மாவட்டப் பறவையை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்று எட்டு ஆண்டுகளுக்கு முன் ‘உங்கள் மாவட்டத்தின் பறவை எது?’ [https://tinyurl.com/2mx8sx9s] என்கிற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை உயிர் மூச்சு’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அப்போது, சேலத்தின் பறவையாகப் பாம்புத்தாராவைப் பரிந்துரை செய்திருந்தேன். அண்மையில் அதை நான் மீண்டும் ‘தூசி தட்டியபோது', மாவட்டப் பறவைக்கான காரணிகளும் அளவுகோலும், இன்னும் ஆழமாகவும் வலுவாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கலாமே என்றெண்ணி, எட்டுக் காரணிகளை முடிவு செய்தேன்.
அவை 1) ஐ.யு.சி.என். நிலை, 2) வாழிடம், 3) ஓரிடவாழ் நிலை, 4) மாவட்டத்தில் பரவல், 5) எளிதில் பார்க்க முடிவது, 6) எளிதில் அடையாளம் காண முடிவது, 7) இந்தியப் பறவைகளின் நிலை அறிக்கையின் மதிப்பாய்வு, 8) பண்பாட்டுத் தொடர்பு. ஒவ்வொரு காரணியின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றுக்கு அளவீடுகளைக் கொடுத்து, கணக்கிட்டால் ஒரு மதிப்பெண் கிடைக்கும். அதில் அதிக மதிப்பெண் பெறும் பறவைகளை வரிசைப்படுத்தி, மாவட்டப் பறவைக்கான தேர்வை முறைப்படுத்தினேன்.
வனத்துறையின் ஈடுபாடு: இதை ஓர் அறிக்கையாகத் தயாரித்து சேலம் மாவட்ட வன அலுவலரிடம் கொண்டு சென்றபோது, என்னைவிட அவர் அதிக ஆர்வம் காட்டினார் என்றே சொல்ல வேண்டும். மாவட்டப் பறவைக்குச் சிலை ஒன்று செய்ய வேண்டும், எப்படிச் செய்வது, எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார். ஆனால், மாவட்டப் பறவை என்பது சிலரின் தனிப்பட்ட முடிவாக இருக்காமல் மக்களின் கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு தேர்வாக இருந்தால் சிறப்பாக அமையும் என்று கருதினார்.
மேலும் இந்தத் திட்டம் குறித்தும், எந்தெந்தப் பறவைகளை வாக்கெடுப்பில் முன்னிறுத்துவது என்பதற்கு அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, மாவட்ட வன அலுவலர், விலங்கியல் துறைத் தலைவர், காட்டுயிர் கால்நடை மருத்துவர், சூழலியலாளர், தன்னார்வ அமைப்பின் பிரதிநிதி, அனுபவமுள்ள உள்ளூர்ப் பறவை ஆர்வலர்களைக் கொண்டு ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு வனப் பாதுகாவலரும் (சேலம் வட்டம்), தன் ஒத்துழைப்பையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வழிநடத்தினார்.
வாக்கெடுப்பில் வென்ற பாம்புத்தாரா: சேலம், ஆத்தூர் வனக்கோட்டங்கள், சேலம் பறவையியல் கழகம் ஆகியவை இணைந்து சேலத்தின் மாவட்டப் பறவைக்கான வாக்கெடுப்பை ஏப்ரல் 12 முதல் 30 வரை மேற்கொண்டோம். இதில் வனத்துறை ஊழியர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. இணைய வழியில் 10,325 வாக்குகள், வாக்குச்சீட்டு முறையில் 18,959 வாக்குகள் என மொத்தம் 29,284 வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக 8,854 வாக்குகளுடன் சேலத்தின் மாவட்டப் பறவையாகப் பாம்புத்தாரா தேர்வானது.
48வது ஏற்காடு கோடை விழா, மலர்க் கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய வனம் -கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாம்புத்தாராவை சேலத்தின் மாவட்டப் பறவையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மற்ற பறவைகள் பெற்ற வாக்குகள்: ஆற்று ஆலா (5,158), சோலைப்பாடி (5,016), கருந்தோள் பருந்து (3,719), காட்டுப் பாம்புக்கழுகு (3,609), செம்மார்புக் குக்குறுவான் (1,698), பவளக்கால் உள்ளான் (1,230). இந்த வாக்கெடுப்பில் பெருவாரியாகக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மக்களின் குழப்பம்: வாக்கெடுப்பு நடத்தி, அதில் அதிக வாக்குகள் பெறும் பறவையை மாவட்டப் பறவையாகத் தேர்வு செய்யலாம் என்பதில் சில சிக்கல்கள் இருந்தன. மக்களின் பார்வை என்பது அதிக வண்ணங்களுடன் கூடிய அழகான பறவையை நோக்கியே உள்ளது. மேலும், எந்தப் பறவையின் தமிழ்ப் பெயர் எளிமையாக உள்ளதோ மக்கள் அதையே தேர்வு செய்கின்றனர்.
