வசந்த காலத்தின் தொடக்கம் எப்பொழுதும் குதூகலமாகவும், புதுத் தெம்பு அளிப்பதாகவும் இருக்கும். பறவைகளின் குரலொலிகள், குறிப்பாகக் குயிலோசை நாள் முழுக்க ஒலித்தபடி இருக்கும். மைனாவின் குரலொலிகள், பச்சைக்கிளிகளின் பேச்சு, உற்சாகமாகக் கீச்சிட்டுக் கொண்டே ஒரு செடியிலிருந்து அடுத்ததற்குத் தாவும் தேன்சிட்டுகள், தையல்சிட்டுகள் போன்ற பறவைகளைக் காண்பதும், அவற்றின் குரலொலிகளைக் கேட்பதும் மிகவும் ரம்யமானது.
காலங்களில் இனிமையானது வசந்த காலம்தான். பின்பனிக் காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடையில் ஊரில் உள்ள மரங்களில் புது இலைகளும் பூக்களுமாக, எங்கும் பறவைகளின் கீச்சொலிகள் நிரம்பி இனிமையைப் பரப்பும். காலநிலை மாற்றத்தினால் வசந்த காலம் சுருங்கியும், கோடைக்காலம் நீண்டும் போய்விட்டது. வசந்த காலம் பறவைகளின் இனப்பெருக்கக் காலம் என்பதால் அதிகமாகக் குரலொலிகளை நாம் கேட்கலாம்.
ஆரவார வசந்த காலம்: விடியற்காலையில் குண்டுகரிச்சான்களின் (Oriental Magpie Robin) தொடர்ச்சியான பாடல்களுடன் நம் நாளைத் தொடங்கலாம். கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர்த் தொட்டிகளின் உயர்ந்த குழாய் நுனியில் நின்றுகொண்டும், மரங்களின் உயர்ந்த கிளைகளில் இருந்துகொண்டும், இவை தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கும். காலை முதல் வெயில் உச்சிக்கு வந்த பின்னும் தொடர்ச்சியாக ‘குக்... குக்... குக்...’ என்கிற குரலெடுத்துக் கத்தும் செம்மார்புக் குக்குறுவான்கள் (Coppersmith Barbet) என வசந்த காலம் எப்போதும் ஆரவாரமாக இருக்கும்.
பறவை நோக்குதலுக்காக (Bird watching) காடு சார்ந்த இடங்கள், நீர்நிலைகள், மலைப்பிரதேசங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களைத் தேடிச் செல்வது பறவை ஆர்வலர்களின் வழக்கம். மக்கள் அறிவியல் (Citizen Science) தளமான ebird, Pongal Bird Count, Great Backyard Bird Count (GBBC) போன்ற பறவை கணக்கெடுப்புகளின் மூலம், பறவை நோக்குதல் எனும் கலை அனைவருக்கும் எளிதாக்கப்பட்ட பின், நகர்ப்புறத்துப் பறவை நோக்குதலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. ஆனால், மனிதர்கள் ஏற்படுத்துகின்ற இடர்பாடுகள் நகர்ப்புறப் பறவைகளுக்கு இடையூறுகளாகவே இருக்கின்றன.
நகரம் அழித்த இயற்கை: நகரமயமாக்கலின் விளைவாக மாசு அதிகரிப்பு, வெப்பநிலை அதிகரிப்பு போன்றவை மோசமடைந்துள்ளன. நாளுக்கு நாள் விரிவடையும் நகரம், ஒவ்வொரு நாளும் இயற்கை எழில் குறைந்துவருவதையும் காட்டுகிறது. நகரங்களில் ஆங்காங்கே ஒட்டியுள்ள இயற்கையின் மிச்சங்களைத் தவிர, மற்றவை எல்லாம் செயற்கையாக அமைக்கப்பட்ட பூங்காக்களே. செயற்கைப் பூங்காங்கள் பார்க்கப் பசுமையாகத் தென்பட்டாலும், அழகுக்காக வளர்க்கப்பட்ட புற்களும் மரங்களும் பொதுவாக நம் நாட்டுத் தாவரங்களாக இருப்பதில்லை.
எல்லாம் தாவரம்தானே, இதனால் என்ன மாறிவிடப் போகிறது என்று தோன்றலாம்? மரங்கள் அனைத்தும் கரியமில வாயுவை உறிஞ்சி, உயிர்வளியை நமக்குத் தரக்கூடியவை, அது நல்லதுதானே எனப் பலர் நினைக்கலாம். மரங்கள், செடிகள் உயிர்வளியைத் தருபவைதான். ஆனால், அயல் தாவரங்களும் (Exotic plants), விரைந்து பெருகும் தாவரங்களும் (Invasive Plants) இயல் தாவரங்கள் வளர்வதைத் தடுக்கின்றன.
இயல் தாவரங்களின் முக்கியத்துவம்: நாட்டுச் செடி, கொடி, மரங்கள் இல்லாமல் போவதால் விதவிதமான பூச்சிகளோ, வண்ணத்துப்பூச்சிகளோ, பறவைகளோ அவ்வளவாக அங்கே தென்படுவதில்லை. வண்ணத்துப்பூச்சிகள் தழைத்து வளர ஆவாரம், எருக்கம், தும்பை, வெட்சி போன்ற நாட்டுச் செடி வகைகள் தேவை. இந்தத் தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடும், அதிலிருந்து வரும் புழு, இந்தத் தாவரங்களின் இலைகளை உண்டு வளரும்.
