பாபநாசம் செல்லும் வழியில் அம்பாசமுத்திரம் சாலையின் இருமருங்கிலும் பெரிதாக வளர்ந்திருந்த மருத மரங்களை 10-15 ஆண்டுகளுக்கு முன் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவை வெண்மருது/வெள்ளைமருது மரங்கள். இவைதான் மருதத் திணைக்குரிய மரங்கள் என்கிற பெருமித உணர்வு தோன்றியது. தாவரவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் இதையே சங்க இலக்கிய மருத மரம் எனக் குறிப்பிட்டு வந்தார்கள்.
அதேநேரம், வயலும் வயல் சார்ந்ததுமான மருதத் திணைக்குப் பெயர் வரக் காரணமாக இருந்த மலர் செம்மருது எனச் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்கப் பாடல்களில் வர்ணிக்கப்படும் குறிப்புகள் செம்மருதுக்கே பொருந்துகின்றன. ‘முடக்காஞ்சிச் செம் மருதின்’ என்று பொருநராற்றுப்படையும் (வரி 189),‘செவ்வி மருதின் செம்மலோடு தாஅய்’ என்று குறுந்தொகையும் (50:2) குறிப்பிடுக்கின்றன. இந்த மரத்தின் பூக்கள் இளஞ்சிவப்பு கலந்த ஊதா நிறத்தைக் கொண்டவை. ஊதா கலந்த செந்நிறம் Mauve எனச் சுட்டப்படுகிறது.
இந்தச் செம்மருதமே மருதத் திணைக்குரிய மரம். ‘பொதுவாக மருது என்று சுட்டப்படும் வெள்ளைமருது/அர்ஜுன மரத்தின் பூக்கள் சங்கப் பாடல்களில் குறிப்பிட்டுள்ள நிறத்தைப் பெற்றிருக்கவில்லை. பசுமை கலந்த வெண்ணிறம் கொண்ட அந்த மலர்கள் பூமருதுவின் பூக்களைப் போலச் சட்டெனக் கவரும் வகையிலும் இல்லை, பெரிதாகவும் இல்லை’ என்கிறார் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. பி.எல்.சாமி, கோவை இளஞ்சேரன் ஆகியோரை மேற்கோள்காட்டி ‘தமிழரும் தாவரமும்’ நூலில் இக்கருத்தை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
திணைகளுக்குத் தாவரத்தின் பெயர்களைச் சங்கத் தமிழர்கள் சூட்டியபோது, அவற்றின் தனித்தன்மையை முன்வைத்தே பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். பூமருதுவின் பூக்களைப் பார்க்கும்போது, அதன் அழகுக்காக இந்த மலர் திணை மலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேற்கு மலைத் தொடரின் கர்நாடகம், கேரளப் பகுதியில் நவீன காலத்திலும் இந்த மரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தின் மாநில மலராக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இது சங்கம் பாடிய மருதமாக இருக்கலாம். தற்போது இந்த மரம் பூமருது என அழைக்கப்படுகிறது.
ஆனால், தாவரவியல் பேராசிரியர் டி.நரசிம்மன் இந்தக் கருத்தை மறுக்கிறார். பூமருது லாகர்ஸ்டோமியா பேரினத்தையும் வெள்ளைமருது டெர்மினாலியா பேரினத் தையும் சேர்ந்தவை. இதன் காரணமாகவும், மருத நிலத்தில் பூமருது மரங்கள் இயல்பாக இல்லை, குறிஞ்சி நிலத்திலேயே அதிக முள்ளன என்பதாலும் பூமருது அந்தத் திணைக்கான மரமல்ல என்கிறார்.
