உயிர் மூச்சு

மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றுமொரு புதையல்

மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில், முடிவில்லாமல் பரந் திருக்கும் தேயிலை, காபித் தோட்டங்களில் பசுமையோடு ஒளிரும் ஓர் அழகிய நகரம் - வால்பாறை. இங்கு வாழும் பழங்குடியினரும் உள்ளூர் மக்களும் இந்த ஊரை ‘ஏழாவது சொர்க்கம்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். குளிர்ந்த காற்று, மேகங்கள் சூழ்ந்த மலைகள், ஆங்காங்கே அருவிகள் வழிந்தோடும் இந்தப் பகுதி, காட்டுயிர் ஆர்வலர்களுக்கு ஒரு கனவு.

காடு, தேயிலைத் தோட்டங்கள் சாலையின் இருபுறமும் பரந்து கிடக்கும் சூழலில், நாங்கள் தவளைகளைத் தேடிக்கொண்டிருந்தோம். நாங்கள் என்று இங்கே குறிப்பிடுவது என் மேலாளர் முனைவர் விஷ்ணுப்பிரியாவையும் என்னையுமே. அந்தச் சாலையோரச் சேற்றில் சற்றே வியப்பூட்டும் ஒரு மர்ம உயிரினத்தை எதிர்கொண்டோம். சற்று அருகில் சென்று நான் அதைக் கண்டபோது, அது மண்புழு என்றே நினைத்தேன்.

காலில்லா நீர்நில வாழ்வி: விவசாயிகளின் நண்பன் யார் என்று பள்ளிக் குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் பதிலாகக் கூறும் மண்புழுவைப் போன்றே அது தோற்றமளித்தது. மண்புழுவிடம் ஒரு சுவாரசிய மான விஷயம் என்னவென்றால், அதன் கிளை டெல்லம் (clitellum) திசுப் பகுதியில் இரண்டு துண்டாக வெட்டினாலும்கூட, இரண்டும் உயிர் பிழைக்கும் வல்லமை பெற்றவை.

இவை மண்ணுக்குள் நெளிந்து நகர்ந்து செல்லும்போது மண்ணின் இறுக்கத்தன்மை தளர்ந்து, மண் உழப்பட்டு அதனுடைய வளத்தைப் பெருக்க உதவுகிறது. இவை முதுகெலும்பில்லா உயிரினம். ஆனால், நான் பார்த்த புழுவின் முகத்தை-முன்பகுதியை உற்றுப் பார்த்தபொழுது பாம்பு போலவும் அது தோற்றமளித்தது.

அதனுடைய கண்கள் சிறிதாகவும், உடம்பு நெகிழ்ந்து நீளமாகவும் வழுவழுப்பாகவும் இருந்தன. அதன் உடல் அமைப்பு மோதிரங்களை இறுக்கி வைத்ததுபோல் நெருக்கமான வளையங்களைக் கொண்டிருந்தது. அதன் உடல் மேற் பரப்பு தவளையின் தோல்போலவும் ஓரளவுக்கு இருந்தது.

அதைக் கையில் எடுக்க முற்பட்ட போது, அது வளைந்தும் நெளிந்தும் கையை விட்டு நழுவியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ‘இது என்ன வகை உயிரினம்?’ என்கிற குழப்பத்தில் என் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது.

அப்போது என் மேலாளர், ‘இது நீர்நில வாழ்விகள் வகையைச் சேர்ந்த முதுகெலும்புள்ள உயிரினம்’ என்றும், ‘இவ்வகையின் ஆங்கிலப் பெயர் ‘சிசிலியன்’ (Caecilian) (அ) காலில்லா நீர்நில வாழ்விகள்’ என்றொரு புது உலகத்தை அறிமுகப்படுத்தினார். பொதுவாக இவ்வகை உயிரினங்களைப் பற்றி யாரும் அதிகம் அறிந்திருப்பதில்லை. முதுகெலும்புள்ள இந்த உயிரினமும், மண் வளத்தைப் பெருக்கவே உதவிவருகிறது. இவை காலில்லாத் தவளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆச்சரியமூட்டும் சிசிலியன்: மேற்கண்ட நிகழ்வை அடுத்து, அவற்றின் மீதான என் ஆர்வம் அதிகரித்தது. இந்த மாதிரியான உயிரினம் எங்கெல்லாம் காணப் படுகிறது என்று தேடத் தொடங்கினேன். அத்தேடல் என்னை வியப்பிலும் ஆச்சரியத் திலும் ஆழ்த்தியது.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் சிசிலியன்கள் காணப்படுகின்றன. உலகளவில் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியாவின் வெப்பமண்டலக் காடுகளிலும் இவை வசிக்கின்றன. சாதாரணமாக, நிலத்தின் மண்அடுக்குகளுக்குள் இவை மறைந்து வாழ்கின்றன.

