இந்தியா சீன மக்கள்தொகையைத் தாண்டிவிட்டது. 146 கோடி இந்தியர்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்குவதற்குப் போதுமான நிலமும் காடும் கடலும் மரபான தொழில் அறிவும் நம் கையில் மீந்திருக்குமா? இல்லாது போனால், நாம் எந்தச் சக்திகளைச் சார்ந்து நிற்க நேரும்? அதன் நிகரவிளைவுகள் என்னவாக இருக்கும்? கொள்கை வகுப்பவர்களை நிலைகுலைய வைக்கும் பெரும் கேள்வி இது.
உணவு உத்தரவாதம் குறித்த நமது விவாதங்கள் பொதுவாக நிலத்தை மட்டுமே மையப்படுத்தியுள்ளன. வேளாண் நிலமானது தனது வழமையான விளைச்சலைத் தரவேண்டுமானால் அதனுடன் காடு, கடல் என்னும் இரண்டு திணைக் கூறுகளும் இணைந்தாக வேண்டும். காடு இருந்தால் மட்டுமே மழை கிடைக்கும்; கடல்தான் மழையைக் கொண்டுவரும் மேகத்தை உருவாக்குகிறது. தவிரவும், கடல் நமக்குமீன் புரத உணவை வழங்குகிறது.
தின்று செழித்த மரபுணவு: சமைத்த பார் மீனின் தலையை உண்பது ஒரு கலை. மீனைச் சுட்டு உண்ணும் மீனவர் வழமையைக் கீழ்மையாகச் சித்திரிப்போர் ஒரு காலத்தில் இருந்தனர். வேடிக்கை என்ன வென்றால், இன்றைக்கு நட்சத்திர விடுதிகளின் உணவுப் பட்டியலில் சுட்ட மீன் இடம் பிடித்திருக்கிறது. அரிசி ஆடம்பர உணவின் பட்டியலில் இருந்த காலத்தில், மீனுணவுதான் மீனவர்களுக்கு மலிவாகக் கிடைத்தது.
திருவிதாங்கூர்க் கடற்கரைகளில் அன்றைக்குகள், கிழங்கு, மீன்- மூன்றும் அருமையான சேர்மானமாக இருந்தன. மஞ்சத் தண்ணி, உள்ளி மிளகு போன்ற மீன் சமையல்முறை நாஞ்சில், வேணாட்டுக் கடற்கரைகளில் பிரபலம். பருவம் சார்ந்த மீன் சமையல் முறை மீனவர் உணவுப் பண்பாட்டுக்கூறு. நெத்திலிச் சம்பல் மதிப்பு மிகுந்த மீன் பண்டம். மாசிமீன் விருந்து முத்துக்குளித்துறை மீனவர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று. மீனவர்களின் நலவாழ்வில் மீன் உணவின் இடம் மிக முக்கியமானது.
“அன்றைக்குக் கடலுக்குப் போகிற எல்லார் வீட்டுக்கும் நல்ல கறிமீன்களைத் தாராளமாகத் தனியாக எடுத்துவைத்த பிறகுதான், ஏலக் கூடத்துக்கு மீனை எடுத்துப் போவோம். இன்றைக்கு, ஒரு சூரைமீன் பட்டால், அதை எப்படிக் காசாக்குவது என்பதிலேயே கவனமாக இருக்கிறோம்; பெரிய மீன் எல்லாம் தின்பதற்குக் கிடைப்பதில்லை.” என்கிறார் ஜான் போஸ்கோ (1955, இரயுமன்துறை).
நிலமும் உணவு முறையும்: சமவெளி மக்களுக்கு வாய்த்திருந்த சிறுதானிய உணவு என்னும் நல்லூழ் நவீனத் தொழில்நுட்பங்கள், உணவு முறைகளால் தலைகீழாக மாறியது. அதன் விளைவாக மக்களின் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் சிதைவு நேர்ந்தது. மீன்வளத் துறையிலும் அது போன்ற ஒரு வீழ்ச்சி நேர்ந்துவிட்டது.
