மன்னார் கடலின் சூழலியல் சுமையாக, அதன் தாங்குதிறனை மிஞ்சிய விசைப்படகு எண்ணிக்கை, அதிக குதிரைத் திறன் கொண்ட, கட்டற்ற - தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் போன்றவை இருக்கின்றன. ராமேசுவரத்தின் பூர்வகுடி மீனவர்கள் இன்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையே சார்ந்திருக்கிறார்கள்.
விசைப்படகு முதலீட்டாளர்கள் 1970களில் தீவுக்கு வந்தவர்கள். முன்பு குறிப்பிட்டதுபோல, இலங்கை உள்நாட்டுப் போர் நிகழ்ந்த 1983-2009 காலக்கட்டத்தில்தான் இப்பகுதியில் விசைப்படகுத் தொழிலில் மிகை முதலீடும் கட்டற்ற மீன்பிடிமுறைகளும் வளர்ந்தன.
ராமேசுவரம் விசைப்படகுத் தொழில் இன்று தீவைச் சாராத இனத்தவர்களின் கையில் இருக்கிறது. மன்னார் கடலின் வளமும் வற்றிவிட்டது. வட இலங்கைத் தமிழ் மீனவர்களும் தென் தமிழகப் பாரம்பரிய மீனவர்களும் விசைப்படகு முதலீட்டாளர்களும் தீர்வு அறியாமல் திணறி நிற்கின்றனர்.
கன்னியாகுமரிக் கடல்: கன்னியாகுமரிக் கடலை அம்மாவட்டத் திலுள்ள இழுவைமடி விசைப்படகுகள் வழித்து எடுத்துக்கொண்டிருக்கின்றன. சுனாமிக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு களின் ஆழ்கடல் மீன்பிடித்தல் அதிகரித்தது. தூத்தூர் மீனவர்கள் 30, 40 நாள்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கிறார்கள். அது தூண்டில் மீன்பிடித்தல்தான்.
‘குளச்சல், கன்னியாகுமரிப் படகுகள் ஆழம் மிகுந்த இடங்களில் இழுவைமடி இழுக்கத் தொடங்கியிருப்பது கரைக்கடலில் எஞ்சியிருக்கும் மீன்வளத்தையும் முற்றாக அழித்துவிடும்’ என்கிறார் சேசையா (குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர்). ‘மன்னார்க் கடலின் நிலைமை சீக்கிரமாக இங்கும் உருவாகிவிடும்’ என்கிறார் முன்னாள் மீன்பிடி கப்பல் தலைமை மாலுமி மெல்கியாஸ் (கோடிமுனை).
பாக் நீரிணை: கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரையுள்ள, தமிழகத்தின் 5 மாவட்டங்களை உள்ளடக்கிய, 250 கி.மீ. கடற்கரையைத் தழுவிக் கிடக்கிறது பாக் நீரிணை. நிலத்தால் சூழப்பட்ட இந்தக் குடா, வடக்கே வங்காள விரிகுடாவுடனும் தெற்கே மன்னார் வளைகுடாவுடனும் இணைந்து கிடக்கிறது. இந்தக் கடலின் அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்.
ஒரு குளம் போன்ற இதன் தனித்துவமான அமைவிடம் காரணமாக, வட, தென் பகுதிகளி லிருந்து ஏராளமாக அடித்துவரப்பட்டு, இங்கு படியும் சேறு-சகதியானது, உயிர்ச் சத்துகளைப் பெருக்கி, இக்கடலை வளப்படுத்துகிறது.
பல சிற்றாறுகளும் இப்பகுதியில் கலக்கின்றன. குறைந்த ஆழம் காரணமாகத் தரைவரை போதுமான வெளிச்சம் கிடைக்கிறது. சைமோ டோசியா போன்ற கடற்புற்கள், கடற்பாசிகள் உள்ளிட்ட 143 தாவர இனங்கள், 580 மீன் இனங்கள், 11 வகையான பாலூட்டி இனங்கள் என்பதாக, 3,281 வகையான உயிரினங்களின் வாழிடமாக விளங்குகிறது பாக் நீரிணை.
பாக் நீரிணை நான்கு வகை சூழலியல் கட்டமைவுகளின் அற்புதமான கலவை- சதுப்புநிலம், கடற்புல் படுகைகள், பவளத் திட்டுகள், அலையாத்திக் காடுகள். பாக் கடலை மீனவர் சுப்பிரமணியன் (தொண்டி) இப்படி விவரிக்கிறார்: “கோடியக்கரையிலிருந்து ராமேஸ்வரம் தீவு வரை இருக்கிற கடக்கர அமைப்பு (பாக் நீரிணை) அழகானது: கரையில பொட்டல், அதுக்கு மேல புல்லு (கடற்கோரைகள்), அதுக்கு மேல ஜல்லி, அதுக்கு மேல மண்ணு, அதுக்கு மேல சகதி (சேறு)- இந்த நாலு அமைப்பும் நம்ம வங்காள விரிகுடாவுலதான் இருக்கு... இதுதான் மீன் உற்பத்தியப் பெருக்குது.”
தஞ்சாவூர்- புதுக்கோட்டை கரைக்கடல் பகுதிகளில் 12,250 ஹெக்டேர் பரப்பில் கடற்புல் படுகைகள் உள்ளன. திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடற்கரைகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள், 16 அலையாத்தித் தாவர இனங்களைக் கொண்டவை.
