‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி' என்கிற ஔவையாரின் பாடல் வரியைக் கேள்விப் பட்டிருந்தாலும், கானமயில் என்கிற பறவையை அறிந்திருக்க மாட்டோம். கானமயில் (Great Indian Bustard) என்பது நமது மயிலைப் போன்ற பறவை அல்ல.
அது புல்வெளிகளில் மட்டுமே வாழக்கூடிய பறவை, இந்தியாவின் எடை மிகுந்த பறவை. அந்தப் பறவை தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்னர்வரை இருந்தது. அதை திருச்சி சமயபுரம் பகுதியில் வேட்டையாடிப் பிடித்தது பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், இன்றைக்கு இந்திய அளவிலேயே 200-க்கும் குறைவான பறவைகளே எஞ்சியுள்ளன. ஆசிய சிவிங்கிப்புலி நம் நாட்டிலேயே வாழ்ந்துவந்தது. தீவிர வேட்டையால் அதை அழித்துவிட்டு, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளை விலைக்கு வாங்கி நம் காடுகளில் விடும் அவலம் இன்றைக்கு நடந்தேறுகிறது.
அதுபோல் புல்வெளிகளைக் கண்மூடித்தனமாக அழித்ததால் கானமயிலைப் பறிகொடுக்கக் காத்திருக்கிறோம். இந்த அரிய பறவை குறித்து பேராசிரியர் த.முருகவேள், அருண் நெடுஞ்செழியன், க.சுபகுணம், ஏ.சண்முகானந்தம் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுச்சிறு நூலாக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு ராஜஸ்தான் தார் பாலைவனப் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் கானமயில்கள் எஞ்சியிருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்கிற அடையாளத்துடன் பரவலாக்கப்படும் காற்றாலைகள், உயர் மின்னழுத்தக் கம்பிகளில் சிக்கி அவை அழிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த அரிய பறவை குறித்த தகவல்களைத் தமிழில் தொகுத்துத் தந்துள்ளது இந்த நூல். இயற்கையின் அடையாளமாகத் திகழும் இன்னும் எத்தனை விஷயங்களை நாம் வாழும் காலத்திலேயே இழக்கப் போகிறோமா, தெரியவில்லை. - அன்பு
கானமயில்: ஓர் அறிமுகம்,
உயிர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 98403 64783