உயிர் மூச்சு

பெருவீழ்ச்சிக் காலம் | கூடு திரும்புதல் 34

வறீதையா கான்ஸ்தந்தின்

1970களில் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளக் கடற்கரை ஊர்களில் மீன்பிடித் தொழில் பெரிதாக நிகழவில்லை. வள்ளம் போன்ற சின்ன படகுகளில் ஒரு சிறு வலை, தூண்டில் - இப்படி மிக எளிமையான அளவில்தான் தொழில் செய்யப்பட்டது. அப்போது கடலில் குறைவில்லாத மீன்வளம் இருந்தது. மீனைவிட இறாலுக்கு மதிப்பு அதிகம் என்பதால் கப்பல்களுக்கு இறால்தான் முதன்மை அறுவடை இலக்காக இருந்தது.

12 கடல் மைல் எல்லைக்குள்ளேயே கப்பல்களுக்குப் போதுமான மீன்வளம் இருந்தது. இழுவைமடிகள் 50 மீட்டர் ஆழ எல்லைக் குள்ளேயே இயக்கப்பட்டன. 1977 - 1987 காலக் கட்டம் முழுவதும் செழுமையான அறுவடைகளுடன் கப்பல்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தன.

பத்தே ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகிவிட்டது. 1987 - 1990 காலத்தில் பெரிய தனியார் நிறுவனங்களுக்குத் தொழில் கட்டுப்படியாகவில்லை. அத்தனை ஆண்டுகளில் வங்காள விரிகுடாக் கடலில் கப்பல்களின் எண்ணிக்கை உயர்ந்ததும், அண்மைக் காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கடலைக் கப்பல்கள் வழித்தெடுத்துக் கொண்டிருந்ததுமே மீன்வள வீழ்ச்சிக்குக் காரணமானது.

வெளியேறும் கடற்குடிகள்: ஊடகர் சாமந்த் சுப்பிரமணியன் (Following Fish, Penguin, 2010) குறிப்பிடுவதுபோல, ‘கடற்குடிகள் கடற்கரைகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்; கடலுக்குத் தொடர்பில்லாதவர்கள் கடற்கரைகளை நிரப்பத் தொடங்கியிருக்கின்றனர். துறைமுகங்களும் கப்பல்களும் கடற்கரைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன’. ‘கடலைக் காப்பாற்ற வேண்டுமென்றால், நவீன மீன்பிடித் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தடைசெய்ய வேண்டும். கடலில் கிடைக்கிற மீன்களைப் பிடிப்பதற்கு கில் நெட் (வலை), தூண்டில் போன்ற பாரம்பரிய முறைகளே போதுமானவை’ என்கிறார் லூயிஸ்.

நவீனமயமாக்கலின் 60 ஆண்டு காலத்தை நவீனமயக் காலம் (1960-1975), தாராளமயக் காலம் (1975- 1990), பெருவீழ்ச்சிக் காலம் (1990- 2020) என மூன்று பகுதி களாகப் பகுத்து அணுகலாம். நவீனமயக் காலம் 1958இல் விசைப் படகுகளின் அறிமுகத்துடன் தொடங்கியது எனினும், இழுவைமடிப் படகுகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகே அறிமுகமாயின.

இந்திய-இலங்கை ஒப்பந்தம்: இந்தியப் பெருங்கடல் சுறாப்பாரில் இலங்கைக் கலன்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் 1977இல் கையெழுத்தானது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் 1980 ஜனவரியில் முடிவுக்கு வந்தது. அப்போது வரை சுறாப்பாரின் மீன்வள வாய்ப்புகள் குறித்த சர்வே 50% நிறைவு பெற்றிருந்ததாக மக்களவையில் அரசு தெரிவித்தது. ஐந்தாண்டுகளில் இழுவைமடி விசைப்படகுகளின் எண்ணிக்கையை 15,000 ஆக உயர்த்தவும், மீன்பிடிக் கப்பல்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முடிவு காணாத சிக்கல்: ‘இழுவைமடிப் படகுகள், மீன்பிடிக் கப்பல்களின் எண்ணிக்கையை அவ்வாறு உயர்த்தினால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று பேராசிரியர் மது தண்டவதே எச்சரிக்கை விடுத்திருந்தார். ‘சிறு படகுகளுக்கும் விசைப் படகுகளுக்கும் தனித்தனியாக மீன்பிடிப் பகுதிகளை வரையறுத்து, அந்தச் சிக்கலுக்கு முடிவு காண்போம்’ என்று பதில் தரப்பட்டது. அது முறையாக நடைமுறைப் படுத்தப்படாததே கரைக்கடல் மீன்வளத்தின் சிதைவுக்குக் காரணம்.

பணிநிறைவு பெற்ற மீன்பிடிக் கப்பல் மாலுமி மெல்கியாஸ் சொல்கிறார்- ‘வாட்ஜ் பாங்கில் கப்பல்கள் கல் இறால் (Lobster) இழுவைமடிகளை இயக்கின. சோதனை வீச்சுபோல, எப்போதாவது மீனுக்கு இழுவைமடி வீசினால் மூன்று மாதத் தேவைக்கான மீன் கிடைத்துவிடும். அவ்வளவு மீன்வளம் வாட்ஜ் பாங்கில் இருந்தன’ என்கிறார். இன்று அவ்வளங்கள் வற்றிப்போயிருப்பதாக அவரே ஒப்புக்கொள்கிறார்.

இடைநிலைத் தொழில்நுட்பங்கள்: பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் அனுமதிக்கப்பட்ட தாராளமயக் காலத்தில் தென் தமிழகத்தில் கத்தோலிக்கச் சமய நிறுவனத் தலையீட்டினால் இடைநிலை மீன்பிடித் தொழில்நுட்பங்கள் வந்தன (1975- 1990). வேணாட்டு (தூத்தூர்த் தீவு) மீனவர்கள் இழுவைமடியைக் கைவிட்டு, நெடுந்தூண்டில், வலைத் தொழில்களுக்குத் திரும்பினர்; கடலை வழித்தெடுத்த கப்பல் முதலாளிகளில் பெரும்பான்மையினர் 1990களின் இறுதியில் மீன்பிடித் தொழிலைவிட்டு விலகினர்.

அவர்களுக்கு இது பிழைப்பே அல்ல, லாபம் பார்க்கும் மற்றொரு தொழில், அவ்வளவே. மீன்வள வீழ்ச்சியின் தொடர்ச்சியாக வந்த பெருவீழ்ச்சிக் காலம் மூன்று வகையான துயரங்களை உள்ளடக்கியது- கடல் பேரிடர்கள், மீனவர் விரோதக் கொள்கைகள், கடற்கரைகளில் பெருமுதலாளிய ஊடுருவல்.

கடல் சூதாட்டம்... ‘விசை மீன்பிடித் தொழிலைப் பொறுத்தவரை மிகை முதலீட்டின் காலத்துக்கு வந்துவிட்டோம்’ என்கிறார் ஜேசையா (குளச்சல்): “கிட்டத்தட்ட ஒரு சூதாட்டம்போல, கரையி லிருந்து ஒவ்வொரு அடுக்காகக் கடல் அழிந்து கொண்டிருக்கிறது; படிப்படியாக மீன் இனங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்பதுபோல் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மீனவர்கள் கடலுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அது இரட்டைமடி, சுருக்குமடி என்று விரிவடைந்து கொண்டுபோகிறது... பாரம்பரிய மீனவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை, அவர்களும் விசைப் படகுக்காரர்களின் வழியில் போகப் பார்க்கிறார்கள். கடல்வளம் வீழ்ச்சியடைந்து வருகிறது; வேலைக்கு ஆள்கள் கிடைக்கவில்லை, ராமேஸ்வரம், தூத்துக்குடியைத் தொடர்ந்து இங்கும் உரிமையாளர்கள் விசைப் படகுகளை விற்றுவிடத் தயாராகி வருகின்றனர்... இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு ஒரேயொரு உபாயம்தான் இருக்கிறது: கடலில் மீன்பிடி எல்லைகளையும் காலத்தையும் தெளிவாக வரையறுத்துச் சட்டமாக்கி, சமரசமில்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அது அரசின் கையில் இருக்கிறது” என்கிறார்.

ஆய்வு அறம்: கடல்வள ஆய்வு நிறுவனங்கள் முன்வைக்கும் தரவுகளில் ஒருவகையான கபட அரசியலைக் காண முடிகிறது. மக்கள் எதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்னும் சூட்சுமத்துடன் முன்வைக்கப்படும் அரை உண்மைகள் அவை. அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்கிற பெயரில் உவர்நீர் இறால் பண்ணை முதலாளிகளுக்கு ஆதரவாகப் பரப்புரை நிகழ்த்தும் ஒரு முன்னணி ஆய்வு (தொண்டு) நிறுவனத்தைக் குறித்து குச்சிப்பாளையம் செயல்பாட்டாளர்கள் கவலையோடு குறிப்பிட்டனர்.

ஊடகங்கள் இது போன்ற முகமைகளோடும் பெருமுதலாளி களோடும் கைகோத்துச் செயல்படுகின்றன. மீன்வளப் பேரிடரில் பெருமுதலீட்டாளர்களின் பங்கைக் குறித்து ஊடகங்கள் ஒருபோதும் பேசுவதில்லை. உவர்நீர் இறால் பண்ணைகளும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் கரைக்கடல் மீன்வளத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இது போன்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவது பெருமுதலீட்டாளர்களுக்கு உவப்பானதல்ல.

தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியும், தாராளவாத மானியங்களும் பெரிய மீன்பிடிக் கப்பல்களுக்கே சாதகமாக உள்ளன என்பதும், கடல்வளம் அழிவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்பதும் தந்திரமாக மறைக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும் பாரம்பரிய மீன்பிடித் தரப்பின்மீதே கடலழிப்பின் ஒட்டுமொத்தப் பழி சுமத்தப்படுகிறது

கடைமடையும் கடலும்: கடல், மீன்களுக்குச் சமாதியாகிக் கொண்டிருக்கிறது. மீனுணவு வேண்டும்; அது கடலிலிருந்தே வர வேண்டும். ஆனால், கடல் கல்லறையாகிக் கொண்டிருப்பதில் சமவெளி மனிதர்களுக்குக் கவலை இல்லை. பருவமழையின் சிறு பகுதியைக்கூட கடலில் கலக்க அவர்கள் மனம் ஒப்புவதில்லை. நதி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என்னும் கூக்குரல் மழைக்காலம்தோறும் ஒலிக்கிறது.

அமெரிக்காவில் மழைநீரைச் சேமிப்பது என்றால் அதற்கும்கூடக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டிருக்கிறது - மழை வெள்ளத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கடலுக்குப் போக அங்கே அனுமதித்தாக வேண்டும். சில மாதங்களுக்கு முன்னால் ஓர் அரசியல் கட்சித் தலைவர் – மெத்தப் படித்தவர்- சொல் கிறார்- ‘நான் முதல்வரானால் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கடலுக்குப் போக விடமாட்டேன்!’ இது பொது மனசாட்சியை மகிழ்விக்கும் அரசியலா, வன்மமா, அறியாமையா? எனக்குப் புரியவேயில்லை. இந்நாட்டில் தண்ணீர்ப் பகிர்வு கரிசனம் கடைமடையோடு நின்று போகிறது. நீரியல் சுழற்சியைக் குறித்த அக்கறை முன்னோர்களோடு ஒழிந்துபோய்விட்டது!

(தொடரும்)

- கட்டுரையாளர், பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்; vareeth2021@gmail.com

SCROLL FOR NEXT