சிரிக்கும் பூமருது: தாவரங்களை அவதானிப்பதைப் பரவலாக்கி வருகிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘சீசன் வாட்ச்’ அமைப்பு. அந்த அமைப்பு வெளியிட்ட பொதுத் தாவரக் கையேடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகநாதன் வழியாகக் கடந்த ஆண்டு கிடைத்தது. அதன் வழியாகத்தான் பூமருது மரம் குறித்து அறிந்தேன். திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியில் இந்த மரம் உள்ளது. மலரின் தனித்துவ அழகுக்காக இந்த மரம் பல இடங்களில் வளர்க்கப்பட்டுவருகிறது.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் நான் நடைப் பயிற்சி செல்லும் பாதையில் சரக்கொன்றையும் பூமருதும் அடுத்தடுத்து உண்டு. முந்தைய மாதம் வரை இலைகள் உதிர்ந்து மொட்டையாகக் காட்சியளித்த இந்த மரத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் புத்திலைகள் தரித்தன. ஏப்ரல் மத்தியிலேயே உற்சாகமாகப் பூக்கத் தொடங்கிவிட்டது. இளவேனிற் காலத்தின் மகிழ்ச்சியைப் பல மடங்கு அதிகரிக்கக்கூடிய மலர் இது.
பூமருதுவின் மலர்கள் நீண்ட காம்பில் கொத்தாகப் பூக்கக்கூடியவை. அதுவே ஒரு வாழ்த்துப் பூங்கொத்துபோல பிரகாசமாக நம்மைப் பார்த்துச் சிரிக்கும். இந்தப் பூங்கொத்துகள் ஓர் அடி வரை வளரக்கூடியவை. மரத்தின் உச்சியில் கிரீடம்போலப் பூங்கொத்துகள் அழகாகப் பூக்கும். வெளிர் ஊதா, கருஞ்சிவப்பு நிறப் பூக்கள் கொத்துக்கொத்தாக மனதைக் கொள்ளை கொள்ளும். இந்த மலரின் நிறத்துக்கு இதில் உள்ள ஃபிளேவனாய்டு, ஃபீனாலிக் அமிலம் போன்றவையே காரணம்.
பெயரும் பெருமையும்: வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னே யஸுக்குக் கிழக்கு நாடுகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்துக் கொடுத்தவர் ஸ்வீடனைச் சேர்ந்த மேக்னஸ் வான் லாகர்ஸ்ட்ரோம் (Magnus von Lagerstroem). அவரின் நினைவாகவே இந்த மரத்தின் அறிவியல் பெயர் வழங்கப்படுகிறது. ராணியின் மலர், இந்தியாவின் பெருமிதம் என ஆங்கிலத்தில் இது அழைக்கப்படுவதற்குக் காரணம், அந்த மலரின் மனதைப் பறிக்கும் அழகுதான். ஆங்கிலத்தில் இதன் பெயர் Crape எனப்படுவதற்குக் காரணம், சுருக்கங்களைக் கொண்ட மென்மையான காகிதம்போல இதன் மலர் இதழ்கள் அமைந்திருப்பதே.
இமய மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலையில் இந்த மரம் உண்டு. நகர்ப்புற சாலையோரம், பூங்காக்கள், தோட்டங்களில் அழகுக்காக இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நீர்நிலைகள், நதிக்கரைகளிலும் வளர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக 30-50 அடி வரை வளரக்கூடியது என்றாலும், நகர்ப்புறங்களில் 20 அடிக்குள் ளாகவே வளரும்.
பண்பும் பயனும்: இந்த மரம் மிக உறுதியானது. கதவு, ஜன்னல் நிலைகள், அறைக்கலன்கள் செய்யப் பயன்படுகிறது. நீரில் இருந்தாலும் இந்த மரம் எளிதில் உளுத்துப் போகாமல் நீடித்து உழைக்கக்கூடியது. அதன் காரணமாகப் படகு செய்ய, துறைமுகப் பகுதியில் அடித்தூண்களாக, ஆதரவுக் கம்பங்களாக இந்த மரம் பயன்படுத்தப்படுகிறது. மரப்பொருள்களுக்குப் புகழ்பெற்றது பர்மா தேக்கு. அந்நாட்டில் தேக்குக்கு அடுத்தபடியாக இந்த மரமே மரப்பொருள்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுவதற்குப் பயன்படுத்தப்படும் துவர்ப்புப் பொருளான டானின் இந்த மரத்திலிருந்து பெறப்படுகிறது.
