உயிர் மூச்சு

கிடேரிக் கன்று வளர்ப்பில் கலக்கலாம் | பண்ணைத் தொழில்

பா. டென்சிங் ஞானராஜ்

உலகிலேயே பால் உற்பத்தியில் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடம் வகித்து வருகிறது இந்தியா. இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 62 சதவீத பாலை சிறுகுறு பால் பண்ணையாளர்களே உற்பத்திச் செய்தாலும், அவர்களால் பெரிய அளவில் லாபம் பெற முடியவில்லை.

சிறுகுறு பால் பண்ணையாளர்கள் ஆவின் முதலான கூட்டுறவு இணையத்தை நம்பி இருப்பதாலும், குறைவான மூலதனம், நல்ல மரபணு மற்றும் உற்பத்தித் திறனுள்ள மாடுகள் இல்லாததாலும், தீவனப்பற்றாக்குறை முதலியவற்றாலும் சிறிய அளவிலேயே லாபம் ஈட்டுகின்றனர். பெரிய அளவிலான பால் பண்ணையாளர்களின் வெற்றிக்கு திறன்மிக்க, அதிக பால் உற்பத்தித் திறன் கொண்ட பசுக்கள் மற்றும் சிறந்த மேலாண்மை முறைகளே முக்கியக் காரணம்.

சந்தையில் நல்ல மரபணு மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட கறவை மாடுகளுக்கு தேவை இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, சிறுகுறு விவசாயிகள் பால் உற்பத்தியை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் சிறந்த கிடேரிக் கன்றுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வயது நிரம்பிய, சுமார் 10 முதல் 12 லிட்டர் வரை பால் கறக்கக்கூடிய பசுவின் கன்றுகளை வாங்கி, அதனை வளர்த்து, சினையுறச் செய்து, விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்ட முடியும்.

எடுத்துக்காட்டாக, சுமார் ஒரு வயது நிரம்பிய நல்ல உற்பத்தித் திறன் கொண்ட கலப்பினக் கிடேரிக் கன்றை ரூ.15,000க்கு வாங்கலாம். ஒரு வருடம் நல்ல ஊட்டச்சத்து நிறைந்தத் தீவன மேலாண்மை மற்றும் இனப்பெருக்க வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

இரண்டு முதல் இரண்டரை வயதிற்குள் சினையுறச் செய்து, ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விற்று லாபம் ஈட்டலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒன்று முதல் ஒன்றரை வருடத்தில் தீவன மற்றும் பிறச் செலவுகள் போக, ஒரு கிடேரிக் கன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை லாபமாகப் பெற முடியும்.

இவ்வாறு கிடேரிக் கன்றுகளை வளர்ப்பதற்கு, சிறந்த கிடேரிக் கன்றுகளை தேர்வு செய்வது மிக முக்கியம். பத்து முதல் பன்னிரண்டு லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களுக்கு பிறந்த, நல்ல வளர்ச்சி, உடல் நலம் மற்றும் உடல் அமைப்பை பெற்ற கிடேரிக் கன்றுகளை தெரிவு செய்து வாங்க வேண்டும். பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப ஒரு தடவைக்கு 5 முதல் 10 கன்றுகளை இவ்வாறு வாங்கி வளர்க்கலாம்.

மாடுகளில் பருவ சுழற்சி, உடல் எடையை பொறுத்தே அமையும். போதுமான உடல் எடை அல்லது வளர்ச்சி இல்லாத கன்றுகள் பருவ சுழற்சி அடைய தாமதமாகும். கிடேரிகள், பெரிய பசுக்களின் 60 முதல் 70 சதவிகித உடல் எடையை அடைந்தால் மட்டுமே பருவ சுழற்சி அடைந்து சினையுற தகுதி பெறும்.

குறித்த வயதிற்குள் சினையுற வேண்டுமானால், குறித்த வயதிற்குள் உடல் எடை மற்றும் வளர்ச்சியை அடையச் செய்வது இன்றியமையாததாகும். சிறந்த தீவன மேலாண்மை மூலம் இந்த இலக்கை எளிதில் அடையலாம்.

கிடேரிக் கன்றுகள் வளர்ச்சி நிலையில் இருப்பதால் சிறந்த தீவன மேலாண்மை இன்றியமையாததாகும். போதுமான அளவு பசும்புல், வைக்கோல் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த அடர்தீவனம் அல்லது புண்ணாக்கு அளிக்க வேண்டும். இதன் மூலம் அவற்றின் உடல் வளர்ச்சி சீராக அமைவதுடன் 15 முதல் 18 மாதங்களில் பருவ சுழற்சி அடைந்து சினையுற தேவையான உடல் தகுதியும் பெறும்.

முறையான குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி இடுவது நோய் தொற்றைக் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கும். ஒன்றரை வயதிற்கு மேல் நல்ல உடல் வளர்ச்சி மற்றும் பருவ சுழற்சி அடைந்த கிடேரிகளை செயற்கை முறை கருவூட்டலுக்கு உட்படுத்தி சினையுறச் செய்ய வேண்டும். நிலையான வருமானம் ஈட்ட இரண்டு வயதிற்குள் கிடேரிகளை சினையுறச் செய்வது அவசியம். சினையுற்றக் கிடேரிகளை இரண்டரை வயது முதல் விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.

ஓன்று முதல் நான்கு பசுக்களை வைத்து பால் உற்பத்தி செய்யும் சிறுகுறு பால் பண்ணையாளர்கள், பால் உற்பத்தி இல்லாத சமயங்களில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, கிடேரிக் கன்றுகளை வளர்த்து, விற்பதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

- (கட்டுரையாளர், சென்னை காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர்; தொடர்புக்கு: 9940590238)

SCROLL FOR NEXT