உயிர் மூச்சு

சென்னை எறும்புகளுக்கு ஒரு களக் கையேடு

செய்திப்பிரிவு

நாம் அனைவரும் எளிதில், எங்கெங்கும் காணக்கூடிய சிற்றுயிர்கள் எறும்புகள். உணவு இருக்கும் இடம் தேடிப் படைவீரர்கள் போல வரிசையில் அணிவகுத்துச் செல்லும் எறும்புகளை எல்லா இடத்திலும் பார்த்திருக்கலாம்.

இவற்றில் கடிக்காத பிள்ளையார் எறும்பு, சுருக்கெனக் கடிக்கும் சிவப்பு எறும்பில் சின்னது, பெரியது, கட்டெறும்பு போன்ற சில வகைகளையே நாம் அறிந்திருப்போம். அதேநேரம் சென்னையில் மட்டும் 34 வகையான எறும்புகள் இருப்பதாகச் சொல்கிறது 'சென்னையின் எறும்புகள் (Ants of Chennai)' எனும் இருமொழிக் கையேடு.

சென்னையின் இயற்கை அம்சங்கள் குறித்துப் பல்வேறு வழிகாட்டல்களை வெளியிட்டுள்ள பல்லுயிர் அறக்கட்டளையே இந்தக் களக் கையேட்டையும் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல் இரண்டு மொழிகளில் தரப்பட்டிருப்பது முக்கியமானது. அதேநேரம் தமிழ் மொழிநடை இன்னும் மேம்பட்டதாக இருந்திருக்கலாம். அழகான படங்கள், ஓவியங்களுடன் நேர்த்தியாக நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எறும்புகளின் உடல் அமைப்பு, அளவு, வாழிடம், அது விரும்பி உண்ணும் உணவு எனப் பல்வேறு அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. எறும்பின் வாழ்க்கைச் சுழற்சி, வேதித் தொடர்பு கொள்ளும் முறை, வரிசையாகச் செல்வது, கூடு கட்டுவது எனப் பல விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. எறும்புகள் பல லட்சம் ஆண்டுகளாக பூச்சிகளை வளர்த்துவருவதையும், விவசாயம் செய்வதையும் அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அதேபோல் எறும்பைப் போன்றே தோற்றமுள்ள சிலந்திகள், வண்டுகள், கும்பிடுபூச்சிகள் போன்றவையும் ஆச்சரியப்படுத்துகின்றன. - அன்பு

சென்னையின் எறும்புகள்
(Ants of Chennai),
பல்லுயிர் அறக்கட்டளை,
தொடர்புக்கு: https://surl.li/sflqxh

SCROLL FOR NEXT