உயிர் மூச்சு

தங்க மழை பொழிகிறது! | ஆயிரம் மலர்களே மலருங்கள் 2

ஆதி வள்ளியப்பன்

சென்னையில் இந்த ஆண்டு வெயில் கொளுத்தத் தொடங்குவதற்கு முன்பே, சாலைகளைப் பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது ஒரு மலர். வெயிலின் உக்கிரத்தில் வியர்வை வழிய நாம் சாலைகளைக் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும்போது, மனதுக்குக் குளிர்ச்சியாகவும் இதமளிக்கும் வகையிலும் பூத்துக்குலுங்கும் ஒரு மலர் உண்டா எனக் கேட்டால் கொன்றையின் பெயரைச் சொல்லலாம். மரம் முழுக்க மஞ்சள் மலர்க்கொத்துச் சரங்கள் பூத்துக்குலுங்குவது சட்டெனத் திரும்பிப்பார்க்க வைக்கும் கண்கவர் காட்சியாக இருக்கும்.

பளிச்சென்ற மஞ்சள் பூக்கள் சரம்சரமாக, திராட்சைக்கொத்துகள் போலத் தொங்கிக்கொண்டிருக்கும். சாண்டிலியே சரவிளக்குகள்போல இந்த மலர்க்கொத்து இருப்பதாக மேலை நாட்டினர் குறிப்பிடுகிறார்கள். இளவேனில் காலமான சித்திரை மாதத்தில் இவை அதிக அளவில் பூப்பதால், கேரளத்தில் விஷு பண்டிகையின்போது இந்த மலர்கள் விசேஷமாகக் கருதப்படுகின்றன. இது தங்கத்தின் நிறத்தைப் போன்றிருப்பதால், இந்தப் பூ வளத்தைக் கொண்டுவருவதாகக் கருதப்படுகிறது. விஷுவுக்கு இந்தப் பூக்களால் முற்றங்களை அலங்கரிப்பது வழக்கம்.

பூப்பதற்கு முந்தைய மாதங்களில் இலைகள் கொட்டிவிடும். சில நேரம் இலைகளே இல்லாமல் மரம் முழுக்க மலர்களால் நிறைந்திருக்கும். தேனீக்கள் மொய்க்கும் நறுமணம் மிகுந்த இந்த மலர்களை, ஜூன் வரை பார்க்கலாம். கொன்றையில் உள்ள கேம்ப்ஃபெரால், கடேசின், புரோஆந்தோசயனிட் போன்ற ஃபிளேவனாய்டு வேதிப்பொருள்களே இந்த மலர்களின் மஞ்சள் நிறத்துக்குக் காரணம். இந்த வேதிப்பொருள்கள் குறைவாக உள்ள மரங்களில் வெளிர் நிறப் பூக்களையும் பார்க்கலாம்.

காந்தி தங்கிய சாலை: ஐரோப்பிய லேபர்னம் மலர்களை ஒத்திருப்பதால், மேலை நாட்டினர் இந்த மரத்துக்குக் கொடுத்த பெயர் இந்தியன் லேபர்னம். பிரபல காட்டுயிர் ஒளிப்பதிவாளர் அல்போன்ஸ் ராயின் சென்னை வீட்டுப்பெயர் லேபர்னம்தான். மும்பையில் காந்தியடிகள் தங்கிய மணி பவன் அமைந்துள்ள சாலையின் பெயர் லேபர்னம் சாலை. கொன்றை மரங்கள் அதிகமாக வளர்க்கப் பட்டதாலேயே அந்தச்சாலைக்கு இப்படிப் பெயர் வந்தது. சென்னையில் இந்த இயல் தாவரம் பரவலாகக் காணக்கிடைப்பது மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. இந்த மரங்களைத் தேடிக் கண்டடைய வேண்டிய சிரமம் இல்லை.

தமிழ்நாடெங்கும் சாலையோரம், ஏரி-குளக் கரைகள், வயல்வரப்புகளில் இந்த மரத்தைப் பார்க்கலாம். இலையுதிர் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் ஆங்காங்கே வளரக்கூடியது. பூங்கா, வீடு போன்ற இடங்களில் நட்டுவளர்த்தால் இதன் அழகான மலர்கள் பார்ப்பவர்களை ஈர்க்கும். மரங்கள் சராசரியாக 20-30 அடி வளரக்கூடியவை. தற்போது வாஸ்து செடி என்கிற பெயரில் மஞ்சள் மலர்களைக் கொண்ட டெகோமா எனப்படும் அயல் தாவரம் வளர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக இயல் மரமான இதை வளர்க்கலாம்.