சேலம் மாநகரில் வசிக்கும் ஒருவர் (காட்டுப் பாம்புக்கழுகை குறிப்பிட்டு), ‘இது எங்க வீட்டு மேல தினமும் சுத்திக்கிட்டு இருக்கும்' என்றார். அவர் பார்ப்பது காட்டுப் பாம்புக்கழுகு அல்ல, கரும்பருந்து என்று புரிய வைப்பதற்குள் பேராசிரியர் ஒருவர், ‘பாம்பு என்பது வீட்டுக்கே ஆகாது.
பெயரில் பாம்பு உள்ள பறவையைத் தேர்வு செய்தால், மாவட்டத்திற்கு என்ன பயன்? ஆனால், சோலைப்பாடியைப் பாருங்கள், யாருக்கும் இடையூறின்றிக் காட்டுக்குள் இருக்கிறது. அதனால் இந்தப் பறவையைத் தேர்வு செய்கிறேன்' என்றார். இதை அவர் வேடிக்கையாகச் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.
மற்றொருவர் ஆற்று ஆலாவைக் காட்டி, ‘ஏன் தம்பி, மைனா வெள்ளை கலர்லகூட வருமா' என்று கேட்டார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை, சேலம் மாவட்டப் பறவைக்கான வாக்கெடுப்பின்போது எனக்குக் கிடைத்த அனுபவங்கள். பறவைகளை அடையாளம் காண்பதில், நிறைய பறவை ஆர்வலர்களுக்கே தடுமாற்றம் இருக்கும்போது, மக்கள் நிச்சயம் சிரமப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வாக்கெடுப்பு வேண்டுமா? - பறவை அவதானிப்பைப் பரவலாக்குவது, அழிவின் பாதையில் உள்ள பறவைகளையும் அவற்றின் வாழிடங்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுமே மாவட்டப் பறவையை அறிவிப்பதற்கான முதன்மைக் குறிக்கோள்களாகக் கருதுகிறேன். தற்செயலாக, நான் மதிப்பெண் அளித்த பட்டியலில் முன்னிலை பெற்றதும் வாக்கெடுப்பில் வென்றதும் பாம்புத்தாராதான்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு ‘பழநி சிரிப்பான்' (Palani Laughingthrush) என்கிற பறவை மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒருவேளை வாக்கெடுப்பில் அந்தப் பறவை அதிக வாக்குகளைப் பெறாமல் போனாலும், வேறு எந்தப் பறவையும் இவ்வளவு கச்சிதமாகப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாறுகழுகா சிட்டுக்குருவியா என்று கேட்டால், மக்கள் சிட்டுக்குருவியைத் தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற வைப்பார்கள். ஆனால், பாறுகழுகுகள்தான் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் தருவதே அறிவியல்பூர்வமாக சரி. சிட்டுக்குருவிகளுக்குத் தரப்படும் அதீத கவனம், மற்ற பறவைகளுக்கும் அவசியம் தேவைப்படுகிறது.
வாக்குகளைக் கொண்டு மட்டுமே மாவட்டப் பறவை தேர்வு செய்யப்பட்டால், அதில் சரியான பறவை கவனம் பெறலாம், பெறாமலும் போகலாம். எனவே, நிபுணர் குழுவின் முடிவுகளுக்குக் கூடுதல் சதவீதம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாவட்டப் பறவையானது தேர்வு செய்யப்பட வேண்டும்.
அரசாணை பிறக்குமா? - மாவட்டப் பறவை, விலங்கு, மலர், மரம், வண்ணத்துப்பூச்சி முதலான இயற்கை சார்ந்த குறியீடுகளை அறிவிக்க அரசாணை எதுவும் உள்ளதா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, அப்படி எந்தத் தகவலும் இல்லை என்று பதில் கிடைத்தது. பல ராம்சர் தளங்கள், ஆவுளியா பாதுகாப்பகம், வரையாடு திட்டம், பல்லுயிர்ப் பூங்கா, வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம், பூநாரைகள் சரணாலயம் எனக் காலநிலை மாற்றம், காட்டுயிர்- இயற்கைப் பாதுகாப்பு சார்ந்து தொடர்ச்சியாகத் திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
அந்தப் பாதையில், மாவட்டப் பறவை முன்னெடுப்பிற்கு, அரசாணை வாயிலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்தால், அதனை நிறைவேற்றும் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழ்நாடுதடம் பதிக்கும். இதுவே இயற்கை, காட்டுயிர், பறவை ஆர்வலர்களின் கனவும் கோரிக்கையும்.
- கட்டுரையாளர், சேலம் பறவையியல் கழகத்தின் நிர்வாக இயக்குநர்