அறுவடை முறையிலும் சந்தைப் போக்குகளிலும் நேர்ந்த மாற்றங்கள் மீனைக் கிட்டத்தட்ட ஆடம்பரப் பொருளாக மாற்றிவிட்டிருக்கிறது. பஞ்சக் காலத்துக்கு என மீனவர்கள் பெரும்பாலும் உலர்மீனை இருப்பு வைத்திருப்பர். பஞ்சத்தைக் கடக்க அது பெருந்துணை. இரயுமன்துறை மீனவர் ஜான் போஸ்கோ குறிப்பிடுவது போல, ‘உணவாகப் பார்த்த மீனை இன்றைக்கு மீனவர்கள் பணமாகப் பார்க்கிற’ விபத்து நேர்ந்துவிட்டது.
உணவு என்பது ஆற்றலுக்கான இடுபொருள் மட்டுமல்ல, குலங்களின், குடிகளின் பண்பாட்டு அடையாளமும்கூட. குறிப்பிட்ட திணைநில மக்களின் உணவுமுறை நிலத்தால், பருவநிலையால் தீர்மானிக்கப் படுவது; காலத்தால் நிலைநிறுத்தப்படுவது. காலநிலை மாற்றம் எழுப்பியுள்ள பெரும் சவால்களில் ஒன்று, உள்ளூர் உணவு முறைகளுக்கு நேரும் நெருக்கடி. மற்ற வெப்பமண்டல நாடுகளைப் போலவே, நம் நாடும் தானிய உற்பத்தியிலும் மீன் வளத்திலும் நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.
சந்தோஷம் போயிடிச்சி: பெருமணல் தொடங்கி எண்ணூர்வரை கரைக்கடல்கள் கழிவுக் கிடங்காகிக் கொண்டிருக்கின்றன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற கடற்கரையாக வடசென்னை மாறிவிட்டது. மீன் உற்பத்தி செய்யும் திறனைக் கரைக்கடல்கள் இழந்து கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன் உற்பத்தி பெரிதாக நிகழ்வதில்லை. கரைக்கடல்தான் அதைச் செய்கிறது. கெடுவாய்ப்பாக பெருந்தொழிற் சாலைகள் கழிவுகளை அங்குதான் கொட்டிக் கொண்டிருக்கின்றன.
தொழில்நுட்பத்தினால் மீனவர்கள் வளர்ந் திருக்கிறார்களா? “என் காலத்துல வல மேல வல உடுறதில்ல. கரையிலேயே மீன் கெடச்சிடும். மீனோட கரைக்கு வருவோம். சந்தோஷமா சாப்டுட்டுப் படுத்துடுவோம்... இப்போ அந்த சந்தோஷம் போயிடிச்சு” என்கிறார் கோதண்டபாணி (1944, கைப்பாணிக்குப்பம்).
மீனவர்-மீன்வள வளர்ச்சி: இந்தியக் கடல்களின் மீன்வள நெருக் கடிக்குச் சரியான தீர்வு எப்படி அமைய வேண்டும்? அத்தீர்வு கடல் சூழலியல், உயிர்ப்பன்மை, மீன்வள மேலாண்மை, மீனவர் வாழ்வாதாரம், உள்ளூர்ச் சந்தை உறவு, மீன்வளப் பொருளாதாரம், தூதரக உறவு, இறையாண்மைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக அமைய வேண்டும்.
மத்திய அரசு பாரம்பரிய மீனவர் களுக்கு நவீனத் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு, பாதுகாப்புக் கருவிகளை வழங்கி, அவர்களை ஆழ்கடலுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான மானியங்களும் கடனுதவிகளும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இந்திய முற்றுரிமைக் கடல்பரப்பு, கண்டத்தட்டுக் கடல் பரப்புகளில் போய் மீன்பிடித்து வருவதற்கான வழிகாட்டுதலும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
தீபகற்பக் கரைகளிலும் தீவுக்கரைகளிலும் தேவைக்கேற்ப சர்வதேசத் தரம்வாய்ந்த மீன்பிடி துறைமுகங்கள் தேவை. ஒருபகுதி மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி தனித்திறன்களைப் பிற பகுதி மீனவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
மிகைமீன்பிடி நிலவும் கரைக்கடல் பகுதிகளைப் பாரம்பரிய நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்களின் பயன்பாட்டுக்கு என விட்டுவிட வேண்டும். விசைப்படகுகளின் எண்ணிக்கை, விசைத்திறன், மீன்பிடி கருவிகளை ஒழுங்குபடுத்தவும் வேண்டும். இதன் மூலம் தென்தமிழக - இலங்கை மீனவர் தாவாக்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்.
