே ஓடும் இந்த ஆவணப் படம், பொது கவனத்துக்கு அதிகம் வராத பிரச்சினைகளைக் கவனப்படுத்துகிறது.

பண்டைக் காலம்போல் காடுகள் தொடர்ச்சியாக இல்லாமல், துண்டாடப் பட்டிருப்பது யானைகளைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகள் பயன்படுத்திவரும் மரபு வழித்தடங்கள் வயல்கள், கட்டிடங்கள், மின்வேலிகள் போன்றவற்றால் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு யானைகள் வர நேர்கிறது. அத்துடன் அவற்றுக்குப் பிடித்த பயிர்களைக் காட்டு எல்லைகளில் பயிரிடுவதும் யானைகளை ஈர்க்கிறது.

காட்டு யானைகள் மனித சகவாசத்துக்கு அஞ்சிய நிலை மாறி, தற்போது அவை மனிதர்களைக் கண்டு அஞ்சுவதில்லை. இதன் காரணமாக உணவு தேடி மனிதக் குடியிருப்புகள், வயல்களுக்கு அடிக்கடி வருகின்றன. இப்படி வரும்போது விவசாயிகளின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடுகிறது. யானைகள் வனத்துறையால் பிடிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் தேயிலைத் தோட்டங்களின் வழியாக இடம்பெயரும் யானைகள் தோட்ட உரிமையாளர்களால் விரட்டப்படுகின்றன. பட்டாசுகள், சத்தமெழுப்புதல், விளக்கு களை ஒளிரவிடுதல் எனப் பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மூலம் யானைகள் துரத்தப்படுகின்றன.

இப்படிப் பல்வேறு வகைகளில் யானை களின் நடத்தையை மனிதர்கள் எப்படித் தலைகீழாக மாற்றியமைத்துள்ளார்கள் என்பதை இந்த ஆவணப் படத்துக்கான ஒளிப்பதிவின்போது தெளிவாக உணர்ந்த தாக சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவிக்கிறார். கூடுதலாக, கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு திம்பம் சாலை வழியாகக் கரும்பாலைகளுக்கு லாரிகளில் கரும்பு கொண்டு செல்லப்படும்போது செக்போஸ்ட்டில் நிற்க நேரிடுகிறது. அப்போது சத்தியமங்கலம், ஹாசனூர் ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள காடுகளின் எல்லைகளில் யானைகள் கரும்பை எடுத்து உண்கின்றன. இப்படி உணவைப் பெறும் யானைகள், திரும்பவும் காட்டுக்குள் சென்று பெரிதாக உணவு தேடுவதில்லை.

மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக் கைகளால் பல யானைகள் மின்சாரம் பாய்ந் தும், வேறு வகைகளிலும் இறக்கின்றன. யானைகள் திடீரென குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரும்போது மனிதர்களும் பலியாகிறார்கள். இப்படி இரு தரப்புக்கும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஓராண்டில் யானை-மனித எதிர்கொள்ளலால் 64 யானைகளும் 58 மனிதர்களும் பலியாகியிருக்கிறார்கள்.

வால்பாறையில் யானைகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்க வனத்துறை எச்சரிக்கை அமைப்பை நிறுவியுள்ளதால், கடந்த பத்து ஆண்டுகளில் அப்பகுதியில் மனித உயிரிழப்பு குறைந்துள்ளது. இதுபோன்ற எச்சரிக்கை அமைப்புகளைப் பரவலாக உருவாக்க முடியும். ஆனால், அது சாத்தியப்பட ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினையின் ஆழ-அகலங்கள் குறித்த முழுமையான புரிதல் அவசியம்.

யானைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எல்லோருமே ஓரளவு அறிந்திருக்கிறோம். அதேநேரம் மனிதர்களால் யானைகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாமல் இருக்கிறோம். காடுகள், யானைகள் வாழும் பகுதிக்கு அருகே வாழ்பவர்கள் யானைகளுடன் இணக்கமாக வாழ்வது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆவணப் படம் கூடுதல் புரிதலைத் தரும்.

பிரபல காட்டுயிர் பாதுகாவலர் பெலிண்டா ரைட் இந்த ஆவணப் படத்தின் விவரணைக்குக் குரல் கொடுத்துள்ளார். விவரணை ஆங்கிலத்தில் இருந்தாலும், இந்தப் படம் முழுக்க தமிழ்நாட்டை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. என் சினி சுமா பாஸ் சர்வதேசத் திரைப்பட விழா விருது, தாகூர் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘எமர்ஜிங் டேலன்ட்ஸ் இன் கன்சர்வேஷன்’ விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது.

யூடியூபில் இந்த ஆவணப் படத்தைக் காண:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்