இந்த மரத்தின் வேர், பட்டை வயிற்றுக்கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலையைப் பற்றாகப் போடுவது மலேரியா காய்ச்சலைக் குறைப் பதாகக் கருதப்படுகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்குக்கு இதன் வேர் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழங்கள், வாய்ப்புண்ணைக் குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பனபா (banaba) என்கிற பெயரில் இந்த மரத்தின் காய்ந்த இலைகள் சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு ஆசியாவில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மருதத்தின் திணை மரம் வெள்ளைமருதா, பூமருதா என்று இன்றைக்குள்ள சான்றுகளின்படி திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. சங்க இலக்கியப் பாடல்களே நமது தாவரங்களுக்கான, திணைத் தாவரங்களுக்கான ஒரே ஆதாரமாக உள்ளன. அதில் மருத மரத்தைப் பற்றிய பெயர்க் குறிப்புகள், வர்ணனைகளை வைத்தே மரத்தை முடிவுசெய்தாக வேண்டும். திட்டவட்டமாக ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையையும் அவை ஏற்படுத்தலாம். அறிவியல்பூர்வமான விவரணைகள், வகைப்பாட்டியல் போன்றவை 300 ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விதிமுறைகளையே 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தாவர அடையாளம் காணும் முறைக்கும் பயன்படுத்த முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. அத்துடன், இன்றைக்கு ஒரு மரம் நம் நிலத்தில் பரவலாக இல்லாததாலேயே, அன்றைக்கு இருந்திருக்கவில்லை என்று கூறவும் முடியவில்லை. இடைக்காலத்தில் இந்த மரங்கள் நம் நிலத்தில் அழிந்திருக்கலாம். இந்தக் குழப்பங்களுக்கு விடை காணும் வகையில் துறை சார்ந்த அறிஞர்கள் தீர்வுகாண்பார்கள் என நம்புவோம்.
வெள்ளைமருது: பொதுவாக மருதத் திணைக்குரிய திணைத் தாவரமாக வெண்மருது/வெள்ளைமருது (Terminalia arjuna) கருதப்படுகிறது. ஆற்றங்கரைகள், குளம், ஏரிக்கரைகளில் இந்த மரத்தைப் பார்க்கலாம். மெதுவாக வளரக்கூடியது, வறட்சியைத் தாங்கக்கூடியது.
ஈட்டி போன்ற நீண்ட காம்பில் பசுமை கலந்த சிறிய வெள்ளை மலர்களாகப் பூக்கும். காய்கள் நட்சத்திர வடிவிலானவை. இதிலிருந்து கிடைக்கும் பழுப்புச் சாயம், துவர்ப்புச் சுவை உடையது. தோல் பதனிடுதலுக்குப் பயன்படும். இலைகள் பட்டுப்புழுக்களுக்கு உணவாகக் கூடியவை.
வட இந்தியாவில் இது அர்ஜுன மரம் எனப்படுகிறது. புராணக் கதைப்படி போரில் குடும்பத்தின் பாதுகாவலராக அர்ஜுனன் இருந்ததுபோல், அர்ஜுன மரம் இதயத்துக்குப் பாதுகாப்பு வழங்குவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. மருதம் பட்டை, பிசின் மருத்துவக் குணம் கொண்டவை. நீரிழிவு, இதய நோய் சார்ந்து இந்திய மருத்துவ முறையில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரப்பட்டையின் சாம்பல், தேள்கடிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்: பூமருது
மற்ற பெயர்கள்: செம்மருதம், கதலி
ஆங்கிலத்தில்: Queen’s Crape Myrtle, Pride of India, Crepe Flower, Jarul
அறிவியல் பெயர்: Lagerstroemia speciosa
தாயகம்: இந்தியா, தெற்காசிய நாடுகள் பார்க்கக்கூடிய இடங்கள்: அடையாறு தியசாபிகல் சொசைட்டி, சென்னை கோட்டூர்புரம் நகர்ப்புறக் காடு, மேற்குத் தொடர்ச்சி மலை
பூக்கும் காலம்: ஏப்ரல் - ஜூன்
நேரடி உயிரினத் தொடர்பு: இதன் மகரந்தச் சேர்க்கையாளர் தேனீ.
அங்கீகாரம்: மகாராஷ்டிரத்தின் மாநில மலர்
(அடுத்த அத்தியாயம்: வசீகரிக்கும் வெள்ளை பூக்கள்)
- valliappan.k@hindutamil.co.in