உயிர் மூச்சு

நெய்தல் மலரை எப்போது மீட்கப் போகிறோம்? | ஆயிரம் மலர்களே மலருங்கள் 5

ஆதி வள்ளியப்பன்

இயற்கை எண்ணிறைந்த அதிசயங்கள் நிறைந்தது. அதைப் புரிந்துகொள்ளப் புகுந்தால், அது நமக்குக் காட்டும் ஆச்சரியங்கள் கணக்கில் அடங்காதவை. இயற்கையை அறிந்துகொள்ள நினைப்பவர் அடிப்படையில் ஒரு துப்பறிவாளராக இருக்க வேண்டும். நம் இயல் தாவரங்களை நெருக்கமாக அறிமுகப்படுத்த முயலும் இந்தத் தொடரை எழுதும் பயணம் எனக்குமே துப்பறியும் பயணத்தைப் போன்றுதான் உள்ளது.

சங்க கால மருதம் எது என்று மூன்றாவது அத்தியாயத்தில் பேசியிருந்தோம். வெள்ளை மருதம், செம்மருதம் சார்ந்து நடைபெறத் தொடங்கியுள்ள விவாதம் குறித்து எழுதியிருந்தேன். அதேபோல் சரியான நெய்தல் மலரைப் பற்றி அறிய முயன்றபோது, அது எவ்வளவு சிக்கலும் பிரச்சினைகளும் நிறைந்தது என்பது புரிந்தது. மற்ற நீர்க்கொடித் தாவரங்களும் நெய்தல் மலரைப் போன்ற நிறம், வடிவத்தைக் கொண்டிருப்பதால், நெய்தலைப் பிரித்தறிவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன.

எது நெய்தல்? - மலர்களின் வெளித்தோற்றம், நிறம் அடிப்படையில் ஆம்பல் (செவ்வாம்பல், வெள்ளாம்பல்), நெய்தல் (வெளிர் நீலம்), குவளை (செங்குவளை, கருங்குவளை), காவி (கருநீலம்), செங்கழுநீர் ஆகிய மலர்கள் ஒன்றுபோலத் தோன்றும். ஆனாலும் இவை வேறுபட்டவை என்பதை கோவை இளஞ்சேரனை மேற்கோள் காட்டி கு.வி.கிருஷ்ணமூர்த்தி தெளிவுபடுத்துகிறார்.

பரிபாடலில் கீரந்தையார் என்னும் சங்கப் புலவர் ‘இரு நிலத்து ஊழியும் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி ஈட்டம்’ எனக் கூறியுள்ளதன் மூலம், இவை நான்கும் வேறுவேறான பூக்கள் என்பது குறித்த புரிதல் சங்க காலத்திலேயே இருந்துள்ளதைப் பார்க்கலாம்.

‘ஆம்பல், அதன் வகைகளான செவ் வாம்பல், வெள்ளாம்பல், கழுநீர், அரக்காம்பல், சேதாம்பல், கைரவம் போன்றவை Nymphaea pubescens Willd என்கிற தாவரப் பெயரால் அழைக்கப்பட வேண்டும். நெய்தல், கருநெய்தல் ஆகியவை Nymphaea nouchali var. nouchali (முன்பு Nymphaea nouchali Burm.f. எனப்பட்டது) என்கிற தாவரப் பெயரால் அழைக்கப்பட வேண்டும்’ என்கிறார் கு.வி.கிருஷ்ணமூர்த்தி.

குவளை (Monochoria vaginalis), மேற்கண்டவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என்று கூற முடியவில்லை. காவி எனும் மலர் Monochoria பேரினத்தைச் சேர்ந்ததாக இருக்க சாத்தியம் அதிகம் என்கிறார். ஆம்பல் குடும்பத்தின் மற்றொரு தாவர வகையே தாமரை. இந்தச் செய்திகள் அனைத்தும் பேராசிரியர் கு.வி.கியின் ‘தமிழரும் தாவரமும்’ நூலில் கிடைக்கின்றன.