ஆனால், பருவமழையின் முதல் துளிகள் மண்ணை நனைத்தவுடன், வளைந்து நெளிந்து இவை வெளியே வரத் தொடங்கும்! அப்போதுதான் மண்ணும் நிலமும் தளர்ந்து, இவை நகர்வதற்கும் உணவு தேடுவதற்கும் ஏற்றவாறு மாறியிருக்கும்.

இவை இரவாடிகள். பகலில் மண்ணில் விழுந்த இலைகளுக்கு அடியில், அழுகிய மரக்குச்சிகளுக்குள், மண்ணின் ஆழத்தி லேயே மறைந்துகொண்டிருக்கும். இரவுதான் இவற்றின் மேடை! இருள் சூழ்ந்ததும், மண்ணின் அடுக்குகளிலிருந்து ஊர்ந்து வெளியே வரும்.

வேட்டையாடிகள்: இவற்றின் கண்கள், மறுசீரமைப்பு அடைந்தவையாக இருக்கின்றன. ஆனால், அவற்றால் பெரிய பயன் எதுவும் இல்லை. பார்வையை நம்பாமல், தன் நுண்மையான உணர்விகளை வழிகாட்டுவதற்கு நம்பி நுண்ணுயிரிகள், கறையான்கள், மண் புழுக்களை இவை வேட்டையாடி உண்ணும். அத்துடன், சிசிலியன்களின் வாய்க்குள் ஒன்று மட்டுமல்ல, இரண்டு வரிசைப் பற்கள் உண்டு! இந்தப் பற்கள், அவற்றின் நுண்ணுயிர் உணவு தப்பித்துச் செல்ல முடியாதபடி பிடித்துவிடும்.

என்ன ஒரு வேடிக்கை! நான் இதை ‘விவசாயியின் நண்பன்’ என்று நினைத்தால், விவசாயியின் நண்பனை உண்ணும் இனமாக அல்லவா இவை இருக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டிய ஓர் முக்கியமான அம்சமும் இருக்கிறது. எப்படி மான்களை உண்பதற்கு சிறுத்தை இருக்கிறதோ, முயல்களை உண் பதற்குச் செந்நாய்கள் இருக்கின்றனவோ, அதுபோல் மண்புழுவை உண்பதற்கு சிசிலியன் உள்ளது. இவை எல்லாம் இரைகொல்லிகள். உணவு வலையைச் சமநிலையில் வைப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முட்டையிடுதலும் பால் கொடுத்தலும்: சிசிலியன் முட்டையிடும் ஓர் உயிரினம். முட்டை இட்டவுடன் தாயானது தனது முட்டைகளைச் சுற்றி இருந்தபடி, குட்டிகள் வெளியே வரும்வரை பாதுகாக்கும். இவற்றைப் பற்றிய சில ஆராய்ச்சிகளைப் படித்தபோது, ஒரு வகையான கொழுப்புச் சத்தை தனது தோலின் மேல் சிசிலியன் தாய் சுரக்கிறது. அது தாய்ப்பால்போல ஊட்டச்சத்து மிக்கதாக இருக்கும். அதனுடைய குட்டிகள் அதை உணவாக உட்கொண்டு வளர்வதாகத் தெரிந்து கொண்டேன்.

நீர்நில வாழ் உயிரின வகைகளில், தாய்ப்பால் போல் சுரந்து குட்டிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உயிரினம் இது மட்டுமே. இது குறித்து ஆப்ரிக்கா, தென் அமெரிக்காவில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பல்லுயிர்கள் பெருகியிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போதுவரை 26 சிசிலியன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன எனப் பல வகை உயிரினங்கள் வாழும் செழிப்பான மலைகள் சூழ்ந்த வால்பாறையில், இவ்வகையைப் பற்றி உள்ளூர் மக்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்க
வில்லை. சிலர் மண்புழு என்று இதைத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

இன்னும் சிலர், அதைப் பாம்பு என்று நினைத்துக் கொன்றுவிடுகின்றார்கள். என்னதான் கொடிய நஞ்சுள்ள பாம்பாக இருந்தாலும்கூட, அதை கொல்வது தவறு. ஆனால், இவையோ நஞ்சில்லாத, மென்மையான உயிரினங்கள்; மண்ணின் வளத்தைப்பெருக்க உதவும் அரிய உயிரினமும்கூட. இவற்றைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுத்து மக்களுக்குக் காட்சிப்படுத்துவதன் மூலம், இவற்றைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்க முடியும்.

என்னதான் பொன்முடி புதர்த் தவளையிலிருந்து சிறுத்தை வரை பார்த்துவிட்டாலும், கண் எதிரில் காலடியில் மறைந்து போகும் சிசிலியன் போன்ற உயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தவறுகிறோம். காலடியில் வாழும் சிற்றுயிரோ சிசிலியனோ அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் தொடர வேண்டும். அதற்கு முதலில் அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

- கட்டுரையாளர், WCS-India நிறுவனத்தில் காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; preethi.s@wcsindia.org

SCROLL FOR NEXT