சங்க இலக்கியத்தில்... முல்லை நிலத்துக்கு உரிய இந்த மரம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பொருநராற்றுப் படை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழ்நோக்கித் தொங்குகின்ற இயல்பை உடைய நீண்ட பூங்கொத்து (‘தூங்கிணர்க் கொன்றை’, குறிஞ்சிப்பாட்டு); பொன்னைப் போன்று ஒளி வீசும், அதிலும் நல்ல பொன் போன்ற ஒளிவீசும் கொன்றை (‘கொன்றை நன்பொன்கால’, முல்லைப்பாட்டு) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கடுக்கை என்றொரு பெயரும் சங்க இலக்கியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மலரைச் சங்க காலப் பெண்கள் சூடியுள்ளனர். ஏறுதழுவுதலின்போது இந்த மலரைச் சூடிய பெண் குறித்து சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையும், பொன் ஏர் பூட்டும்போது உழவர்களும் போர்க்களம் செல்லும் வீரர்களும் இந்த மலரைச் சூடியுள்ளனர் எனப் பதிற்றுப்பத்தும் கூறியுள்ளன. கொன்றை வேய்ந்தான் என்பது சிவனுக்கு உரிய பெயர். இந்த அடிப்படையிலேயே ஔவையார் இயற்றிய நூலின் பெயர் ‘கொன்றை வேந்தன்’ எனப்பட்டது.

இதன் மலர் இதழ்கள் தங்கக் காசைப் போலிருக்கும். காற்றில் மலர் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுவது தங்க மழையைப் போலிருக்கும். தங்கத்தைக் குறிக்கும் வகையில் சொர்ணகா என்கிற சம்ஸ்கிருதப் பெயரால் இம்மரம் அழைக்கப்படுகிறது.

காயும் பழமும்: காய்கள், முருங்கைக் காயைப் போல நீளமாக இருக்கும். காய்ந்த காய்கள் அடர்பழுப்பு நிறத்தில் உள்ளே விதைகளுடன் இருக்கும். இதைப் பறித்துக் குலுக்கினால், கிலுகிலுவெனச் சத்தம் வரும். உள்ளே விதைகள் தனித்தனி அறைகளில் இருப்பதே, இப்படிச் சத்தம் வரக் காரணம்.

இந்த மரத்தின் காய்கள் குழாய்போல, மேற்கத்திய ஆட்டிடையர்கள் ஊதும் குழலைப் போல இருப்பதால் இதற்கு fistula என்கிற அறிவியல் பெயர் வந்தது. இந்தக் காய்கள் 2 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இந்தப் பழத்தினுடைய சதைப் பகுதியைக் காட்டில் கரடிகள் விரும்பி உண்கின்றன. இது மலமிளக்கியாகவும் பயன்படுத்தப்படுவது உண்டு.

பயன்கள்: இந்த மரத்தின் பட்டைகள் சாயமிடுதலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத மருத்து வத்தில் வீக்கத்தைக் குறைக்க, குடல்அழற்சி-காயங்களைத் தூய்மைப்படுத்தவும் பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. மரத்தின் இலை தோல் நோய்கள், எலும்பு உடைதல் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் மலர்களைச் சில மலைப் பழங்குடிகள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். வேளாண் கருவிகள் செய்யவும், வண்டிச் சக்கரங்கள் செய்யவும் பயன்படும் உறுதிகொண்டது இந்த மரம்.

கொன்னை வெள்ளையன் (Emigrants), மஞ்சள் புல்வெளியாள் (Grassyellows) ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் கொன்றை மரத்தை முட்டையிடத் தேர்ந்தெடுக்கின்றன. இரண்டுமே கொன்றை மலரின் நிறத்தை ஒத்தவை. முதல் வண்ணத்துப்பூச்சியின் தமிழ்ப்பெயரே, கொன்றை மரத்தைக் குறிக்கும் வகையில் வைக்கப்பட்டதுதான். இந்த மரம் தரும் பயன்களைத் தாண்டி, பூத்துக்குலுங்கும் இந்த மரத்தைப் பார்ப்பதே மனதில் உற்சாக ஊற்றைத் தூண்டி மகிழ்ச்சிப் பெருக்கெடுக்க வைக்கக்கூடியது. அது ஒன்று போதாதா, இந்த மரத்தைப் போற்ற?

மஞ்சள் வாகை: கொன்றை நமது இயல் தாவரம். என்றாலும், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு நகர்ப்புறங்களில் மஞ்சள் வாகை (Peltophorum pterocarpum - காப்பர் பாட், யெல்லோ பிளேம்) எனப்படும் மரம் பூங்காக்கள், சாலையோரங்களில் இதைவிடவும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இது நமது இயல் மரமல்ல, தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.

அலங்கார நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மரம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மஞ்சள் நிறத்தில் ஆர்ப்பாட்டமாகப் பூக்கும். பல இடங்களில் இயல்வாகை, பெருங்கொன்றை என்கிற பெயர்களில் இந்த மரம் குறிக்கப்படுகிறது. ஆனால், இது நமது இயல் மரமல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பெயர்: கொன்றை
மற்ற பெயர்கள்: சரக்கொன்றை, சரக்கொன்னை
ஆங்கிலத்தில்: Indian Laburnum
அறிவியல் பெயர்: Cassia fistula
தாயகம்: இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா
பார்க்கக்கூடிய இடங்கள்: சென்னை மெரினா கடற்கரை, சாலையோரங்கள்
பூக்கும் காலம்: ஏப்ரல்-ஜூன்
நேரடி உயிரினத் தொடர்பு: தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள், கரடிகள்
அங்கீகாரம்: கேரளத்தின் மாநில மலர்; தாய்லாந்தின் தேசிய மரம், தேசிய மலரும்கூட.

(அடுத்த அத்தியாயம்: எது சங்க கால மருது?)

- valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT