பசுமை என்பது மகிழ்ச்சியின் வண்ணம். பச்சை வாசனை என்பது மகிழ்ச்சியின் நறுமணம். நாம் சமைத்தோ பச்சையாகவோ சாப்பிடும் எத்தனையோ கீரைகள், காய்கறிகள் ஆக்சிஜனேற்றிகளாகவும், மன அழுத்தம், பதற்றத்தைக் குறைப்பவையாகவும் இருக்கின்றன.
வேட்டையாடி-உணவு (கிழங்கு, காய், கனிகள்) சேகரித்து வாழ்ந்த காலத்திலிருந்தே நம் வாழ்வுடன் தாவரங்கள் இரண்டறக் கலந்துவிட்டன. இன்றைக்கும் பூர்வகுடிகளின் வாழ்க்கையிலிருந்து தாவரங்கள் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. தாவரங்களை வழிபடும் அவர்கள், இயன்ற வழிகளில் எல்லாம் அவற்றைப் போற்றுகிறார்கள். கோயில் காடுகளையும், புனித மரங்களையும் கொண்டிருக்கிறார்கள்.
பச்சையத்தைக் கொண்டிருக்கும் தாவரங்கள் இன்றி இந்த உலகில் எந்த ஓர் உயிரும் வாழ முடியாது. புலி என்ன புல்லா சாப்பிடுகிறது என்று சிலர் கேள்வி எழுப்பலாம். புலி புல்லைத் தின்பதில்லை. ஆனால், அது சாப்பிடும் மானோ மாடோ தாவரஉண்ணி என்பதை மறந்துவிடக் கூடாது. பூவுலகின் பெரும்பாலான உயிரினங்கள் ஆக்சிஜனை உயிர்மூச்சாகக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு முக்கியமானவை தாவரங்கள்.
அறிவியல் முறைப்படி தாவரங்களை ஆவணப்படுத்தும் வேலையை இந்தியாவில் தொடங்கியவர்கள் ஐரோப்பியர்கள்தான். அதற்கு முன்பே உணவு, மருத்துவக் காரணங்களுக்காகச்சித்த, இயற்கை மருத்துவ முறைகளில் தாவரங்கள் முதன்மை இடத்தைப் பிடித்திருந்துள்ளன. தமிழின் முதன்மை இலக்கண நூலான தொல்காப்பியம் ‘தெய்வம் உணாவே மா மரம் புள்பறை' என்றது. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், பண் (இசை) ஆகிய கருப்பொருள்கள் சமமாகக் கருதப்பட்டன. இப்படி இந்த மண்ணின் முதன்மை அம்சங்களில் ஒன்றாக மரத்தையும் தமிழர் மரபு தூக்கிப்பிடித்துள்ளது.
அந்நிய ஆதிக்கம்: சரி, இன்றைக்கு நம் வாழ்க்கையில் தாவரங்கள் என்ன இடத்தைப் பெற்றுள்ளன? உணவில் தாவரங்களைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. அதேநேரம் அந்த உணவுத் தாவரங்கள் வேதி வேளாண்மையால் குளிப்பாட்டப்பட்டே நம்மிடம் வந்துசேர்கின்றன. அடுத்த கட்டமாகப் பதப்படுத்துதல் முறையில் செயற்கை வேதிப்பொருள்கள் சேர்க்கப்பட்டு, தாவரப் பொருள்கள் நம் உணவுத் தட்டை வந்தடைகின்றன.
தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் மனித மையப் பார்வை நம்மிடம் ஆதிக்கம் செலுத்துவதால், எந்த ஒரு தாவரமும் நமக்குப் பயனளிக்கிறதா என்கிற பூதக்கண்ணாடியைக் கொண்டே பார்க்கிறோம். அப்படி நமக்கு நேரடிப் பயன் தராத தாவரங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஒரு தாவரம் நமக்கு நேரடியாகப் பலன் அளிக்கிறதா, அளிக்கவில்லையா என்பதன் அடிப்படையில் மரங்களையோ தாவரங் களையோ வளர்ப்பது அறிவியல் பார்வைக்கு எதிரானது. உண்மையில் ஒரு தாவரம் நம் மண்ணுக்கு உகந்ததா, இயல்பானதா என்பதன் அடிப்படையிலேயே கவனம் கொடுக்கப்பட வேண்டும். ஆங்கிலேயர் காலத் தோட்டக் கலைத் துறை, இந்தியாவில் அவர் களுடைய தாவரங்களை இறக்குமதி செய்தது.
நாடு விடுதலை பெற்ற பிறகு நம் தோட்டக் கலைத் துறையும் அந்நியத் தாவரங்களையே நகர்ப்புறங்கள், புதிய நகர்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் நட்டது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீக்கமற நிறைந்திருக்கும் மரங்களாகத் தூங்குமூஞ்சி மரம், குல்மோஹர், மஞ்சள் வாகை (Copperpod), வசந்த ராணி (Rosy trumpet flower), நாகலிங்கம், ஆப்பிரிக்க தூலிப் போன்றவை காணப்படுகின்றன.
