‘போலார்’ ப்ரீத் - சாதனை

By திலகா

தென் துருவமான அண்டார்க்டிகாவில் எந்த உதவியும் இன்றி, தனியாளாக, நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார் ஹரிப்ரீத் சாண்டி. இதன் மூலம் தென் துருவத்தில் தனியாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார்!

இங்கிலாந்தில் பிறந்த ப்ரீத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே டென்னிஸ் மீது ஆர்வம் வந்துவிட்டது. செக்கோஸ்லோவாகியாவுக்குச் சென்றபோது, தொழில்முறை டென்னிஸ் வீரர் ஒருவரிடம் முறையாகப் பயிற்சியை எடுத்துக்கொண்டார். மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பியபோது, டென்னிஸிலிருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. மாரத்தான் ஓட்டப் பந்தயங்கள் மீது ஆர்வம் வந்து, பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார். மலையேற்றங்களை மேற்கொண்டார்.

19 வயதில் இங்கிலாந்து ராணுவத்தில் தன்னார்வலராகச் சேர்ந்து, பணியாற்றினார். படிப்பை முடித்து 27 வயதில் ராணுவ மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். ஐக்கிய நாடுகளின் சபைக்காக ஆறு மாதங்கள் நேபாளம், கென்யா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பணியாற்றினார்.

சாகசங்களின் மீது ஆர்வம்கொண்ட ப்ரீத்துக்கு, அண்டார்க்டிகாவில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. 1821ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜான் டேவிஸ் முதல் முறை அண்டார்க்டிகாவுக்குச் சென்றார். 114 ஆண்டுகளுக்குப் பிறகு டேனிஷ்-நார்வேயைச் சேர்ந்த கரோலின் மிக்கில்சென் என்பவர் அண்டார்க்டிகாவில் கால்பதித்தார். இதன் மூலம் அண்டார்க்டிகாவுக்குச் சென்ற முதல் பெண் என்கிற சாதனையைப் படைத்தார்! அதற்கு 59 ஆண்டுகளுக்குப் பிறகு, நார்வேயைச் சேர்ந்த லிவ் அர்னெசென் என்கிற பெண் தனியாளாக 50 நாள்கள் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டார்! அதற்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரீத் சாண்டி என்கிற தெற்கு ஆசியப் பெண் முதல் முறை தென் துருவப் பயணத்தை மேற்கொண்டார்!

இரண்டு ஆண்டுகள் தென் துருவப் பயணத்துக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டார். உடலையும் உள்ளத்தையும் தயார் செய்துகொண்டார். ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் பனிச்சறுக்கு வண்டியை இழுத்துக்கொண்டு நடக்கும்போது எடை குறைந்துவிடும். அதனால் எடையைச் சற்று அதிகரித்துக்கொண்டுதான் கிளம்ப வேண்டும்.

2021, நவம்பர் 7 அன்று அண்டார்க்டிகாவின் ஹெர்குலிஸ் இன்லெட் பகுதியிலிருந்து தனியாளாகப் பயணத்தை மேற்கொண்டார். 48 நாள்களுக்கான உணவு, உடை உள்பட அத்தியாவசியமான பொருள்கள் கொண்ட 90 கிலோ எடையைப் பனிச்சறுக்கு வண்டியில் வைத்துக்கொண்டு கிளம்பினார். தான் செல்லும் இடங்களைப் பற்றிய விவரங்களை குரல் மூலம் பதிவு செய்துகொண்டார்.

“தனியாக இந்தப் பனிப் பாலைவனத்தில் பயணம் செய்வது கடினமாக இருக்கும். மிகவும் சோர்வடையும்போது நண்பர்களைத் தொடர்புகொள்வேன். அவர்களின் உத்வேகம் அளிக்கக்கூடிய பேச்சைக் கேட்டால் எனக்கும் உற்சாகமாகிவிடும். அதேபோலத்தான் பயணத்தை நிறைவு செய்ய 27 கி.மீ. தூரத்தில் இருந்தபோது தொடர்புகொண்டேன். அப்போதே நான் சாதனை படைத்துவிட்டதுபோல் உற்சாகப்படுத்தினார்கள். என் பயணம் இன்னும் வேகமானது” என்கிறார் ப்ரீத் சாண்டி.

48 நாள்களில் அடைய வேண்டிய இலக்கை 40 நாள்கள், 7 மணி நேரத்தில் கடந்து, தென் துருவத்தை அடைந்த மூன்றாவது பெண் என்கிற சாதனையைப் படைத்தார் சாண்டி.

அண்டார்க்டிகா மீண்டும் இருகரம் நீட்டி ப்ரீத் சாண்டியை அழைத்துக்கொண்டிருந்தது. அடுத்த பயணத்தைத் தனியாகவும் எந்தவித உதவியும் இல்லாமலும் மேற்கொள்ள முடிவெடுத்தார். 2022 நவம்பரில் பயணத்தை ஆரம்பித்தார். மிகப் பெரிய ரீடி பனிப்பாறையை (Reedy Glacier) 75 நாள்களில் அடைய வேண்டும் என்கிற இலக்கோடு சென்றார். ஆங்காங்கே தன் அனுபவங்களை, வலைப்பூவில் பதிவு செய்தார். 1,397 கி.மீ. தூரத்தை 68 நாள்களில் கடந்து, மீண்டும் ஒரு சாதனையைப் படைத்தார்! எந்த உதவியும் இன்றி, தனியாளாக நீண்ட பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்கிற சாதனையை, 34 வயதில் தன்வசப்படுத்திக்கொண்டார் ப்ரீத் சாண்டி.

“எங்கிருந்து வருகிறோம், எங்கிருந்து ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். நாடு, இனம், நிறம் என்றெல்லாம் சாதனைக்குப் பின்னால் தேடாதீர்கள். அதைத்தான் என்னுடைய பயணங்கள் மூலம் உலகத்துக்குச் சொல்ல விரும்புகிறேன்” என்கிறார் இந்த போலார் ப்ரீத்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 mins ago

சுற்றுச்சூழல்

19 mins ago

இந்தியா

50 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்