நீர்க்கொடித் தாவரங்களில் இயற்கை சில விளையாட்டுகளை ஆடியுள்ளது. மனிதர்கள் செயற்கையாகத் தாவரக் கலப்பினங்களை உருவாக்குவதைப் போல, பரிணாம வளர்ச்சியில் இயற்கையாகவே கலப்பினங்கள் உருவாகின்றன. பொதுவாக நீர்நிலைகளில் பார்க்கக்கூடிய அல்லி வகை நெய்தலின் கலப்பினமாகத் தோன்றியதுதான் என்கிறார் கு.வி.கி. கூடுதலாக ஓமன், சௌதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சில நீர்க்கொடி மலர் வகைகளும் நெய்தலுடன் குழப்பிக்கொள்ளப்படுகின்றன. இந்தக் குழப்பங்களைக் களைய தற்போது மரபணு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

கழிமுக மலர்: உலகிலேயே திணை அடிப்படையில் நிலப்பகுதிகளைப் பகுத்த பண்பாடு, தமிழ்ப் பண்பாடு. திணை நிலப் பகுதி ஒவ்வொன்றும் தனித்துவமான மலர்களின் பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட திணை நிலப் பகுதியில் பரவலாக இருந்த தாவரம் என்பதற்குப் பதிலாக, தனித்துவம் முன்னிறுத்தப்பட்டதை இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் திணைத் தாவரங்கள் ஒவ்வொன்றும் குறிஞ்சி (குற்றுச்செடி), முல்லை (கொடி), மருதம் (மரம்), நெய்தல் (நீர்க்கொடி), பாலை (மரம்) எனப் பல்வேறு தாவர வகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தின.

அல்லி, ஆம்பல், தாமரை போன்றவற்றுக்கு மாறாகக் கடற்கரையோர நீர்நிலைகளில் மலரும் நெய்தல் மலரைக் கொண்டே கடலும் கடலையும் சார்ந்த பகுதி அடையாளப்படுத்தப்பட்டது. Nymphaea என்கிற தாவரப் பேரினத்தைச் (Genus) சேர்ந்தது நெய்தல். மலர் இதழ்களின் வெளிப்பகுதி கருநீலமாகவும், உட்பகுதி சற்று வெளிறியும் காணப்படும்.

நெய்தல் மலரில் கருநெய்தல், செந்நெய்தல் என நிற வேறுபாடுகள் உண்டு. நம் உள்ளங்கையைக் குவளைபோல் விரித்தால் வரக்கூடிய அளவுக்கே நெய்தல் மலர்கிறது. நல்ல நறுமணம் கொண்டது. இதன் இலைகளின் நுனிப்பகுதி வரிவரியாக இருக்கும். ஓரளவு உவர்நீரும் நன்னீரும் கலந்துள்ள இடத்திலேயே பொதுவாக இது வளரும்.

ஆழமற்ற பகுதிகளிலும் இதைப் பார்க்கலாம். கடல், நன்னீர் நிலைகள் கூடுமிடத்தில் உருவாகும் கழிமுகத்தில் இம்மலர்களைப் பார்க்க முடிவதை ‘இருங்கழி நெய்தல்’ என்று குறுந்தொகை (336) குறிப்பிடுகிறது. ‘நீள் நறுநெய்தல்’, ‘கட்கமழ் நெய்தல்’ என இரண்டு நெய்தல் வகைகள் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

எங்கே இருக்கிறது?-சென்னை ஒரு கடலோர நகரம். இது நகர்மயமாகத் தொடங்குவதற்கு முன் ஊர் முழுக்கக் குளம், குட்டைகள், சதுப்புநிலங்கள், கால்வாய்களாகவே இருந்துள்ளது. அப்பொழுது நெய்தல் மலர்கள் இயல்பாகப் பார்க்கக்கூடியவையாக இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சென்னையிலோ தமிழகத்தின் மற்ற கடலோரப் பகுதிகளிலோ நெய்தல் மலரைக் காண்பது அரிதாகிவிட்டது.

காவிரிப்பூம்பட்டினம் அருகே நெய்தல் வாயில் என்று முன்பு அழைக்கப்பட்ட ஊர், தற்போது நெய்வாசல் ஆகிவிட்டது என்கிறார் ரா.பி.சேதுப்பிள்ளை. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஒரு நெய்தலூர் இருந்திருக்கின்றன.

கடைசி மலர்கள்: எழுத்தாளர் நக்கீரன் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழலை அறிமுகப் படுத்த எழுதிய ‘பசுமைப் பள்ளி’ நூலில், நெய்தல் மலரைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டிருப்பார். இன்றைக்கு வெறும் பெயராக மட்டுமே நெய்தலை வைத்துக் கொண்டிருக்கிறோம். நெய்தல் தாவரம் வாழ்வதற்கான இயற்கைச்சூழலியல் அம்சங்களைச் சிதைத்துவிட்டோம். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையம் அருகே உள்ள மூர்மார்கெட் கட்டிடம் என்பது பழைய அல்லிக்குளத்தின் மீதுதான் நிற்கிறது.