இதுபோன்றே குக்குறுவான், ஆந்தை போன்ற பறவைகளுக்கு வசிப்பதற்குப் பழமையான நாட்டு மரங்கள் தேவை. அழகுக்காக வைக்கப்படும் தாவர வகைகள் இந்த வகையைச் சார்ந்ததாகப் பொதுவாக இருப்பதில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்காக்களில், அழகுக்காக வைக்கப்படும் மரங்களில் பொதுவாகக் காகம், மைனா, குயில், மாடப்புறா போன்றவையே காணப்படும். இந்தப் பறவைகளை ஆங்கிலத்தில் generalist என்பர். அதாவது, எந்த மாதிரியான சூழலிலும், எதையும் சாப்பிட்டு வாழத் தகவமைத்துக் கொண்ட பொதுவான பறவைகள்.
State of India’s Birds (2023) இதையே கூறுகிறது. இந்தியாவில் காகம், கரும்பருந்து (Black Kite), மாடப்புறா போன்ற பறவைகள் நகரங்களில் கிடைக்கும் எந்த உணவையும் உண்ணுவதால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கண்டதைப் புசிக்கிற வகையான பறவைகள் நகரத்தில் பிழைத்துத் தழைக்கக்கூடியவை.
நகரம் ஏற்படுத்தும் மாற்றம்: காடு போன்ற இயற்கைச் சூழலில் வாழும் பறவைகள் அதன் வாழிடத்திற்கு ஏற்றாற்போல் குரலொலிகளை உருவாக்கும். மாறாக, நகரங்களில் மனிதனால் உருவாக்கப் பட்ட இயந்திரங்கள், வண்டிகளின் ஒலி அளவு அதிகப்படியாக இருப்பது பறவைகளுக்கு ஒரு பெரிய இடர்பாடு. இதனைச் சமாளிக்க பறவைகள் தத்தமது குரலொலிகளை நீண்ட நேரத்துக்குப் பாடுவதும், அவற்றின் அலைவரிசையை அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது.
மனிதனால் ஏற்படுத்தப்படும் ஒலிகள் பறவைகளின் குரலொலிகளை மறைத்துத் தடுக்காமல் இருக்க, பறவைகள் அலை வரிசையை அதிகப்படுத்துவது உண்டு. இதேபோல், குரலொலிகள் மற்ற பறவை களிடம் தடையின்றிச் சென்றடைய நீண்ட நேரம் பாட வேண்டியுள்ளது. இது போன்ற இடர்பாடுகளுக்கு இடையில் வாழக் கற்றுக் கொண்ட பறவை இனங்களே நகரங்களில் வாழ முடியும். இதனால் பல்வேறு வகை யான பறவை இனங்களை நகரங்களில் காண முடிவதில்லை.
கூடுகளின் இடமாற்றம்: நகரங்களில் உணவு வகையும், ஒலி மாசும் பறவைகளின் வாழ்க்கை முறைக்குத் தடையாக இருப்பதைப் போல், கூடு கட்டத் தேர்வுசெய்யும் இடமும், கூடு கட்டும் முறையும் பெரும்பாலான பறவைகளுக்குச் சவாலாக உள்ளன. தரையில் கூடுகட்டி வாழும் பறவைகளான ஆள்காட்டி, கவுதாரி, பழமையான மரங்களில் வாழும் இருவாச்சி போன்ற பறவைகள் வாழ ஏதுவாக நகரங்கள் இருப்பதில்லை. மாறாக, மனிதர்கள், நாய் போன்ற விலங்குகளின் தொந்தரவின்றி உயர்ந்த மரக்கிளைகளிலோ, உயர்ந்த தொலைபேசிக் கம்பங்களிலோ, கூடுகட்டி வாழத் தெரிந்த பறவைகளுக்கு நகர வாழ்க்கை எளிதாகிப் போகும். காகம், கரும்பருந்து போன்ற பறவைகள் நகரங்களில் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
மேலும், மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கிடைக்கும் எந்த விதமான பொருளைக் கொண்டும் கூடுகட்டத் தெரிந்த பறவைகள் நகரத்தில் பிழைத்துத் தழைக்கும். செடியின் கிளைகளுக்கு இடையில், புதர்களுக்குள், மரக்கிளைகளில் கூடு கட்டும் பறவைகள் காடுகள், மரங்கள் நிறைந்த கிராமப்புறங்களுடன் தங்கள் வாழிட எல்லையைச் சுருக்கி கொள்கின்றன.
நகரத்தில் மீதமிருக்கும் இயற்கையான வாழிடங்களைப் போற்றிப் பாதுகாத்தல், ஏரிகளைச் சுற்றியும் காங்கிரீட்டை இட்டு நிரப்பாமல், இயல் தாவரங்களை நட்டு வளர்த்து, சாலையோர மரங்களை வெட்டாமல் இருந்தால் நகர்ப்புறப் பறவைகள், வசந்தகாலத்தின் வருகையை அவற்றின் இனிமையான கூக்குரல்களால் எப்போதும் அறிவித்துக்கொண்டே இருக்கும்.
ச.திவ்யப்ரியா
cdp08india@gmail.com
பறவையியல் ஆய்வாளர், இயற்கை ஆர்வலர்
கூடுதல் விவரங்களுக்கு: https://bit.ly/thewonderofbirds