ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வண்ணத்துப்பூச்சிகளையும் அந்திப்பூச்சி (Moth) களையும் கண்டறிய வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். இந்த ஆர்வம் அந்த நாடுகளின் சுற்றுலாத் துறையை வளர்ப்பதிலும், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மெக்சிகோவின் மோனார்க் ரோஸ்ட்.
ஒருபுறம், இந்த அழகிய சிற்றுயிர்களைத் தேடி மனிதக் கூட்டம் குவிகிறது; மறுபுறம், நலத்திட்டங்களின் பெயரில், அவற்றின் வாழிடங்களை அழித்துவரும் செயல்கள் தொடர்ந்து நம் நாட்டில் நிகழ்ந்துவருகின்றன. சுற்றுச்சூழலில் ஒவ்வோர் உயிரினத்திற்கும் இருக்கும் இடத்தை அழிக்கும் இந்தச் செயல்பாடுகள், நமது சூழலியல் தொகுதிகளுக்கே மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.
வண்ணத்துப்பூச்சிகள் வாழ்வதற்காகப் போராடும் இந்தச் சூழ்நிலை, சுற்றுச் சூழலுக்கான தீவிர எச்சரிக்கையாக விளங்குகிறது. ஆனால், அதை உணராமல் செயல்படுவதால், முழுச் சூழலியல் தொகுதியே பாதிக்கப்படும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாப்பது என்பது அவற்றை மட்டும் காப்பாற்றும் முயற்சி அல்ல, அது புவியின் நுணுக்கமான சமநிலையைக் காப்பதற்கான ஒரு முக்கியச் செயல்.
15 கோடி ஆண்டுகளாகப் புதைந்துகிடக்கும் வரலாற்றைக் கொண்ட வண்ணத்துப்பூச்சிகள், அந்திப்பூச்சிகள், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இனங்களை உள்ளடக்கிய மிக மாறுபட்ட உயிரினக் குழுவாக விளங்குகின்றன. அவற்றின் பாதுகாப்பே, இயற்கையின் ஒத்திசைவை நிலைநிறுத்தும் அசைக்க முடியாத அடிப்படை அம்சம்.
ஒவ்வோர் உயிரினமும் உணவுச்சங்கிலியில் தனித்தன்மை வாய்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள், அந்திப்பூச்சிகளின் இருப்பே பறவைகள், வௌவால்கள், பிற பூச்சி உண்ணும் விலங்குகளின் வாழ்வாதாரமாக அமைகிறது. வண்ணத்துப்பூச்சிகள், அந்திப்பூச்சிகள் நிறைந்த பகுதிகள், பிற முதுகெலும்பில்லாத சிற்றுயிர்கள் செழித்து வளரக்கூடிய பசுமைத்தளங்களாக அமைகின்றன. அவை மகரந்தச்சேர்க்கை, இயற்கைப் பூச்சிக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் நன்மைகளை அளிக்கின்றன.
வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உள்பட்ட மூவன் சிவல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அழகு நாச்சியம்மன் கோயில் காடு. இது இயற்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. சுமார் 420 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் காடு, இந்தியத் தொல்குடி மரபில் காணப்படும் மரபார்ந்த கோயில் காடுகளுள் ஒன்று.
இப்பகுதி சுற்றுவட்டார மக்களின் மேய்ச்சல் நிலமாகவும் கால்நடை வளர்ப்புக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. கொன்னை வெள்ளையன், வெண்புள்ளிக் கறுப்பன், ரோசா அழகி, சிவப்புடல் அழகி, பசலைச் சிறகன் உள்ளிட்ட 14 வகையான வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடமாகவும் உள்ளது. இதற்கு மேல், நாடு கடந்து வலசை வரும் (தேசாந்திரித் தட்டான் - Wandering glider) ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் காணப்படுவது, இக்காட்டுப் பகுதியின் உயிர்ப்பன்மைச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
இந்நிலப்பரப்பில், தமிழக அரசு 278 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் 18 கிராம மக்களும் அதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
வரலாற்று அடையாளம்: அழகு நாச்சியம்மன் கோயில் காடு பகுதி புள்ளிப் புறா, பட்டைக் கழுத்து கள்ளிப் புறா, செண்டு வாத்து, கொண்டலாத்தி, ஆசியக் குயில் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவை இனங்களின் வசிப்பிடமாக உள்ளது. தேவாங்கு, மரநாய், காட்டுப்பூனை போன்ற பல பாலூட்டிகள் வாழும் பகுதியாகவும் விளங்குகிறது.
இந்த இடம் இயற்கையின் செழிப்பாக மட்டுமல்ல, வரலாற்று அடையாளமாகவும் திகழ்கிறது. திருமணிமுத்தாறு, பாலாறு ஆற்றுப் படுகைகளுக்கு இடையில் அமைந்துள்ள வஞ்சிநகரம்-கள்ளங்காடு-சிவல்பட்டி பகுதிகள், மூவாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட பெருங்கற்கால சின்னங் களைக் கொண்டுள்ளன. இவற்றில் கல்பதுக் கைகள், கல்திட்டைகள், கல்வெட்டுகள், 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர்களின் சிவன் கோயில் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.
பாதுகாப்பு தேவை: மதுரை இயற்கைப் பண்பாட்டு அறக் கட்டளை, இந்தப் பகுதிகளை ஆய்வு செய்து, பல்லுயிரியத் தரவுகளை ஆவணப் படுத்தியுள்ளது. தமிழகப் பல்லுயிரியச் சட்டத்தின் கீழ் இந்தக் கோயில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும், தொல்லியல் மேட்டைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அறிவித்து அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை முன்வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற பல்லுயிரியச் செறிவு வாய்ந்த இடங்களில் அரசு அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தப் பகுதிக்கே உரிய இயற்கை, வரலாற்று அடையாளங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதைப் பற்றி உரிய முக்கியத்துவம் அளித்துப் பேசாமல் இருப்பது காலங்காலமாகத் தொடரும் பெரும் துயரம். இனிமேலும் இப்படித் தொடரக் கூடாது.
- கட்டுரையாளர், எழுத்தாளர்; amuthajeyaseelan06@gmail.com