இன்றைக்கு அங்கு குளமோ நீர்த்தாவரங்களுக்கான சுவடோ இல்லை. பள்ளிக்கரணை சதுப்புநிலம், சோழிங்கநல்லூர் அருகேயுள்ள காரப்பாக்கம் சதுப்புநிலம், எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி என உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, சென்னையின் ஒரு சில பகுதிகளில் நெய்தல் தப்பிப் பிழைத்திருப்பது குறித்துப் பேராசிரியர் டி.நரசிம்மன் மற்றும் ‘பல்லுயிர்’ இயற்கைப் பாதுகாப்புக் குழு மூலமாக அறிய முடிந்தது.

நெய்தலை நேரில் பார்க்க 170 கி.மீ. பயணித்து விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டுவரும் ‘ஆரோவில் தாவரவியல் பூங்கா’வில் நான் பார்த்தேன். வெப்பமண்டல வறண்ட பசுமைமாறாக் காடுகளைச் சேர்ந்த தாவரங்கள் இந்தப் பூங்காவில் வளர்க்கப்பட்டுவருகின்றன. அதேநேரம், நெய்தலைக் கடலோர ஊர்களில் தமிழ்நாடு அரசு பாதுகாத்திருக்க வேண்டும், முடிந்த இடங்களில் எல்லாம் வளர்த்திருக்க வேண்டுமில்லையா?

அரசு மீட்டெடுக்குமா? - கீழடி, பொருநை நாகரிகங்கள், சங்க காலம் குறித்துப் பெருமைப்படுகிறோம். மொழி, பண்பாடு, வரலாறு சார்ந்து நமக்குள்ள வளங்கள் உண்மையிலேயே அரிதானவை, பெருமிதத்துக்குரியவை. கீழடி அருங்காட்சியத்தில் உள்ள தொல்பொருள்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றன, தொன்மையைப் பறைசாற்றுகின்றன, நம் பண்டைய அறிவைப் பகிர்கின்றன.

இப்படிப் பொருள்சார் விஷயங்களைப் பாதுகாப்பதுடன், நமது பெருமிதங்கள் முடிந்துவிட்டனவா? சென்னையில் செம்மொழிப் பூங்கா, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்கா எனத் தோட்டக்கலைத் துறை, சுற்றுச்சூழல் துறை பங்கேற்பில் எத்தனையோ பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கையை ஓரளவுக்குத் தக்கவைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை இவை. நம் ஐந்திணைத் தாவரங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மலையில் மட்டுமே பூக்கும் குறிஞ்சியை விட்டுவிடுவோம்.

முல்லை, மருதம், நெய்தல், பாலை தாவரங்களை மக்கள் நேரடியாகப் பார்க்கும் வகையில் பூங்காக்களில் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது நடைபெறவில்லை. வரலாற்று, பண்பாட்டுப் பெருமைகளைப் பேசும்போது, காலம்காலமாகத் தொடர்ந்து வரும் இதுபோன்ற இயற்கை மரபுச் சின்னங்களை அனைவர் கண்களிலும் படும்படி வளர்ப்பது குறித்து இனியாவது அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகளுக்காகப் புகழ்பெற்ற லண்டன் கியூ கார்டன் உடன் 2023 ஜூலை 27இல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. அந்தப் பூங்காவிலிருந்தாவது மேற்கண்ட நடைமுறை தொடங்கப்பட வேண்டும்.

பெயர்: நெய்தல்
மற்ற பெயர்கள்: கருநெய்தல், செந்நெய்தல்
ஆங்கிலத்தில்: Blue water lily
அறிவியல் பெயர்: Nymphaea nouchali var. nouchali
தாயகம்: இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா
பார்க்கக்கூடிய இடங்கள்: சென்னை பள்ளிக்கரணை, எண்ணூர் காட்டுப்பள்ளி, ஆரோவில் தாவரவியல் பூங்கா
பூக்கும் காலம்: ஆண்டு முழுவதும்
அங்கீகாரம்: வங்கதேசத்தின் தேசிய மலர்

(அடுத்த அத்தியாயம்: அசோகத்தில் நிகழ்ந்த சோகம்)

valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT