இந்து தமிழ் உயிர்மூச்சில் 10-05-2025 அன்று வெளிவந்த 'தங்க மழை பொழிகிறது' கட்டுரை அருமை. கட்டுரையை வாசித்து முடித்தபோது சிறு வயது கிராமத்து வாழ்க்கை மனதில் நிழலாடியது. சிறு வயதில் சரக்கொன்றை மரத்தைப் பொன்வண்டு மரம் என்றே கூறுவோம். பொன்வண்டுகள் சரக்கொன்றை மரத்தின் இலையைத்தான் உண்ணும்.
பொன்வண்டைப் பிடிப்பதும், அதை வீட்டில் வைத்து வளர்ப்பதும் அப்போது பொழுதுபோக்கு. பொன்வண்டைப் பிடித்து, ஒரு சிறு குடுவையில் போட்டு, அதனுடன் சரக்கொன்றை இலையையும் போட்டுவிடுவோம். பொன்வண்டு அந்த இலையைச் சிறிதுசிறிதாகச் சாப்பிடும்.
பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சில பேர் பொன்வண்டைக் கையில் எடுத்துச் சரக்கொன்றை இலையைக் கையாலேயே ஊட்டிவிடுவார்கள். நானும் அதுபோல் செய்திருக்கிறேன். பொன்வண்டு, சரக்கொன்றை மரம், சரம்சரமான மஞ்சள் நிறப் பூக்கள் கிராமத்து வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவுகள்.
- ஜோசப் பிரபாகர், அறிவியல் எழுத்தாளர், இயற்கை ஆர்வலர், சென்னை