இந்த மரங்களை நீண்ட கால மாகப் பார்ப்பதாலோ என்னவோ, இவை நமது மரங்கள் என மக்களும் தவறாக நம்பிவிடுகிறார்கள். பொதுவாக மரமெங்கும் மலர்களாக ஆர்ப்பாட்டமாகப் பூக்காத நமது மரங்களுக்கு மத்தியில் வசந்த ராணி, மஞ்சள் வாகை, குல்மோஹர் போன்ற தாவரங்களின் அழகில் நாமும் சட்டென்று மயங்கிவிடுகிறோம்.
இந்த மரங்கள் நம் மண்ணுக்கு அந்நியமானவை என்பதால், இவற்றுக்கு இயற்கை எதிரிகள் குறைவு. அதனால் இந்த மரங்கள் வேகமாக வளர்ந்துவிடுகின்றன. இவற்றால் நமது உயிரினங்களுக்குச் சில வகைகளில் பயன் கிடைத்தாலும், முழுப் பயன் கிடைப்பதாகக் கூற முடியாது. நம் மண்ணுக்கான இயற்கைச் சுழற்சியில் இந்த மரங்களின் பங்கு குறைவு. அது மட்டுமல்லாமல், இந்த மரங்கள் சடசடவெனப் பெரிதாக வளர்ந்தாலும் மண்ணில் ஆழமாக வேர்விடாதவை. அதனால் மழை, புயலில் சட்டென்று முறிந்தோ சாய்ந்தோ விழுந்துவிடுகின்றன.
கவனம் கோரும் இயல்: ஆல்-அரசு-அத்தி, மகிழம், இலுப்பை, மருதம், சரக்கொன்றை, புரசு, வாகை, வாதுமை, கடம்பம் போன்ற நம் மரங்களுக்கான இடம் பெரிய அளவில் கிடைப்பதில்லை. இவற்றில் சில தாவரங்கள் தப்பித்திருந்தாலும், சமூகத்தின் முதன்மை அடையாளமாக அவை கவனம் பெறுவதில்லை. சமீப ஆண்டுகளாக இந்தப் போக்கு சிறிது சிறிதாக மாறிவருகிறது. அதிலும் பனை போன்ற தாவரங்களை வளர்ப்பதில் காணப்படும் தீவிர ஆர்வம், நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய அனைத்துத் தாவரங்களுக்கும் கிடைப்பதில்லை.
மற்றொருபுறம் இயல் தாவரங்கள் சிலவற்றின் அந்தஸ்தை உயர்த்திக்காட்ட, ஊதிப் பெரிதாக்கப்பட்ட சில வாதங்கள் இன்றைக்கு முன்வைக்கப்படுகின்றன. உணவைப் போலவே, மருந்துகளுக்கும் தாவரங்கள் முதன்மை மூலப்பொருள்களாக உள்ளன. அதேநேரம் எந்த ஒரு தனித் தாவரமும் மாயாஜாலத்தைப் போல நம் உடலைச் சரியாக்கிவிடும் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை.
பண்பாட்டுப் பிணைப்பு: இது வசந்த காலம்-தமிழ்த் திணை மரபுப்படி இளவேனில் பருவம். இது இளவேனிலாக இருக்கிறதா, தகிக்கும் வேனிலாக இருக்கிறதா என்பது தனிக்கதை. இந்த இளவேனில் பருவத்தில் பொதுவாக மா, வேம்பு, சரக்கொன்றை உள்ளிட்டவை பூத்துக் குலுங்கும். இவற்றைக் கவனித்திருக்கிறீர்களா? இந்த மரங்களின் அருகிலோ கீழோ சென்று நின்றால் தேனீக்கள், வண்டுகள் மலர்களை மொய்ப்பதைப் பார்க்கலாம். பூத்துக்குலுங்கும் பூக்களிலிருந்து பூந்தேனின் நறுமணத்தையும் உணரலாம். முதிர்ந்த இலைகளை உதிர்த்து, பச்சிளம் புத்திலைகளைப் பெரும்பாலான அரச மரங்கள் துளிர்க்கும் காலமும் இதுதான்.
சித்திரை, தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது வேப்பம்பூ ரசம் வைப்பது, மாங்காய் பச்சடி வைப்பது எனக் காலத்துடனும் பண்பாட்டுடனும் நமது தாவரங்கள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியத் திருநாளன்றும்கூட ஆர்டர் செய்து சாப்பிடும் உணவு வகைகளில் இதுபோன்று மரபின் தொடர்ச்சியையோ, தாவரங்களுடனான பிணைப்பையோ பார்க்க முடியாது.
ஆனால், அந்தத் தொடர்பற்ற நிலையை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோமோ என்கிற அச்சம் எழுகிறது. பண்பாட்டு, சுற்றுச்சூழல் வேர்களை வேகமாக இழந்துவரும் நாம், நமது தாவர வளங்களை முற்றிலும் மறந்துவிடுவதோ, இழந்துவிடுவதோ எவ்வளவு பெரிய துயரம்.
(அடுத்த அத்தியாயம்: தங்க மழை)
- valliappan.k@hindutamil.co.in