உயிர் மூச்சு

மிரட்டப் போகும் மீன் பஞ்சம் | கூடு திரும்புதல் 33

வறீதையா கான்ஸ்தந்தின்

2017 நவம்பர் ஒக்கி பேரிடரைத் தொடர்ந்து, 2018 ஜனவரியில் கடல் பேரிடர் அபலையரைச் சந்திப்பதற்காக கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடிக் கடற்கரைகளுக்கு ஒளிப்பதிவாளர் வினோத் பரமேஸ்வரனுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன். ஒக்கிப் பேரிடரின்போது லட்சத்தீவுக் கடலில் தன் கணவரைப் பறிகொடுத்த இலஞ்சியம் என்பவரைத் தேவனாம்பட்டினத்தில் (கடலூர்) சந்தித்தபோது என் கேள்விக்குப் பதிலாக அவர் எதிர்க் கேள்வியைத் தொடுத்தார்: “இந்தக் கடல்ல மீனிருந்தா, அவரு அங்கி ஏம் போவப்போறாரு?”

சரிதான். கடலூர்க் கடலில் ஏன் மீனில்லாமல் போனது? கடல் பேரிடர் அல்லது பெருவெள்ளப் பேரிடரின்போது மட்டுமே செய்திகளில் வருகிற கடற்கரை கடலூர். 2004 சுனாமிப் பேரிடரில் தமிழ்நாட்டிலேயே அதிகம் உயிர்களைப் பறிகொடுத்த கடற்கரை. 2005, 2015 பெருவெள்ளங்களில் இக்கடற்கரை நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

2008இல் நிஷா புயலினாலும், 2011இல் தானே புயலினாலும் பாதிப்புற்றது. 2015 பெருவெள்ளப் பேரிடரின்போது சென்னைக்குக் கிடைத்த கவனத்தில் சிறு துளிகூட மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கடலூருக்குக் கிடைக்கவில்லை.

இயல்பில் தாழ்ந்த நிலப் பகுதியான கடலூர், ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலப் பகுதி. 58 கிலோமீட்டர் நீளம் கொண்ட மாவட்டக் கடற்கரையில் 49 ஊர்கள் உள்ளன. பிச்சாவரம், கிள்ளை போன்ற கண்டல் காடுகள் இருப்பது இக்கடற்கரைகளில்தான். தென்பெண்ணை, கெடிலமாறு, வெள்ளாறு, பரவனாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆறு என்கிற ஆறு ஆறுகள் கடலோடு இணைவதும் இங்குதான்.

பரவனாறும் கெடிலமாறும் கலந்து செழுமைப்படுத்தி வந்த கடலூர்க் கடல் மீனவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அது எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இன்றைக்கு அந்த ஆறுகளே கரைநிலத்துக்கும் கடலுக்கும் சாபமாகியிருக்கின்றன. பிச்சாவரம், கிள்ளைக் கண்டல் காடுகள் உவர்நீர் இறால் பண்ணை களால் பெரும் சிதைவுக்கு உள்ளாகி யிருக்கின்றன.

கடலோடு கொண்ட உறவைத் துண்டித்துக்கொள்ள விரும்பாத இளைஞர்கள் தொழில் தேடிப் பிற மாவட்ட, மாநிலக் கடலோரங்களுக்குப் பெயர்ந்து செல்கிறார்கள். ஒக்கிப் பேரிடரில் பலியான கடலூர், நாகை, தூத்துக்குடி மீனவர்களின் கதை அவ்வகையானது. வேதிம ஆலைகள் கடலூரை ‘தமிழ்நாட்டின் குப்பைத் தொட்டி’ என்றே கூறலாம். தொழிற் பேட்டைகளும், ஜவுளிப் பூங்காக்களும், உவர்நீர் இறால் பண்ணைகளும் கடற்கரைகளை ஆக்கிரமித்து விட்டன.

சிப்காட் தொழிற்பேட்டை முதல் பரங்கிப்பேட்டை வரை கடற்கரை நெடுக அமைந்துள்ள மாசுபடுத்தும் ஆலைகளால் நிலத்தடி நீர்வளம் உறிஞ்சப்படுகிறது; கரைநிலமும் கரைக்கடலும் ஆலைக் கழிவுகளால் மாசுபட்டுக் கிடக்கின்றன. கடந்த 30 வருடங்களில் நச்சாலைகளால் கடலூரின் கடலும் கடற்கரையும் நஞ்சாகியிருக்கிறது. அங்கு இயங்குவதில் 18 ஆலைகள் சிவப்புப் பட்டியலிலுள்ள வேதிமங்களைக் கையாளுபவை.

ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னால் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (NEERI) நிகழ்த்திய ஆய்வில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியிடப் பட்டன. ‘நச்சு வாயுக்களை வெளியேற்றும் கடலூர் வேதிம ஆலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் 2000 மடங்கு அதிகம்’ என்பது அதில் ஒரு தகவல்.

சிப்காட் தொழிற்பேட்டை இங்கு நிறுவப்பட்ட காலத்தில் (1982) மக்களுக்குச்சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பெரிதாக இருக்கவில்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை மாநில அரசு நிறுவியதே 1984இல்தான். ஆனால், ‘இந்த ஆலைகளினால் காற்றும் நீரும் நஞ்சாகிக் கொண்டிருப்பதை 30 வருடங்களுக்குப் பிறகும் அரசு வேடிக்கை பார்ப்பது நியாயமா?’ என்பது கடலூர் மக்களின் கேள்வியாக உள்ளது.

மீன் பஞ்சக் குறியீடு: தங்கள் கடலைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நெடுங்காலமாக மேற்கொண்டிருந்த போராட்டங்கள் அத்தனையும் ஒடுக்கப் பட்டன. குச்சிப்பாளையம் போராட்டம், சிமா ஜவுளிப் பூங்காவுக்கு எதிரான போராட்டம் எல்லாமே தோல்வியைத் தழுவின.

