‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. முல்லை, குறிஞ்சி நிலப்பகுதிகள் கோடையில் கடும் வெப்பத்தால் வறண்டு போவதையும், அந்த நிலங்களே திரிந்து பாலை நிலமாவதையும் குறிப்பதாக இதற்குப் பொருள் கொள்கிறோம். சங்கத் தமிழ் நிலத்தில் 4 திணைகளே இருந்ததாகவும், பாலை தனி நிலமல்ல என்றும் கூறப்பட்டுவந்தது. தொல்காப்பியமும் இதையே கூறுகிறது.
அதேநேரம், பண்டைச் சங்க நிலம் என்பது இந்தியாவெங்கும் விரிந்திருந்தது என்றும்; நம் முன்னோர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்து, அந்த இடத்தைத் துறந்து வந்துவிட்ட பண்டைய நிலங்களின் நினைவுகளே சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்றும் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறுகின்றனர். கவரிமா என்பது திபெத் பகுதிகளில் இருக்கும் சடைமாட்டைக் குறிப்பது. அதேபோல் ஒட்டகம் குறித்தும் சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து பெரிதும் விலகியிருக்கும் பகுதிகளைச் சேர்ந்த இந்த விலங்குகளின் பெயர் இலக்கியத்துக்குள் வந்ததை அடிப்படையாகக் கொண்டு மேற்கண்ட கருதுகோளை அவர் முன்வைக்கிறார்.
எல்லா மொழிகளிலும்... அதேநேரத்தில் பாலைத் திணைக்கு உரிய உரிப்பொருள்களும் கருப்பொருள் களும் சங்க காலத்திலேயே வரையறுக்கப் பட்டிருந்தன. பாலைத் திணைக்குப் பெயர் வரக் காரணமாக இருந்தது பாலை மரம். தற்போது அந்த மரம் வெப்பாலை எனப்படுகிறது. வறண்ட நிலப்பகுதிகளிலேயே பொதுவாக இது வளரும். கடும் வெயிலையும் தாங்கி நிற்கும். 23-33 அடி உயரம் வரை வளரக்கூடியது. மத்திய இந்தியா, தென்னிந்தியாவில் பாறையுள்ள மலைப்பகுதிகள், இலையுதிர் காடுகளிலும் இது காணப்படுகிறது.
இந்த மரத்தின் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இந்தப் பால் அல்லது பாலின் வெண்மை நிறமே இதன் பெயருக்குக் காரணம். ஆங்கிலம், இந்தி உட்படப் பல மொழிகளில் இதற்கு வழங்கப்படும் பெயருக்கு இந்தப் பண்பே அடிப்படை. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர், தாவரவியலாளர் வில்லியம் ரைட். எடின்பர்க் ராயல் சொசைட்டி எனும் அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் இணை நிறுவனரான இவரே முதலில் இத்தாவரத்தை வகைப்படுத்தினார். அதன் காரணமாக, இவர் நினைவாக ரைட்டியா என்கிற அறிவியல் பெயர் வைக்கப்பட்டது.
இதன் ஆங்கிலப் பொதுப் பெயருக்கு இரண்டு காரணங்கள். இது அரளிச் செடி (Oleander) பேரினத்தைச் சேர்ந்தது. அத்துடன் சாயமிடுபவர்கள் பயன்படுத்தும் அவுரி நீலச் சாயத்தைப் போன்ற நீல நிறத்தை இதன் இலைகளும் தருவதால், இந்த மரமும் பயன்படுத்தப்பட்டது. அதனால் சாயமிடுபவர்களின் அரளி எனப் பொருள்படும் வகையில் ஆங்கிலப் பொதுப் பெயர் வைக்கப் பட்டது.
நட்சத்திரப் பூங்கொத்து: இதுவும் இளவேனிற் காலத்தில் பூக்கக்கூடிய ஒரு தாவர வகையே. நட்சத்திரம் போன்ற நறுமணம் மிக்க வெள்ளை நிற மலர்களைக் கொண்டது. தொலைவிலிருந்து பார்க்கும்போது மரத்தில் பனிமழை பெய்து, சிறு பனிக்கட்டிகள் மரக்கிளைகளில் தங்கியதைப் போல் இருக்கும். ‘வாலிணர்’ என்பது பூங்கொத்து; பாலைப் பூக்கள் கொத்தாகப் பூப்பதை நற்றிணை இப்படிக் குறிப்பிடுகிறது. ‘தில்லை பாலை கல்லியர் முல்லை’ என்று பாலையைக் குறிப்பிடுகிறது குறிஞ்சிப் பாட்டின் 77ஆம் அடி.
‘கொடிறு போல் காய வாலிணர்ப் பாலை’ என நற்றிணை 107:3-ஆம் வரி குறிப்பிடுவது, இந்த மரத்தைச் சரியாக அடை யாளம் காண உதவுகிறது. சங்க இலக்கியத்தில் இந்தப்பாடலில்தான், பாலை மரத்தின்காய்கள் குறடு போல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காய்கள் ஒல்லியானபீன்ஸைப் போல இரண்டு இரண்டாகவே காய்க்கும். அவை நுனியில் இரண்டும் ஒட்டியது போலவும், நடுவில் குறடுபோல் வளைந்தும், மீண்டும் அடியில் இரண்டும் தொட்டுக்கொண்டும் இருக்கும். இம்மரத்தின் காய்களுடைய இந்தத் தனித்துவ இயல்பை நற்றிணைப் பாடல் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. காய்ந்த பின் இதிலுள்ள விதைகள் தாத்தாபூவைப் போல, பஞ்சுடன் காற்றில் பறந்து செல்லும்.
