இது இயற்கை ஸ்டிரா

By அ.அருள்தாசன்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில் அல்வாவை ஓலைப் பெட்டியில் வைத்து வழங்குவது, இறைச்சியை வாழை இலையில் கட்டித்தருவது என்றெல்லாம் இயற்கைக்கு உகந்தவகையிலான நடவடிக்கைகளில் வியாபாரிகள் களமிறங்கியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் வசவசப்பபுரத்தில் சைக்கிளில் இளநீர், நுங்கு வியாபாரம் செய்யும் இசக்கி, பிளாஸ்டிக் ஸ்டிராவுக்குப் புதுமையான ஒரு இயற்கை மாற்றுப் பொருளைக் கண்டுபிடித்துள்ளார். இந்தப் புதிய மாற்றுப் பொருளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. பப்பாளி இலையின் தண்டுதான் அந்தப் புதுமையான மாற்றுப் பொருள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இளநீர், நுங்கு வியாபாரம் செய்துவரும் இவரது வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளித்துவருகிறார்கள். பப்பாளி இலையின் தண்டை வெட்டி எடுக்கக் கிராமப் பகுதிகளில் பப்பாளி மரங்களை வளர்ப்போர் அனுமதி அளிக்கிறார்கள். தொடர்ந்து இவ்வாறு பப்பாளி இலையின் தண்டைச் சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சிரமங்கள் இருந்தாலும் முடிந்தவரையில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் இயற்கை முறையிலேயே இளநீரை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் இசக்கி.

இலவசப் பயிற்சி

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையம் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்) சார்பில் லாபகரமான பால் பண்ணை, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, அசோலா வளர்ப்பு ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து இலவச ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானி முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இந்த இலவசப் பயிற்சியில் பங்குபெற விரும்புபவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: 9976645554

புதிய பயிர் ரகங்கள்

கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் பொங்கல் பண்டிகையை ஒட்டி புதிய பயிர் வகையை வெளியீட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பொங்கலை ஒட்டி அதிக மகசூல் தரும் புதிய பயிர் வகை வேளாண் பலகலைக்கழகத்தால் வெளியிடப்படுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டு 14 புதிய பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நெல் பயிரில் 105 நாட்களில் வளரக்கூடிய ஏடீடி 53,  130 நாட்களில் வளரக் கூடிய சம்பா ரகமான விஜிடி1 ஆகிய இருவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அல்லாது சாமைப் பயிரில் ஏடிஎல்1, பாசிப்பயறில் விபிஎன்4, நிலைக்கடலை பிஎஸ்ஆர் 2 உள்ளிட்ட 14 பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE