கோவளம் முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஜனவரி மாதத்தில் 1,328 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாகவும், ஆமைகள் அழிவைத் தடுக்க வனத் துறை, மீன்வளத் துறையோடு இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி பிப்ரவரி மாதம் கூறியிருந்தார். பங்குனி ஆமை என அழைக்கப்படும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முதல் அட்டவணையில் பாதுகாக்க வேண்டிய உயிரினமாகும்.
கடல் சூழலியலைப் பாதுகாப்பதில் ஆமைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குஞ்சு மீன்களை உணவாகக் கொள்ளும் சொறி (ஜெல்லி) மீன்களையும், பவளத்திட்டுகளில் உள்ள பாசிகளையும் பங்குனி ஆமைகள் உண்பதால், அவற்றைக் கட்டுக்குள் வைப்பதற்கும் கடல்வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியைச் சமநிலைப்படுத்துவதற்கும் இவை பெரு மளவில் உதவுகின்றன. பவளத்திட்டுகளை ஆக்கிரமிக்கும் கடற்புற்களை ஆமைகள் உண்பதால், இவை பவளத்திட்டுகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்றன.
பசுமைத் தீர்ப்பாயம்: ஓர் ஆண்டுக்குச் சுமார் 7,000 கி.மீ. வரை கடலில் பயணிக்கும் பங்குனி ஆமைகள், ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டுக் கடற்கரைகளை வந்தடையும். இனப்பெருக்கக் காலத்தில் பெரும் எண்ணிக்கையில், கொத்துத் கொத்தாக ஆமைகள் உயிரிழப்பது தமிழகக் கடற்கரையில் இதுவரை நடந்திராத ஒன்று. இது குறித்துத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. “இனப்பெருக்கக் காலத்தில் ஆமைகள் வரும் பகுதிகளில் விசைப்படகுகளை இயக்கத் தடை விதிக்க வேண்டும்.
விதிமீறலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆமைகள் இறப்பைத் தடுக்க மீன்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தமிழக அரசின் தலைமைச் செயலர் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். ஆமைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து இன்னும் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்” என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆமைகளின் அழிவுக்கு மீனவர்கள் மட்டுமே முழுக்காரணம் என்கிற குற்றச் சாட்டின் அடிப்படையில் மீன்பிடித்தலைத் தடைசெய்வது சரியான அணுகுமுறை இல்லை. இது பாரம்பரிய மீனவர்களைக் கடற்கரையிலிருந்தும், மீன்பிடி தொழி லிருந்தும் அப்புறப்படுத்தும் முயற்சியாகும்.
மீனவர்களின் வலைகளிலும், படகு இயந்திரங்களின் அடித்திருகுகளிலும் ஆமைகள் சிக்குவதுண்டு. என்றாலும் அவை மட்டுமே ஆமைகள் இறப்புக்குக் காரணம் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆமைகளின் அழிவுக்கான பல காரணங்களில் நவீன மீன்பிடித்தலும் ஒரு காரணம். ஆனால், மீனவர்களையும் மீன்பிடித்தலையும் மட்டுமே இந்தக் குற்றத்துக்குக் காரணமாகச் சொல்வது கடல் வளங்களை அழிப்பவர்கள் மீனவர்கள் மட்டுமே என்பதுபோல் சித்திரிக்கிறது.
இன்றைய நிதர்சன நிலை: தமிழகத்தின் 1,076 கி.மீ நீளக் கடற்கரையில் ஒவ்வொரு 5 கி.மீ. இடைவெளியிலும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. துறை முகங்கள், அரிய மணல் எடுக்கும் ஆலைகள், சுற்றுலாத்தலங்கள், அணுஉலைகள், செயற்கைக்கோள் ஏவுதளங்கள், பெரும் வணிகக் கப்பலிலிருந்து வெளியேற்றப்படும் நிலைப்படுத்தும் நீர் (Ballest water), கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தாதுமணல் ஆலைகள், அனல்மின் நிலையங்கள், இறால் பண்ணைகள், மீன்பிடி இறங்குதளங்கள், கேளிக்கைவிடுதிகள், ஆன்மிகத் தலங்கள், மக்களின் குடியிருப்புகள் என்று கடற்கரை முழுவதுமே, வளர்ச்சித் திட்டங்களால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன.
அரசின் நீலக்கொடித் திட்டம், நீலப்புரட்சி, சாகர்மாலா என்று பல திட்டங்கள் கடலையும், கடற்கரைகளையும் மையப்படுத்தியே திட்டமிடப்படுகின்றன. பெண் ஆமைகள் தாங்கள் பிறந்த அதே கடற்கரைப் பகுதிக்குச் சுமார் 12 முதல் 30 ஆண்டுகள் கழித்து வந்து முட்டையிடும். புவியின் காந்தப்புலம், கடல் நீரோட்டங்களை உணர்ந்து தாங்கள் பிறந்த இடத்திற்கு வரும் அரிய உயிரினம் கடல் ஆமைகள்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாம் பிறந்த கடற்கரைக்கு ஆமைகள் வரும்போது, அதே கடற்கரை இன்றைக்கும் உள்ளதா? கடந்த 50 ஆண்டுகளில் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள துறைமுகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தூண்டில் வளைவுகள், தடுப்புச்சுவர்கள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடும் கடற்கரைச் சுற்றுலாத்தலங்கள், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை எல்லாம், இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகளுக்கு ஏமாற்றத்தையும், மன அழுத்தத்தையும் கொடுக்கின்றன.
