சிறுதானியங்களின் தனித்துவம் என்ன?

By செய்திப்பிரிவு

பெ. தமிழ் ஒளி

சிறுதானியங்கள் வளம் குறைந்த, மழை அளவு குறைந்து வறண்ட பகுதிகளிலும், மலை பிரதேசங்களில் மலைச்சரிவுகளிலும் மானாவரிப் பயிர்களாகப் பயிரிடப்பட்டுவந்தன. சிறு தானியங்களில் பல வகை உண்டு. கேழ்வரகு, சாமை, தினை வரகு, பனிவரகு, கம்பு, குதிரைவாலி போன்றவை தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டு வந்த முக்கியத் சிறுதானியப் பயிர்கள். ஒவ்வொரு வகைக்குள்ளும், பல உள் வகை உண்டு. சாமையில் மட்டும் 6 வகை உண்டு. அதேபோல் வரகில் 5 வகை உண்டு. இதேபோல மற்ற பயிர்களிலும் உள் வகை உண்டு.

சிறுதானியங்களில் இருக்கும் ‘பன்மயம்’ அத்தானியங்களுக்கே உள்ள தனிச்சிறப்பு. இதனால் இத்தானியங்களைப் பல்வேறு தட்பவெப்ப நிலையுள்ள பகுதிகளிலும் விளைவிக்க முடியும். தட்பவெப்பச் சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான மாறுதல்களுடன் உள் வகை உருவாகியிருப்பதால் வெவ்வேறு சூழ்நிலைகளிலும் சிறுதானியங்கள் விளைகின்றன. இதனால் ஒரு குறிப்பிட்ட உள் வகை குறிப்பிட்ட பகுதிகளில் அல்லது வட்டாரங்களில் மட்டுமே விளையும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் விளையும் சாமை வகையை, மலைக்குக் கீழேயுள்ள சமவெளிப் பகுதிகளில் விளைவிக்க முடியாது. அதேபோல் ஒரு குறிப்பிட்ட சமவெளிப்பகுதியில் விளையும் சிறுதானிய வகையைத் தட்பவெப்பம், மண்ணின் தன்மை மாறிய இன்னொரு சமவெளிப் பகுதியில் விளைவிப்பது இயலாத செயல். சிறுதானியங்கள் வெப்பத்தை, வறட்சியைத் தாங்கிவளரும் பயிர்கள். 200 மி.மீ. - 500 மி.மீ. வரையில் மழைபெறும் பிரதேசங்களிலும் சிறுதானியங்கள் வளரும்.

சிறு தானியப் பயிர்கள் நன்கு வறட்சியைத் தாங்கும். இன்று நாம் பயன்படுத்தும் முக்கிய தானியங்களான நெல் 35 டிகிரி சென்டிகிரேடுவரை மட்டுமே வெப்பத்தைத் தாங்கும், கோதுமையோ 38 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தைத் கடந்தால் தாங்காது.

ஆனால் சிறு தானியங்களோ 460 டிகிரி சென்டிகிரேடுவரை தாக்குப் பிடிக்கும். கடும் வறட்சியையும் வெப்ப அலைகளையும் தாங்கி நிற்கும் சிறு தானியங்களின் இன்னொரு சிறப்பம்சம் வளி மண்டலத்திலுள்ள கரிய மில வாயுவின் (Carbon dioxide) அளவைக் குறைக்கும். இதனால் பருவநிலை மாற்றத்தால் வரும் பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்கான பங்களிப்பையும் சிறு தானியங்கள் வழங்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த காலத்தில் சிறுதானியங்கள் பொதுவாகக் கிராமப்புறச் சிறு, குறு விவசாயிகள், விவசாயிக் கூலிகளின் வீடுகளில் சமைக்கும் பாரம்பரியச் சமையலுக்கு முக்கியமாகப் பயன்பட்டு வந்தது. சிறு தானியங்களை அதிக அளவில் விளைவித்து வந்த அந்தக் காலத்தில் இந்த விவசாயக் குடும்பங்கள் தங்களுடைய உணவுத் தேவையை ஓரளவுக்குச் சுயமாகப் பூர்த்திசெய்து கொள்ளும் நிலையில் இருந்தன. பாரம்பரியமாகச் சிறு தானியங்கள் பயிரிடும் வயல்களில் பல வகையான சிறுதானியம், பயறு வகையைக் காணலாம். அவ்வயல்கள் ஒற்றைப் பயிர்களைக் கொண்ட வயல்களாக இருக்காது.

சிறுதானியங்கள் பயிரிடுவதில் பயிரிடப்படும் சுற்றுச்சூழலுக்கும் பயிரிடும் விவசாயச் சமூகங்களின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு அம்சங்களுக்கும் நெருக்கமான பிணைப்புண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோலக் குறிப்பிட்ட சிறுதானிய வகையைப் பயிரிட அந்தப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.

அதேபோல் பயிரிடும் வேளாண் குடும்பங்கள் விதைத் தேர்வு, தரமான விதை சேமிப்பு, விதைக்கும் காலத்தில் விதைப் பகிர்வு, பயிரிடும் உழவியல் முறைகள் குறித்த அனுபவ அறிவு, பூச்சி மேலாண்மை போன்றவற்றை அறிந்துவைத்திருப்பர். இவை தவிர சிறு தானியங்களில் சமைக்கப்படும் உணவுப் பண்டங்கள், சமைக்கும் முறைகள், அதனால் உண்டாகும் உடல் நலன் போன்றவை குறித்த அறிதலும் அனுபவமும் பயிரிடும் வேளாண் குடும்பங்களுக்கு இருக்கும்.

சிறுதானியங்களும் நூண்ணுட்டச்சத்தும்

சிறு தானியங்கள் நுண்ணூட்டச்சத்துக்குப் பெயர் பெற்றவை. நாம் அன்றாடம் உணவாகக் கொள்ளக்கூடிய தானியங்களான நெல், கோதுமை ஆகியவற்றில் இல்லாத பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் சிறு தானியங்களில் உண்டு. சிறு தானியங்கள் புரதத்துக்கும், நார்ச்சத்துக்கும் பெயர் பெற்றவை.

இவை தவிர நுண்ணூட்டச்சத்துக்களான இரும்பு, வெண்கலம், மாங்கனிஸ், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவையும் பி வைட்டமின்களையும் சில வகையான அமினோ அமிலங்களையும் கொண்டிருக்கின்றன. மேலும் உடல் சுகாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பசையம் (Gluten) இல்லை. தவிர கிளைசெமிக் அட்டவணையில் (Glycemic Index) குறைந்த நிலையில் இருப்பதால், நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்கும் கட்டுக்குள் வைப்பதற்கும் ஏற்ற உணவாகச் சிறுதானியங்கள் கருதப்படுகின்றன.

தொடரும்...

கட்டுரையாளர், சமூக மானுடவியலாளர்

தொடர்புக்கு: thamizoli@hotmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்