இக்காடுகள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கும், இரை தேடலுக்குமான இடங்களாகவும், 156 உள்ளூர், வலசைப் பறவையினங்களின் புகலிடமாகவும் உள்ளன. அதோடு, கரைக்கடலை வளப்படுத்தவும் செய்கின்றன. மன்னார் குடாவுக்கு இணையான மீன்வள முக்கியத்துவம் கொண்டது பாக் குடா.
ஆவுளியா: இந்தியக் கடல்களில் ஆவுளியா (Dugong dugon) எனப்படும் பாலூட்டி இனம் வாழும் மூன்று இடங்களில் ஒன்று பாக் நீரிணை. பாக் குடாவின் வட விளிம்பான கோடியக்கரையிலும், தென் விளிம்பான தனுஷ்கோடியிலும் 20,000த்துக்கு மேற்பட்ட வலசை, உள்ளூர்ப் பறவைகள் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. அதற்கு இணக்கமான பல்லுயிர்ச் செறிவு இப்பகுதிகளில் உள்ளது. 2022இல் பாக் நீரிணையில் குறிப்பிட்ட 448 சதுர கிலோமீட்டர் பரப்பினை ஆவுளியா காப்பகப் பகுதியாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலிகீட் கடற்புழு: பாக் குடா கடற்கரைப் பகுதியில் இயங்கிவரும் உவர்நீர் இறால் பண்ணைகள் லிடோபெனேயஸ் வானமி என்கிற வெளிநாட்டு இறால் குஞ்சுகளை வளர்க்கின்றன. அப் பண்ணைகளில் வளர்ப்பு இறாலுக்கு இரையாக பாலிகீட் கடற்புழுக்களைத் திருட்டுத்தனமாகச் சேகரிக்கின்றனர். கடல் ஏற்ற-வற்றப் பகுதியின் (intertidal water) உணவுச் சங்கிலியில் பாலிகீட் புழுக்களுக்கு முக்கியமான இடமுண்டு.
வலசைப் பறவைகளுக்கு இரையாகவும் மீன்வளத்தைப் பெருக்கும் உயிரின வளமாகவும் இருந்துவரும் இந்த பாலிகீட் புழுக்களைப்பண்ணையில் வளரும் இறால்களுக்கான இரையாகச் சேகரித்துச் செல்கின்றனர். இதனால் மீன்வளம் குறைகிறது என்று உள்ளூர் மீனவர்கள் பலமுறை அரசிடம் புகார் அளித்து ஓய்ந்து போயினர்; நாளிதழ்கள், வார இதழ்கள் இது குறித்து விரிவாக எழுதின. ஆனால், அரசுத் துறைகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
சுருக்குமடி: ‘சுருக்கு மடி முதன்முதலில் அறிமுகமான போது அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமலே இயக்கினார்கள்’ என்கிறார், முன்னாள் காப்டன் மைக்கேல் லூயிஸ் (1959, பெரியதாழை): “1981இல் ‘மத்சிய ஹரிணி’ (Matsya Harini) கப்பலில் அந்தப் பேராசையின் விளைவை நான் நேரில் பார்த்து அதிர்ந்துபோனேன்.
இரண்டே இரண்டு சுருக்கு வலைகளில் எட்டு டன் மீன்கள். மொத்தத்தையும் கரைக்குக் கொண்டு வருகிற காப்டனின் வெறியினால் மூன்று அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பலி கொடுக்கப்பட்டது.
கடலைப் புரிந்துகொள்ளாத மனிதர்களின் பேராசையின் விலை மூன்று உயிர்கள். இந்த வெறி மீன்பிடி தொழில் எங்கும் பரவிவிட்டது. ஆட்டர் ட்ரால் (Otter Trawl), பீம் ட்ரால் (Beam Trawl), ஸ்டெர்ன் ட்ரால் (Stern Trawl) போன்ற தொழில்நுட்பங்களால் கடல் தரையை நாசப்படுத்தி விட்டார்கள்.
வகைவகையான மீன்களெல்லாம் காணாமல் போய்விட்டன. யானைத் திருக்கையைக் காணோம், மாங்காய்ச் சாளையைக் காணோம். நிறைய வகை நண்டுகளெல்லாம் காணாமல் போய்விட்டன...” கைப்பாணிக்குப்பம் கோதண்டபாணியின் (1944) கருத்தும் இதையே வழிமொழிகிறது - “அவன் ஒரு மீனுக்கோசரம் வளைப்பான்.
ஆனா சேத்துக்குள்ள இருக்கற மொத்த ஜீவராசியும் அதில மாட்டி, நாசமாப் போயிடும். அப்புறமா மீனு எங்கேருந்து உற்பத்தியாவறது?.. காலங்காலமா புடிக்க வேண்டிய எறாவ ஒரே நாள்ல புடிச்சிர்றாம். ஒரு எடத்தில ஒரு லச்சம் மீனுங்க இருக்குன்னா, வேற எந்த வல போட்டாலும் மிஞ்சிப்போனா ஒரு இருவதாயிரம் மாட்டும், மிச்சம் தப்பிச்சுப் போயிரும். சுருக்கு வலைன்னா, ஒரு லச்சம் மீனும் மாட்டிக்கும், அதோட கீழ சேத்துல இருக்கற குஞ்சுகளும் முட்டைகளும் நாசமாயிடும்.”
(தொடரும்)
- கட்டுரையாளர், பேராசிரியர், கடல் சூழலியல் ஆய்வாளர்; vareeth2021@gmail.com