சுவாசமும் தடைகளும்: ஆமைகளின் கடற்பயணம் என்பது உள்ளுணர்வால் நடைபெறுவது. புவி காந்தப்புலமும் அவற்றின் உள்ளுணர்வும் இணைந்து, மீண்டும் தான் பிறந்த அதே மணற்பாங்கான இடத்திற்கு வரும்போது, அவை அனைத்தும் கட்டிடங்களாலும் பெரும் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆமைகள் நீண்ட தூரம் கடலில் பயணிக்கக் கடல் நீரோட்டங்கள் துணைபுரிகின்றன.
அவை கடலுக்கு அடியில் 40-45 நிமிடங்களுக்கு மூச்சை அடக்கிக் கொண்டிருக்கும். அதற்குப் பிறகு கடலின் மேற்பரப்புக்கு வந்து சுவாசித்துவிட்டு மீண்டும் ஆழத்திற்குச் செல்லும். இப்படிப் பயணிப்பதற்குக் கடல் நீரோட்டம் சீராக அமைய வேண்டும். கடல் நீரோட்டங்கள் மாறும்போது ஆமைகள் சோர்வடைகின்றன, அவற்றால் கடல் நீரோட்டங்களை எதிர்த்து அதிக நேரம் பயணிக்க முடியாது. இதனால் நீண்ட தூரம் பயணிக்க ஆமைகளால் முடிவதில்லை. இறுதியில் ரத்த ஓட்டம் குறைந்து அவை இறந்து கடலில் மிதக்கலாம்.
கடலின் குறுக்கே கட்டப்படும் தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள், அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறங்குதளங்கள், அணுஉலைகளுக்காக அமைக்கப்படும் தடுப்புச் சுவர்கள் உள்ளிட்டவை கடலின் நீரோட்டத்தை மாற்றுகின்றன. கடலில் அமைக்கப்படுகின்ற கடல் காற்றாலைகள், கடலுக்கு அடியில் அமைக்கப்படும் கேபிள்கள், கடலில் வரும் கப்பல்கள் ஆகிய அனைத்தும் கடலின் நீரோட்டங்களை மாற்றி அமைக்கின்றன. இதனால் ஆமைகள் சோர்வடைந்து ரத்த ஓட்டம் குறைந்து செத்து மடியலாம்.
குப்பைத்தொட்டி கடல்: உலகின் மிகப் பெரும் குப்பைத்தொட்டி கடல் என்கிற நினைப்பில் அனைத்துக் கழிவையும் கடலில் கொட்டுகிறோம். இதில் ஞெகிழிக் கழிவுகள் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால் பல ஆமைகள் இறக்கின்றன.
நாம் பொருள்களை வாங்கும்போது பயன்படுத்தும் ஞெகிழிப் பைகள் கடலுக்கு அடியில் ஆமைகளை மூச்சுத் திணறடித்துக் கொல்கின்றன என்கிற உண்மையை எப்போது உணரப் போகிறோம்? காலநிலை மாற்றத்தால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாகப் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
இதனால் குறிப்பிட்ட காலங்களில் கடல் நீரின் வெப்பநிலை வெகுவாகக் குறையும் போது கடல் ஆமைகளால் வெப்பமான நீரோட்டத்திற்கு விரைந்து செல்ல முடியாது. குறைந்த வெப்பநிலையால் ஆமைகள் சோர்வுக்குள்ளாகி, ரத்த ஓட்டம் குறைந்து மூச்சுத் திணறி இறக்க வாய்ப்பு உள்ளது. இப்படியாக ஆமைகளுக்குக் கடற்கரை சொந்தமில்லை என்கிற நிலையைப் பெரும் வணிக நிறுவனங்களும் அரசும் உருவாக்கிவிட்டன.
கடலில் வாழ முடியாத மன அழுத்தம், சூழலியல் சீர்கேடுகளால் ஆமைகள் மூச்சுத்திணறிச் சாகின்றன. கடற்கரை மணல் ஆக்கிரமிப்பு, கடல் நீரோட்ட மாறுபாடு, காலநிலை மாற்றம், புவி வெப்பம், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்டவற்றால் ஆமைகள் இறக்கின்றன. எனவே, ஆமைகளைப் பாதுகாப்பதற்கு மீனவர்களை மட்டும் குற்றஞ்சாட்டாமல், மற்ற காரணங்களையும் தீவிரமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- தொடர்புக்கு: sagesh2000@gmail.com