ஈரோட்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரும் ‘புதுமலர்’ காலாண்டிதழின் 2025 ஜனவரி பதிப்பு, சூழலியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தமிழ்ச் சிற்றிதழ்கள் சுற்றுச்சூழல் சார்ந்த கூடுதல் கவனம் செலுத்துவதன் வெளிப்பாடு இது. பாமயன், கோவை சதாசிவம், சுப. உதயகுமாரன், பேராசிரியர் த. செயராமன், ஆதி, நிழல்வண்ணன், சரவணன், மு.வசந்தகுமார், 'பஞ்சுமிட்டாய்' பிரபு ஆகியோர் செறிவுமிக்கக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். புவியால் அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்; ஆனால் ஒரே ஒருவரின் பேராசையைக்கூட அதனால் நிறைவேற்ற இயலாது.
சுற்றுச்சூழலைப் பேணுவதில் கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த இக்கருத்து, இன்றைக்கும் பொருத்தமாக உள்ளதையும் உலகம் முழுவதும் உள்ள தொல்குடிகளின் வாழ்க்கைமுறைச் சிந்தனைகளோடு அது ஒத்துப்போவதையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், உலகமே எதிர்கொண்டுள்ள சுற்றுச்சூழல் சார்ந்த நெருக்கடிகளுக்கும் சமூகம் இயற்கையோடு இயைந்து வாழ்வதே தீர்வாக இருக்க முடியும் என்பதைக் கட்டுரையாளர்கள் அனைவருமே தத்தம் துறை சார்ந்த புரிதலுடன் வலியுறுத்துகின்றனர்.
மனித உரிமை மீட்பராகப் போற்றப்படும் வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் ‘புதுமலர்’ ஆசிரியர் கண.குறிஞ்சி எடுத்துள்ள நேர்காணல் இந்த இதழின் கூடுதல் சிறப்பு. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பழங்குடி மக்கள் அதிரடிப்படையால் தாக்கப்பட்டது குறித்த வழக்கு, கோவை குண்டுவெடிப்பு வழக்கு, மதுரை மேலவளவு ஊராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் உள்பட 6 பேர் ஆதிக்கச் சாதியினரால் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்த வழக்கு உள்ளிட்ட வழக்கு களை இவர் நடத்தி வெற்றி பெற்ற அனுபவங்கள் இதில் பகிரப்பட்டுள்ளன.
புதுமலர்-சூழலியல் சிறப்பிதழ்,
சனவரி-மார்ச்சு 2025, ஆசிரியர்: கண.குறிஞ்சி, தொடர்புக்கு: 94433 07681