இயற்கை முன்மொழியும் தீர்வு: பெருந்தொற்றுக் காலம், இயற்கை எவ்வளவு பலவீனப்பட்டிருக்கிறது, மனித வாழ்வு எவ்வளவு பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை நமக்கு எடுத்துச்சொல்லும் காலமாக இருந்தது. காலநிலை பிறழ்வு ஏற்படுத்தும் சூழலியல் மாற்றங்கள் வேளாண்மை, உணவு உற்பத்தி, தொழில்துறை, உடல்நலம், அன்றாட வாழ்க்கை என்பதாக மனித வாழ்வின் அவ்வளவு கூறுகளையும் பாதிக்கும் தொடர் பேரிடராக மாறியுள்ளது.
மனித இனத்தின் வளங்களை நுகர்வதிலும் அன்றாடப் பழக்கவழக்கங்களிலும் அடிப்படை மாற்றங்கள் வந்தால் ஒழிய, இச்சிக்கலுக்குத் தீர்வில்லை. இம்மாற்றங்கள் இயற்கை பேணல் என்னும் ஆதிப் பண்பாட்டை நோக்கிய திருப்பமாக அமைய வேண்டும். சூழலியலைத் தழுவிய வளங்களை நுகர்வதும், சந்தை நடைமுறைகளும் அதன் அடிப்படைகளாக வேண்டும்.
தகவும் நெகிழ்வும்: முன்னர் குறிப்பிட்டதுபோல, நேர்ந்து போன சேதங்களைச் சரிசெய்து, பழைய நிலைமைக்குத் திரும்புவது இனிமேல் சாத்தியமல்ல. புதிய சூழலுக்கு நிகழ்காலத் தலைமுறை தகவமைத்துக்கொண்டு வாழப் பழகுவதுதான் ஒரே வாய்ப்பு. காலநிலை மாற்றத்தின் வெளிப்பாடுகளான மிகை வெப்பம், பெருவெள்ளம், வறட்சி, கடுங்குளிர், உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தயாராக வேண்டும். மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கேற்ற பயிர்கள், சாகுபடி முறைகள், உணவு முறைகளுக்குப் பழகிக்கொள்ள வேண்டும். நன்னீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நேர்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களின் வேகத்தைக் குறைப்பது நம் உடனடித் தேவையாகிறது. அன்றாட வாழ்க்கையில் கரிமச் சமநிலை அளவுக்கு வாயு உமிழ்வைக் குறைப்பது அதில் ஒரு நடவடிக்கை. கடலில் சேரும் ஞெகிழி உள்ளிட்ட திடக் கழிவையும், பிற மாசுபாடுகளையும் மட்டுப்படுத்துவது மற்றோர் அவசியமான நடவடிக்கை.
கடற்கரைக் கட்டுமானங்களைத் திட்ட மிடுவதிலும், கடலோரச் சமூகங்களின் குடியிருப்புகளைப் பாதுகாப்பதிலும், நடப்பிலுள்ள கொள்கைகளை மறுபரி சீலனைக்கு உட்படுத்தி ஆகவேண்டும். மொத்தத்தில், காலநிலை பிறழ்வை ஓர் அவசரநிலையாகப் பாவித்து, இயற்கை வள நுகர்விலும் கழிவு மேலாண்மையிலும் புதிய ஒழுங்கினை நமக்கு நாமே புகுத்திக்கொள்ள வேண்டும். பேரழிவுகளைத் தவிர்க்க அல்லது தாமதப்படுத்த மேற்கண்டவை போன்ற நடைமுறை மாற்றங்கள் உதவும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கையுடன் மனிதச் செயல்பாடுகளும் இணையும்போது மாற்றம் சாத்தியம்.
(நிறைவடைந்தது)
- கட்டுரையாளர், பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்; vareeth2021@gmail.com