வண்ணத்துப்பூச்சிகளின் விருப்பம்: பறவைகளின் பன்மைத்தன்மைக்காக அறியப்படும் ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளம் அருகே இளவேனிற் காலத்தில் இந்த மரம் பூத்துக் குலுங்கியது. இந்த மரம் நூற்றாண்டு பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எதிரே உள்ள என்.ஐ.டி.டி.டி.ஆர். ஊழியர்கள் குடியிருப்புக்கு வெளியே இந்த மரம் காணப்படுகிறது. இந்தச் சாலையில் ஒரு முறை நடந்துசென்றபோது, ஏற்கெனவே ‘தமிழரும் தாவரமும்’ நூலில் பார்த்திருந்த படம், இந்த மலர்களை நினைவூட்டி அடையாளம் காண உதவியது.
நீல வரியன் (Tirumala limniace– Blue Tiger), கத்திவால் அழகி (Graphium nomius– Spot Swordtail), கொக்கிக்குறி வெள்ளையன் (Belenois aurota– Pioneer), வெள்ளிக் கம்பிக்காரி (Cigaritis lohita– Long-banded Silverline) ஆகிய வண்ணத்துப்பூச்சி வகைகள் முட்டையிடும், அவற்றின் புழுக்கள் உண்ணும் தாவரம் வெப்பாலை.
மருந்தும் பயனும்: சித்த மருத்துவத்தில் இதன் இலைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் வெப்பாலைத் தைலம் சரும நோய்கள், சொரியாசிஸ் நோய்க்கு மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது. காயம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்று வலி, புழுத்தொல்லை, ரத்தப்போக்கு, காய்ச்சல், மூட்டுகளில் வலி, கௌட் மூட்டுவலி போன்றவற்றுக்குப் பாலை விதைகள், மரப்பட்டை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நாய்க்கடிக்கு இதன் இலைகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பொம்மைகள், கோயில் தேர்கள் செய்ய இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தின் புகழ்பெற்ற சன்னப்பட்ணா பொம்மைகள் இந்த மரத்தைக் கொண்டு செய்யப்படுபவையே. யானைத் தந்தத்தைக் கொண்டு செய்யப்பட்டவை போன்ற நிறத்தை இந்த பொம்மைகள் கொண்டிருக்கின்றன. அதனால்தான் இந்த மரத்துக்குத் தந்தப்பாலை என்கிற பெயர் வந்தது.
ஏழிலைப் பாலை: சங்க இலக்கியங்கள் 13 வகைப் பாலைத் தாவரங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏழிலைப் பாலை, உலக்கைப் பாலை, குடசப் பாலை, கருடப் பாலை, கொடிப் பாலை போன்றவை அவற்றில் சில.
சென்னை கோட்டூர்புரம் நகர்ப்புறக் காடு, மந்தைவெளி ஆகிய பகுதிகளில் ஏழிலைப் பாலை (Alstonia scholaris/Devil’s tree ) காணப்படுகிறது. பள்ளிக் கரும்பலகைகள், சிலேட்டுகள் செய்யப் பயன்படுத்தப்பட்டதால், இந்த மரம் scholaris/scholar tree/blackboard tree ஆகிய பெயர்களைப் பெற்றது. வெப்பமண்டல ஆசியா, ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டது.
செப்டம்பர்-டிசம்பர் மாதங்களில் பூக்கும். பசுமை கலந்த வெண்மை நிறம் கொண்ட இப்பாலையின் மலர்கள் யானை மதநீர்போல் நாறும் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மணம் பெரிதும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். மந்தைவெளியில் பூத்த இந்த மரத்தையும் அதன் மணத்தையும் கடந்த டிசம்பரில் நேரில் பார்த்தும் உணர்ந்தும் இருக்கிறேன்.
சென்னை பழவேற்காடு அருகே திருப்பாலைவனம் என்கிற ஊர் உள்ளது. இந்த ஊர் பாலைவனம் என அழைக்கப்படுவதற்குக் காரணம் முன்பு அங்கு அதிகமாக இருந்த உலக்கைப்பாலை (Manilkara hexandra) மரங்களே. அந்தக் காலத்தில் வறட்சியான, வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளரக்கூடிய, மரத்தில் பால் வரும் மரங்கள் பாலை என்றே அழைக்கப்பட்டன.
பெயர்: பாலை
மற்ற பெயர்கள்: வெப்பாலை/வெட்பாலை,நிலப்பாலை
ஆங்கிலத்தில்: Pala Indigo, Dyer’s Oleander
அறிவியல் பெயர்: Wrightia tinctoria
தாயகம்: இந்தோ-மலேசியப் பகுதி
பார்க்கக்கூடிய இடங்கள்: கிண்டி பூங்கா, தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை, பல்லாவரம் மலை, திருநீர் மலை
பூக்கும் காலம்: ஏப்ரல்-ஜூன்
நேரடி உயிரினத் தொடர்பு: வண்ணத்துப் பூச்சிகள் விரும்பும் தாவரம், பூச்சிகள் இதற்கு மகரந்தச்சேர்க்கை செய்கின்றன.
(அடுத்த அத்தியாயம்: கடலோரம் கண்ட நெய்தல் எங்கே?)