நிலத்தடிநீர் உள்ளிட்ட பொதுச் சொத்து வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில்கூட, அண்டைச் சமூகத்தினரின் ஆதரவு கிடைக்கவில்லை. கடற்குடிகள் மீன்பிடி தொழிலைக் கைவிட்டு நகரத்தில் கூலிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது வேலைதேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலரை நகர்ப்புறத்தின் கறிக்கடைகளில் கறி வெட்டுபவர்களாகவும் காணலாம்.

இலஞ்சியத்தின் ஆற்றாமையைப் புரிந்து கொள்வது கடினமல்ல. கடலூரின் கதை, இந்தியக் கடல்களுக்கும் கடற்குடிகளுக்கும் நேர்ந்துவரும் இழப்பின் ஒரு துளி. ஆனால் கணேசனைப் (1981, வானகிரி) போன்றவர்களிடம் நம்பிக்கையின் அடையாளங்களும் தெரிகின்றன.

2019இல் முனைவர் பகத்சிங்குடன் (1990, எண்ணூர்) வானகிரிக்குப் போயிருந்தபோது, தெற்கே அலைவாய்க் கரையில் கடல் பாலம்போலத் தெரிந்த கட்டுமானத்தைக் காண்பித்து, ‘அது எல்லன்டி (லார்சன் அண்ட் டூப்ரோ) அனல்மின் நிலையம்’ என்றார். “அங்கிருந்து மாதத்துக்கு ஒரு முறை கழிவைக் கடலில் வெளியேற்றுவார்கள். அந்த நேரத்தில் கூட்டங்கூட்டமாக மீன்கள் மிதக்கும். அப்படி ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்களைப் பொறுக்கி வந்திருக்கிறோம்.”

15,000 கலன்கள்: 1982இல் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் (UNCLOS) கடல்சார் நாடுகளைத் தொட்டுள்ள கடற்பகுதியில் 200 கடல்மைல் எல்லையை முற்றுரிமைக் கடற்பகுதியாக (Exclusive Economic Zone) அறிவித்தது. அதற்கு முந்தைய காலங்களில் கடல்சார் நாடுகள் ஒவ்வொன்றும் அதனதன் அண்டைக் கடலிலுள்ள மீன் வளங்களை அதிகபட்சம் அறுவடை செய்துகொள்ள முயன்றன.

கீழை நாடுகள் நவீனத் தொழில்நுட்பங்கள் கொண்ட மீன்பிடிக் கப்பல்களை மிகை எண்ணிக்கையில் களமிறக்கி, இழுவைமடிகளை இயக்கி மீன்பிடித்தன. 1970களின் பிற்பகுதியில் ஜப்பான் 15,000 மீன்பிடி கலன்களை இறக்கியிருந்தது; தைவானிடம் 7,000 கலன்கள் இருந்தன. மெக்சிகோவில் 4,000 கலன்கள் இருந்தன. 8100 கி.மீ. கடற்கரையைக் கொண்ட இந்தியாவிடம் அன்றைக்கு இருந்த கலன்கள் வெறும் 78.

மீன் கொள்ளை: தங்கள் நாட்டுக் கடல் பகுதிகளில் மீன்வளம் வற்றிப்போன நிலையில், பன்னாட்டுக் கப்பல்கள் பிற நாட்டுக் கடல்களின் மீன்வளங் களைக் கொள்ளையடித்தன. இந்தியாவின் உரிமைப் பகுதியான இந்தியப் பெருங்கடல் சுறாப்பாரின் மீன் வளங்களை தைவான், கொரிய நாட்டுக் கப்பல்கள் இப்படிச் சூறையாடிக் கொண்டிருந்தன. இரண்டு, மூன்று முறை இந்தியக் காவல்படை தைவானியக் கப்பல்களைச் சிறைப்பிடித்து இந்தியக் கரைக்குக் கொண்டுவந்து, கடுமையாக எச்சரித்து விடுவித்ததாக ஜூன் 30, 1980 மக்களவை விவாதத்தில் அன்றைய வேளாண் அமைச்சர் பிரேந்திர சிங் ராவ் தெரிவித் திருந்தார்.

பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களின் அத்துமீறலைப் பற்றி ஆழ்கடல் விசைப்படகு மீனவர் டிக்சன் (1984, வள்ளவிளை) என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் தனியுரிமைக்கு உள்பட்ட ஆழ்கடல் பகுதிகளில் சீனக் கப்பல்கள் பரிவாரங்களுடன் வருகின்றன. ஒவ்வொரு தாய்க்கப்பலுடனும் 20 மீன்பிடி கப்பல்கள் வரும். பெரிய கப்பலில் ராட்சத விளக்குகளை இரவு முழுக்க எரிய விடுகிறார்கள்.

தூரத்திலிருந்து பார்க்கும்போது விளையாட்டு மைதானம் போலப் பிரகாசமாயிருக்கும். மற்ற கப்பல்கள் பெரும்பாலும் இழுவைமடியை இயக்கி மீனை வாரிக் குவிக்கின்றன. அதில் பெரும்பகுதியும்- ஓங்கில் உள்பட- அவர்களுக்குத் தேவையில்லாதவை. அவற்றை எல்லாம் அப்படியே கடலில் கொட்டிவிடுவார்கள். வலையில் பிடிபடும் மீன்கள் உயிரோடு கடலுக்குத் திரும்ப வாய்ப்பேயில்லை.

(தொடரும்)

- கட்டுரையாளர், பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்; vareeth2021@gmail.com

SCROLL FOR NEXT